பிழையும்
பொறுத்தருளுவாய்
இறைவன் மீது காதல் கொள்வோர் பலர். சிலர் கசிந்து உருகுவார். அச்சிலருள்
கசிதலோடு
கண்ணீரும் மல்குவோர் மிகச் சிலர். அப்படி உவப்பன கூறி ஓதுவோர் சிலரே.
அவ்வாறு தம் உள்ளத்தை திறந்து தாம் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளை
இறைவன்
முன் கூறி பிழைகளை பொறுத்து அருளுமாறு வேண்டுவோர் வெகுச் சிலரே.
தம்மை உணர்ந்து, தன் பிழையை உணர்ந்து அவற்றை அகற்றிடும் உள்ளம்
பேருள்ளம். அருள் உள்ளம்.
அத்தகைய உள்ளம் கொண்டவர் பட்டினத்தார். அவர், காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பர
நாதர்
முன் நின்று தம்பிழை கூறி பொறுத்தருள வேண்டுகிறார்.
"கச்சியேகம்பனே ! உன் பெருமைகளைக் கல்லாத பிழை; பெருமைக்குரிய உன்னை
கருதாத பிழை; கருதியப் பின் கசிந்து உருகாத பிழை; உன் திருவடிகளை நினைந்து
போற்றா பிழை ; உனக்குரிய ஐந்தெழுத்தை ஓதாத பிழை; எப்பொழுதும் உன்னையே
துதிக்காத எல்லா பிழைகளையும் பொறுத்தருள வேண்டுகிறார்.
"கல்லாத பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தும்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும்
தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !
இது போல,
'இரட்சிய யாத்திரிகம் ' பாடிய ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை இயேசுவைத்
தொழுது
ஒரு பாடல் பாடுகிறார். அதில் " பின்னித்திகழ் என் பிழை அத்தனையும்
மன்னித்து அருள்தல்
வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.
"பின்னித் திகழ் என் பிழை அத்தனையும்
மன்னித்து இலகும்படி வாழ்வு அருள்வாய் !
நன்னித்திலம் ஒத்த நகைத்துவர்வாய்
கன்னித் திலகம்தரு காண் மிளையே ! - என்கிறார்.
[இங்கு நான் வியந்து நின்ற பாடல் ஒற்றுமை. ஆன்றோர்கள்,
சான்றோர்களின் மன ஒற்றுமை.]
அப்படியானால், பிழைகள் ஒன்றோடு ஒன்று பின்னிவரும் என்பதாகிறது.
ஆம் ! ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒருமுறை செய்துவிடுகிற பிழை
பல பிழைகளுக்கு வித்திடும் !
இதில் நமது பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டி விடைபெறுவது,
அடியேன்,
கிருஷ்ணன் |