முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்







 

 
 
மரணம்,
மறுவாழ்வின் ஆரம்பம்!


க. நவம்

'இந்த உனது வெள்ளைக் கல்லறையின் மேல்
உயிர்ப்புடன் கூடிய பூக்களும்
அதே வெண்ணிறத்தில் தான்...
நீயில்லாமற் போயின எத்தனை ஆண்டுகள்....
எத்தனை மாந்தர்கள் எமை விட்டு நீங்கினர்?

இந்த உனது வெள்ளைக் கல்லறையின் மேல்
பல வருடங்கள் மூடியபடி
ஒரு சாவைப் போல,
சுழலதிர்வு காற்றில் எழுகிறது.
இதையும்
ஒரு சாவைப் போலப் புரிய முடியாதுதான்!

இவற்றிற்கெல்லாம் மேலாய் உன் வெண்சமாதி....
ஓ என் அம்மா,
இம்மாதிரியான ஒரு பாசமும் முடிவுறுமா?

அவனது
சகலமுமான தனய ஆராதனையுடன்
ஒரு மன்றாடல்:

சாஸ்வதமான சாந்தியை அவளுக்குக் கொடு!'

அன்னை ஒருத்தியின் கல்லறைமீது, அன்பு மகன் பாடிய சமர்ப்பணக் கவிதை, இது! 1920ஆம் ஆண்டுபோலந்து நாட்டின் வடோவிஸ் எனுமிடத்தில் பிறந்த கரோல் வொய்ரிலா, சிறுவயதில் தாயை இழந்திருந்த சோகத்திலிருந்து மீள முடியாமல், தமது பத்தொன்பதாவது வயதில் பாடிய அழகிய கவிதை! கரோல் ஒரு கவிஞனாய் இருந்த காரணத்தினால் தான் பிற்காலத்தில் தன் சொந்த உடலையே சுமந்துகொள்ள முடியாத தள்ளாத வயதிலும், பலகோடி மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் தன் இதயத்தில் சுமந்து வந்தார். இதன் பெறுபேறாகவே இன்று இவரது மறைவின் பின்னரும் கோடானு கோடி மக்கள் இவரைத் தமது மனங்களில் சுமந்துகொண்டுள்ளனர் போலும்! துன்பப்படும் மக்களுக்கெல்லாம் உற்ற துணையாகவும், அநாதரவாய் நிற்போர்க்கெல்லாம் ஆதாரமாகவும், நிதம் நிதம் வாடி நிற்போர்க்கெல்லாம் இதம் தரும் நிழலாகவும் இருப்பதென்பது, கவியுள்ளம் படைத்த ஒரு கலைஞனால் மட்டுமே சாத்தியமாகும்! மெல்லுணர்வுகளை வார்த்தைகளால் வனைந்து, கவிதையாய் வடித்தெடுக்கவல்ல அந்த இளம் கவிஞன் ஒருநாள், திருச் சபையின் ஏக தலைவனாவேன் என்றோ, யேசுவின் அபிமான சீடரான இராயப்பரின் (St. Peter) வாரிசாவேன் என்றோ, ரோமாபுரியின் பேராயராவேன் என்றோ, வத்திக்கானின் இறைமையாவேன் என்றோ, பரிசுத்த பாப்பரசராவேன் என்றோ எண்ணியிருந்திருக்க நியாயம் இல்லை. ஆயினும் ஒருகாலம் கவிஞனாய் இருந்து, பின்னர் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாய் பிரபலமடைந்து, 2005 ஏப்ரல் 2ஆம் திகதி அமரராகிவிட்டவர்தான் இந்தப் பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர்.

மரபு வழிவந்த பழமைபேண் அம்சங்கள் பலவற்றைப் பின்பற்றிவந்த பாப்பரசராக இருந்தபோதிலும், வேறுபல விடயங்களில் மாறுபட்டவராகவும் முற்போக்காளராகவும் துணிச்சல் மிக்க சீர்திருத்தவாதியாகவும் இருந்தமையே இவரது பிரபலத்துக்குக் காரணமெனலாம். குறிப்பாக, கடந்த 455 வருடங்களுக்குப் பின்னர் பாப்பரசரான முதலாவது இத்தாலியர் அல்லாதவரான இவர்;;, சுமார் 130 நாடுகளுக்கு அன்பையும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் நற்செய்திகளாகச் சுமந்து சென்றவர்;;;. நல்லொழுக்கத்தின் பிரதான பிரசாரகர். சுயகட்டுப்பாடுகள், இலட்சியங்கள், விழுமியங்கள் போன்றவற்றின் உரத்த பேச்சாளர். தமது உயரிய சிந்தனைகளைச் சீராக வெளிப்படுத்தி, காத்திரமான கருத்துப் பரிமாற்றம் செய்வதில் வல்லவர். நவீன உலகு போற்றும் பண்டைய விஞ்ஞானியான கலிலியோ 17ஆம் நூற்றாண்டில் வெளியிட்டிருந்த வானியற் கண்டுபிடிப்புக்;கள் தவறானவை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி, கத்தோலிக்க திருச்சபையானது தண்டனையும் விதித்திருந்தது. அத்தவறு குறித்து நீண்ட காலமாகத் திருச்சபை கடைப்பிடித்து வந்த மௌனத்தைக் கலைத்து, அருப்பர் சின்னப்பர் 1992இல் கலிலியோ மீதான குற்றச் சாட்டுக்களை நீக்கியவர். கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர். உலக நாடுகளுக்கிடையில் சமாதானம் நிலவவேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர். ஏனைய மதத்தவர்களுடன்- குறிப்பாக யூத, இஸ்லாமிய மதத்தவர்களுடன்-புரிந்துணர்வுடனும் தாராள சிந்தையுடனும் நடந்து கொண்டவர். யூதர்களை நன்கு விளங்கியவராக அவர்களைத் தமது 'மூத்த சகோதரர்கள்'; என்று கூறியவர். யூதப் படுகொலைகள் நிகழ்ந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டவர். மத்திய கிழக்கை இன்று யுத்தக் கொதிகலனாக்கி வைத்திருக்கும் இஸ்ரேலிய-பலஸ்தீனப் பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர். 1981ஆம் தமது உயிருக்குக் குறிவைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, உடலை ஊனமாக்கிய அந்தத் துருக்கிய தீவிரவாதியை மன்னித்து மறந்து, அவனுக்காகப் பிரார்த்தனை செய்தவர். யேசுவை சிலுவையில் அறைந்தமைக்காக யூதரைப் பழிவாங்க வேண்டாம் என வேண்டுதல் செய்தவர். கத்தோலி;க்க மதம் நிகழ்த்திய கொடுமைகளுக்காகப் பல முறை மன்னிப்புக் கோரியவர். இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்று விரும்பியவர். அன்னை தெரேசாவை தமது 'சகோதரி' என அன்போடு விழித்தவர். செப்டம்பர் 11 நிகழ்ந்த கொடூரங்களுக்காக மனம் நொந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாவப்பட்டவர்களுக்குமாக மன்றாடியவர். அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் கத்தோலிக்க மதகுருமார் சிறுவர்களுக்குச் செய்த பாவங்களைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டவர். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட சகலரிடமும் தமது ஆழமான கவலையையும் அவமானத்தையும் தெரிவித்தவர். உலகிலேயே மிக உயர்ந்த பெறுமதி மிக்க, உன்னதமான கிரீடத்தை தலையில் அணிந்துகொள்ளும் பாரம்பரியத்தை மறுத்தவர். மலைபோல் குவிந்துள்ள செல்வத்தின் மத்தியிலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மரணத்தின் பின்னரும் தமது உடலை சாதாரண மரப் பெட்டி யொன்றில் வைத்தே அடக்கம் செய்ய வேண்டுமென்று எழுதி வைத்து மறைந்தவர். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் உலகுக்கு உதாரணமாக வாழ்ந்து, அளப்பரிய சேவைகளைச் செய்து முடித்தவர்.

ஆயினும் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரை ஒரு நெகிழ் தன்மையற்ற பழமைவாதி என்று குறை கூறுவோரும் உண்டு. பெருகி வரும் உலக சனத் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கென்று மேற்கொள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையை மறுத்தவர். கருத்தடையானது கடவுளுக்கும் மானுடத்துக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமெனக் கூறி, கருவழிப்பு நடவடிக்கையை வன்மையாக எதிர்த்தவர். முதலாளித்துவத்தின் லௌகீகங்களையும் செயற்கைத் தன்மைகளையும் ஆடம்பரங்களையும் விரும்பாதவர். பொருள் மீது மையலும் மையமும் கொண்டு வாழும் பொருளாதாய சமூகத்தின் மீது நாட்டமற்றவர். பதிலாக ஏழைத் தொழிலாளிகள் விவசாயிகள் சுரண்டப்படுவதையிட்டு அவர்களுக்காக இரக்கப்பட்டவர். விமர்சனங்களைச் சகிக்க முடியாதவர். தமது அதிகாரத்தினை வெளிப்படையாகப் பிரயோகித்தவர். இந்தியாவில் கத்தோலிக்க மதம் விரைவில் பல்கிப் பெருகும் என வெளிப்படையாகக் கூறி விமர்சனத்துக்குள்ளானவர். புத்த சமய நடைமுறைகளைச் சாடி, சர்ச்சைக்குள்ளானவர். இத்தாலிய மாஃபியாவை இறப்புக் கலாச்சாரம் எனக் கண்டித்தவர். தென்னமெரிக்க குருமாரின் புரட்சியை நிராகரித்து, தேவாலயத்தினுள் அரசியலுக்கு இடமில்லை என மறுதலித்தவர். ஒரு திருப்பலிப் பூசையின் மூலாதாரக் கடமைகளை பிலிபீடம் வரை சென்று, செய்து முடிக்கும் குருவானவரின் அந்தஸ்த்து, பெண் துறவிகளுக்கு வழங்கப்படக்கூடாதெனத் தடுத்து வைத்தவர். இவ்வாறு இவர்மீது கறை உண்டென்று குறை கூறுவோரும் இருக்கவே செய்கின்றனர்.

இளைஞர்களின் மனங்களில் நம்பிக்கையை வளர்க்க வல்ல பேராற்றலை இவர் கொண்டுள்ள காரணத்தினாலேதான், 1979ல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள மடிசன் சதுக்கத்தில் கூடியிருந்த அடாவடித்தனம் மிக்க சுமார் 20,000 இளைஞர்களைப் பார்த்து 'பாப்பரசர் உங்கள் நண்பன்' எனக் கூறி, அவர்களை அன்பால் வென்றெடுத்தார். இதனைப் பார்த்து வியந்த New York Times
 பத்திரிகை "John Paul the Super Star"என்று தலையங்கம் தீட்டிப் பெருமைப் பட்டுக்கொண்டது. கனடாவில் 2002 நடந்து முடிந்த உலக இளைஞர்தின விழாவின் இறுதி நாள் இடம்பெற்ற திருப்பலிப் பூசையின் போது, வயது முதிர்ந்த நிலையில் பாரக்கின்சன் எனும் கொடிய நோய், தவறுதலான இடுப்புச் சத்திர சிகிச்சை, வயிற்றுப் புற்றுநோய், சிறுவயதில் ஏற்பட்ட வாகன விபத்து விளைவித்த காயங்கள்-வருத்தங்கள், துருக்கிய துப்பாக்கிதாரி சுட்டதனால் உண்டான உடற்பாதிப்பு, 25 வருடங்களுக்கு மேலாக நாளொன்றுக்கு 16 மணித்தியால உழைப்பு என்பன காரணமாக உடல் கூனிக் குறுகி நின்ற பாப்பரசர், இளைஞர்களைப் பார்த்து, 'நீங்கள் இளமையானவர்கள். பாப்பரசரோ முதுமையானவர்' என்று மனமுருகக் கூறினார். பாப்பரசரின் இந்த வார்த்தைகள் இளைஞர்களின் மனங்களைத் தொட்டு உலுக்கியிருக்க வேண்டும். 'இல்லை! இல்லை! பாப்பரசர் இளமையானவர்! பாப்பரசர் இளமையானவர்!' என்று சனசமுத்திரம் ஆர்ப்பரித்து எழுப்பிய வார்த்தைகள் வான்முகடுகளைத் தொட்டுத் திரும்பி வந்தமை மறக்க முடியாத சம்பவமாகும். 'நாங்கள் பகிர்ந்துகொண்ட ஒளியில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றறோம்' என்று கூறி, இளைஞர்கள் மனங்களில் அன்று ஒளியேற்றிச் சென்ற பாப்பரசர், அவர்களை ஆன்ம ஈடேற்றத்தின் வாசற்படிவரை அழைத்துச் செல்வேன் என்று கூறவில்லை. அற்புதங்கள் செய்து பரவசப்படுத்துவேன் என்று கூறவில்லை. பதிலாக இனம், மதம், மொழி, நிறம், சாதி, கலை-கலாச்சாரம், பண்பாடு, பிரதேசம், நாடு, கண்டம் அனைத்தையும் கடந்து 'முழு மனுடத்தின் சுபீட்சத்துக்காகவும் ஒன்றுபடுவோம், உழைப்போம்' என்று ஏக குரலாய் ஒலித்து விடைபெற்றுச் சென்றிருந்தார். 'நீ ஒருநாள் தோற்றுப்போகவும் வீழ்ந்துபோகவும் கூடும். ஆனால் மீண்டும் எழுந்து நில். மன்னிப்பையும் இணக்கப்பாட்டையும் தேடு. மீண்டும் முயற்சி செய்' என்று கூறி விடைபெற்றுச் சென்றிருந்தார். கோபமும் குரோதமும் அவதூறும் அவநம்பிக்கையும் பயமும் மிகையாக நிரம்பி வழியும் இந்த நவீன உலகுக்கு இதைவிட வேறு என்ன வேதவாக்கு வேண்டிக் கிடக்கின்றது?

மறைந்த பாப்பரசர் அருளப்பர் சின்னப்பரை உலகு ஈடு இணைற்ற ஓர் ஆன்மீகத் தலைவராவே கருதி வந்துள்ளது. ஆனால் அவரோ அதற்கும் அப்பால் ஒரு மாபெரும் அரசியல் தலைவராக விளங்கி வந்துள்ளார் என்பதுவே உண்மை. நவீன உலக வரலாற்றின் முக்கிய கால கட்டத்தில் இவர் வாழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக சோவியத் ஒன்றியதின் உடைவும் அதன் விளைவாக கம்யூனிஸத்தின் பின்னடைவும், பேர்ளின் சுவரின் வீழ்ச்சியும், உலகமயமாதல் கொள்கையின் புதுவரவும், மத்திய கிழக்கின் யுத்தக் கொந்தளிப்பும், இஸ்லாமிய தீவிரவாதத்தின் எழுச்சியும், பயங்கரவாதத்தின் புது அவதாரமும், உயிருறிஞ்சியான எயிட்ஸ் நோயின் கோரத் தாண்டவமும், கத்தோலிக்க திருச்சபையினர் சிலரது பாலியல் முறைகேடுகளின் அவலமும், ஒருபாலினத் திருமணங்களின் அம்பலமும், அபிவிருத்தி அடைந்த-அடையா நாடுகளுக்கிடையிலான இடை வெளி அதிகரிப்பும் இவரது காலத்தில் இடம்பெற்ற ஒருசில முக்கிய சம்பவங்களாகும். ';எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைபிளிலும் குரானிலும் வேதங்களிலும் தீர்வு கூறப்பட்டுள்ளது - மேலும் புதிய பிரச்சினைகள் உலகில் ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லை' என்று கூறி இவற்றிலிருந்து புறமுதுகு காட்டி அவர் ஒடவில்லை. பதிலாக இவை ஒவ்வொன்றிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தலையிட்டு, சுமுகமான தீர்வுகளுக்கு உழைத்துள்ளார். பல பிரச்சினைகளின் வெற்றிக்குக் காரணமாவும் இருந்துள்ளார்.

சோவியத் ஒன்றியம் தனது வலுவைப் படிப்படியாக இழந்து வருவதை உணர்ந்த அந்நாள் அமெரிக்க ஜனாதிபதி றேகன், சோவியத்தின் தலைவர் கொர்பச்சேவை அணுக முயற்சி செய்தபோது றேகனின் அந்தரங்க ஆலோசகர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். கொர்பச்சேவை நம்ப முடியாது என எச்சரித்தனர். இந்நிலையில் கொர்பச்சேவை நம்பி நேசக்கரம் நீட்டலாம் என்று றேகனுக்கு ஆலோசனை வழங்கியவரும், சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரையை கிழித்தெறிவதற்கு வழிவகுத்தவரும் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரே. சோவியத் சிதைவின் பின்னர், கடந்த காலக் கோப தாபங்கள் காரணமாக ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஒருமுறை அமெரிக்க அதிகாரத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறான தாக்குதலைத் தடுத்து நிறுத்தியவரும் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரே! மேலும் உலக மயமாதலின் கெடுதிகளைத் துணிச்சலோடு அவர் எடுத்துக் கூறினார். திறந்த சந்தைப் பொருளாதாரத்தை வெளிப்படையாக விமர்சித்தார். அதேவேளை நவீன தொழில்நுட்ப மேம்பாடுகளின் பயன்பாடுகளைத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டார். நவீன ஊடகங்களை உரிய முறையில் பயன்படுத்தி, Media Star என்ற விதந்துரைக்கப்பட்ட பாப்பரசர் இவரைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? பலஸ்தீனிய-இஸ்ரேலிய பிரச்சிளைகளை மிகுந்த அனுதாபத்தோடு அணுகியவரும், இரு சாரரதும் ஏகோபித்த நன்மதிப்பைப் பெற்றவரும் இவர்தான். யூதரும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் தத்தமது புனித பிரதேசம் என்று போற்றி வரும் பெத்தலஹேமில் அதிபர் அரபாத்தைச் சந்தித்து அவரை அன்போடு அரவணைத்தவர். 'இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் கௌரவமாகப் பேசிப்பழகும் சமூகத்தவரே அன்றி, மோதிக் கொள்ளும் சமூகத்தவர் அல்ல' என்று கூறியவர். பயங்கரவாதத்தின் சகல வடிவங்களையும் வெறுத்தவர். ஈராக் மீது அமெரிக்கா நிகழ்த்திய இரண்டு யுத்தங்களையும் பகிரங்கமாகக் கண்டித்தவர். ஆயினும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசரும் இவரேதான். முதலாம் உலகின் ஆன்மீக வறுமையை எவ்வாறு அவர் அறிந்திருந்தாரோ, அவ்வாறே மூன்றாம் உலகின் பொருளாதாய வறுமையையும் அனுபவரீதியாக உணர்ந்திருந்தார். 'நீங்கள் பாப்பரசரைத் தேடி வர வேண்டியதில்லை பாப்பரசர் உங்களைத் தேடி வருவார்' எனக் கூறி ஏராளமான ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க நாடுகளுக்குப் பிரயாணம் செய்து, வசதியற்ற மக்களை நேரில் கண்டு ஆசீர்வதித்து வந்தார். குறிப்பாக வறுமையினாலும், யுத்தங்களாலும், எயிட்ஸ் நோயினாலும் உருக்குலைந்து வரும் இருண்ட கண்டமான ஆபிரிக்கா கண்டத்துக்கே மிகக் கூடுதலான பிரயாணங்களை இவர் மேற்கொண்டு, மக்களது வாழ்வில் ஒளியை ஏற்றுவதற்கு அயராது உழைத்தார். மேற்குலக வல்லரசுகளின் 'தீண்டாமை' வியாதிக்குப் பலியாகி இருக்கும் கியூபாவுக்குச் சென்று, அந்த நாட்டின் அதிபர் கஸ்ரோவுடன் கைகோர்த்து உறவு பேணினார். நாஸ்த்திகத்தினை அடிநாதமாகக் கொண்ட மாரக்ஸிஸத்தை மறுதலித்ததோடு, எல்லை மீறிய முதலாளித்தையும் நிராகரித்த பாப்பரசர், கியூபாமீதான அமெரிக்க வர்த்தகத் தடையை மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டித்தார். 'நட்புக்காக இடையறாது போரடிய நண்பனே, ஏழைகளின் நண்பனே, யுத்தத்தின் எதிரியாகி, எமது நெஞ்சை விட்டகலா இடம் பிடித்த நண்பனே, உனது பிரிவு எமக்கு துன்பம் தருகிறது' என்று பாப்பரசரது மறைவுக்குப் பின்னர், அனுதாபக் குறிப்பேட்டில் அதிபர் ஃபீடல் கஸ்ரோ எழுதியிருந்தமை ஒன்றே போதும், இந்த மனித மாமகுடத்துக்கு எதிரிகள் என்று எவருமே இல்லை என்பதை நிரூபிப்பதற்கு! கைதேர்ந்த அரசியல்வாதிகளுக்கே கைகூட மறுத்த இந்த 'சாணக்கியம்' இவருக்கு எப்படி சாத்தியமாயிற்று? பரிசுத்த வேதாகமம் எனப்படும் பைபிளை மட்டும் கையில் ஏந்தி வலம் வந்திருப்பாரேயாயின் வகையான வாழ்வையும் வாரலாறு காணாத சாவையும் இவரால் சம்பாதித்திருக்க முடியாது. பதிலாக, உலகில் அமைதியுடன் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பரப்பவதற்கென்று, ஆன்மீகத்தையும் அரசியலையும் பகுத்தறிவோடு பயன்படுத்திய இவர், தாம் சென்ற இடங்களெல்லாம் அன்பு என்ற ஆற்றல் மிக்க ஆயுதத்தையும் கையில் ஏந்திச் சென்றதாலேயே அனைத்து உலகையும் இவரால் வென்றெடுக்க முடிந்தது!

குனிந்த உடலும் குமிண் சிரிப்பும், அன்பு கனிந்த முகமும் கடவுள் வடிவும் இன்று காவியமாகிவிட்டது! குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவும் ஏழை-எளியவர்களுக்காகவும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் பேசிய குரல் இன்று அடங்கிவிட்டது! பாதகஞ் செய்பவரைக் கண்டு பயங்கொள்ள மறுத்த - துணிச்சலும் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்க ஒரு தலைவனை உலகு இன்று இழந்துவிட்டது! மகான்களுக்கு மரணம் ஒரு முடிவல்ல. அவர்களுக்கு அது புதிய வாழ்வின் ஓர் ஆரம்பமே! பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் உயிருடன் இருந்ததை விட, உயிர் துறந்த பின்னர் மேலும் உன்னதமான வாழ்வினை உலகில் வாழ ஆரம்பித்துள்ளார். இதனை அவரது மரணச் சடங்கு நன்கு நிரூபித்திருக்கின்றது! ஆயினும் வெற்றிடங்களை இயற்கை ஒரு போதும் விட்டு வைப்பதில்லை என்ற விஞ்ஞானக் கோட்பாடு தோற்றுப்போமோ என்ற நியாயமான சந்தேகம் ஒனறும் இயல்பாகவே தலைதூக்கியுள்ளது. பல்பரிமாணச் சிறப்புக்களைக் கொண்ட இவர், விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்னொருவரால் எப்படி நிரப்ப முடியும் என்ற கேள்வி எல்லோரது மனங்களிலும் எழுந்துள்ளது. வாழ்வின் இருண்ட பக்கங்களை அறிந்த, உணர்ந்த, அனுபவித்த ஒரு சாதாரண போலந்துப் பிரஜையான கரோல் வொய்ரிலா என்பவரால் தான் 'மக்கள் பாப்பரசராக' வாழ்ந்து, வரலாறு படைக்க முடிந்தது. இவருக்குச் சமானமாகத்தான் இல்லாவிட்டாலும், இவர் தொடங்கி வைத்த புதிய பாதையில் திருச்சபையை இட்டுச் செல்வதற்குத் தன்னிலும், ஒரு செல்வந்த நாட்டவரோ, அல்லது வசதி படைத்த ஒரு மேற்கு நாட்டவரோ பொருத்தமானவராக இருக்க முடியாது! 'அந்தரங்க வாக்கெடுப்பு' மூலம் அடுத்த பாப்பரசரைத் தெரிவு செய்யத் தயாராகிவிட்ட ஆயர் பெருமக்கள் இந்த உண்மையை அலட்சியம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு உலகு ஆவலுடன் காத்திருக்கின்றது!

knavam@sympatico.ca