|
 |
|
       |
|
      |
|
|

|
| |
 |
| |
|
நயாகரா
சொல்லும் சாரல் வாழ்த்து! |
|
|
நயாகரா
நீர்வீழ்ச்சியை 'மெய்ட் ஆப் த மிஸ்ட்' விசைப்படகில் ஏறி அருகில் சென்று
பார்த்ததுண்டா?
'இதுதாண்டா தண்ணீர்' என்பது போல் அது ஆக்ரோஷமாக வீழ்வதைப் பார்த்ததுண்டா?
அது எத்தனைச் சுகானுபவம் தெரியுமா?
நயாகரா... கோபமாய்க் கொட்டுகிறதா? காதலாய்க் கொட்டுகிறதா? என்று முடியாத
பட்டிமன்றம் ஒன்று நடத்திக்கொண்டே இருக்கலாம்!
'மெய்ட் ஆப் த மிஸ்ட்' டில் தற்காலிக மழை ஆடை அணிந்து படகின் ஓரங்களில்
நின்று பயணப்படும்போது மனதில் இருப்பது 'போகலாம்... போகலாம்.... நயாகராவைத்
தொட சீக்கிரம் போகலாம்...' என்ற
தவிப்புதான்.
விசைப்படகு, நதியை எதிர்த்து நீந்திக்கொண்டு, நயாகராவின் '...ஹோ...' என்ற
ராட்சசப் பொழிவை நோக்கி முன்னேற முன்னேற.... சாரல்... சாரல்... சாரல்....
பல திசைகளிலிருந்தும் சாரல்
கொண்டாட்டம்தான்...!
இன்னும் இன்னும் முன்னேற ஆவல், குளிர், பயம், பதட்டம் எல்லாம்
தொற்றிக்கொண்டு அருகிருக்கும் நண்பரை இறுகக்
கட்டிக்கொள்ளத் தூண்டும்...
முகமெல்லாம் அதீத பூரிப்பு.... உதடுகளில் அப்பட்டமாய் நடனமாடும் குளிரின்
தடதடப்பு.... 'வாவ்...!'
பயணப்பட்ட அனைவரிடமிருந்தும் ஒரே குரலில்.... மீண்டும் மீண்டும் 'வாவ்...!
வாவ்....!'
முப்புறமும் சூழ்ந்து கொட்டோ கொட்டென்று கொட்ட, நடுவில், நயாகராவின்
கோபாவேசத்தை
எதிர்த்துக்கொண்டு, அதன் சாரல் காதலை முகங்களில் ஏந்திக்கொண்டு அங்கே
விசைப்படகில் நிற்பது....
விவரிக்கமுடியாத ஆனந்தப் பெருக்கு...!
அவ்வளவுதானா....?
கொட்டும் நயாகராவுக்கு இன்னும் இன்னும் அருகில் செல்லவேண்டுமே...? அதன்
முகத்தைக்
கிட்டத்தில் பார்த்தாயிற்று; அதன் முதுகையும் பார்க்கவேண்டுமே அது எப்படி?
அதற்கும் வைத்திருக்கிறார்கள் ஒரு வழி.
'Journey Behind the Falls'
(நீர்வீழ்ச்சியின் பின்புறப் பயணம்). 'என்னையும் பார்த்துவிட்டுப் போ'
என்று தன் சாரல் மொழியில் என்னைக் கூவி அழைத்தது. ஆகா... அற்புதம்! அதையும்
பார்த்துவிடலாம் என்று அங்கு சென்றேன்.
அடடா... அது இன்னொரு வகையில் திகைப்பும் சிலிர்ப்பும் ஊட்டும் திகில்
பயணம். இம்முறையும் தற்காலிக மழையாடை கொடுத்தார்கள். அணிந்துகொண்டு,
நயாகராவைத் தொடப்போகும் கிளர்ச்சியோடு முன்னேறினேன்.
நயாகராவின் நீர்வீழ்ச்சிக்குப் பின்புறம் பல குகைகள் செய்திருக்கிறார்கள்.
அதன் சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டு, எலவேட்டரை (மின்தூக்கி) கீழ்நோக்கி
இயக்கினார் அங்குள்ள பணியாளர்.
குகைவழியாகவே நடந்து, கிட்டத்தட்ட நயாகராவின் பின் இடுப்புப் பகுதிக்கு
வந்தாயிற்று. அப்பப்பா... நெருப்புப்புகை நம் கண்களை நோகடிக்கும். ஆனால்
இந்த நீர்ப்புகைதான்... என்ன சுகம்...! என்ன சுகம்...!
கண்களில் குளிர்ச்சியை ஏற்றி... மூளைக்குள் ஒரு முதலிரவே நடத்தியது...!
குகை வழியாய் நயாகராவின் அருகே அருகே செல்லச் செல்ல... உடம்புக்குள்
பதுங்கி இருக்கும் எலும்புகளும்
கூச்செறிவதை உணரலாம். வெள்ளை வெளேர் என்று படு வேகத்தில் நயாகரா மகா
அடர்த்தியாய்க் கொட்டுகிறது. பத்தடி தூரத்தில் இடுப்புயர கம்பிக் கதவால்
பாதுகாப்புக்கருதி தடுக்கப்படுவோம். கைகளால் தொடமுடியவில்லையே என்று ஒரு
நொடி வருத்தம் கொண்டேன்.
அங்கிருந்து, மக்கள் தங்களின் வேண்டுதல்களை மனதுக்குள் சொல்லிக்கொண்டு,
சில்லறைக் காசுகள் எறிவார்கள்.
(பெரும்பாலும் 1 சென்ட் = 30 பைசா). இளசுகள் காதல் எண்ணங்களோடும்
எதிர்பார்ப்புகளோடும் எறிவதுதான் அதிகம்.
நம்புகிறோமோ இல்லையோ, அந்த இடம் சென்றதும், மனதில் நமக்கென்ன ஆசை என்று
எண்ணத் தோன்றிவிடுகிறது. நிறைவேறுமோ நிறைவேறாதோ, நம்பிக்கையோடு ஒரு சென்ட்
வீசும்போது ஆனந்தம்
வந்து ஒட்டிக்கொள்ளத்தான் செய்கிறது. இதோ என் விருப்பம்:
"என் தாய்மொழியாம் தமிழ் என்றும் சீரும் சிறப்புமாய் வாழவேண்டும்! என்
தாய்த்திருநாட்டில் அரசியல் முன்னேற்றம் விரைந்து மலர வேண்டும்!
தீவிரவாதமில்லாத உலகம் வேண்டும்! ஒவ்வோர் இதயத்திலும் உலகக் குடிமகன்
(உலகப்பிரஜை) என்ற எண்ணமே மேலோங்க வேண்டும்!"
இவ்வாறு அந்தக் குகைகள் அத்தனையையும் நடந்து நடந்து முழு உடம்பாலும்
பூரித்த உள்ளத்தாலும் பார்த்துவிட்டு,
நயாகராவின் இடப்புறத்தில், அதற்கு மிக அருகாமையில் பாதுகாப்புக் கம்பிகளால்
சூழப்பட்ட மேடைக்கு வந்துசேர்ந்தேன்.
சிலீர்... சிலீர்... என்று நயாகராவின் நெருக்கமான சாரல் நம் உடம்பை
நேசத்தோடு தொடுகிறது.
முதன் முதலில், அரைகுறையாய் விபரம் தெரியவரும் சின்னஞ்சிறு வயதில்,
பிரம்மாண்டமான கோவில் யானை தன் துதிக்கையால், நம் பிஞ்சுத் தலை தொட்டு
வாழ்த்துச்சொல்லுமே, அப்போது எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது அந்த
அனுபவம். நயாகரா என்ற மகா நீர்வீழ்ச்சி எனக்குச் சாரல் வாழ்த்துச்
சொல்லுவதாய்ச்
சிலிர்த்தேன்.
அவ்வளவுதான், எனக்குக் குளிர் விட்டுப் போய்விட்டது. உள்ளே இருந்து ஓர்
ஆட்டம் மெல்ல மெல்ல தன் அசைவுகளை
எனக்குள் மீட்டி மீட்டி மூர்க்கம் கொண்டது...!
தற்காலிக மழையாடையைக் கழற்றினேன்...
சிலீர்...! சிலீர்...!
கைகளை உயரே உயரே நயாகராவை நோக்கி உயர்த்தி ஆடினேன்...
சிலீர்...! சிலீர்...!
என் சட்டையையும் கழற்றினேன்...
அப்பப்பா...! அப்பப்பா...! சிலீர்...! சிலீர்...!
உலகில் அங்கும் இங்குமாக ஆயிரம் அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் இருக்கலாம்.
ஆனால் இதுதான்...
இதுமட்டும்தான் ஈடு இணையில்லாத உலக நீர்வீழ்ச்சி!
அன்புடன் புகாரி
கனடா |
| |
|
|
 |
|
|