முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்







 

 
முத்து நெடுமாறனுடன் ஒரு நேர்காணல்.
பேட்டி கண்டவர்: சக்தி சக்திதாஸன்

நன்றி: நிலாச்சாரல் மின்சஞ்சிகை

 
தமிழெனும் கடலினுள் மறைந்திருக்கும் முத்துக்கள் பல. அந்தத் தமிழ்க் கடலை விரிவாக்கும் முத்துக்கள் சில. அவ்வரிய முத்துக்களில் ஒருவர் திரு.முத்து நெடுமாறன். புதுமைகள் செய்வோர் புதிதாய் புலர்வதால் தான் நம் தாய்மொழி இன்றும் தலை நிமிர்ந்து வாழ்கிறது. நான்காம் தமிழாய் கணித்தமிழ் உருவாக முன்னோடியாய் திகழ்ந்தவர்களில் முத்துவும் ஒருவர்.

மலேசியாவிலே பிறந்து , மலேசியாவிலேயே வளர்ந்த இவர் தனது சொந்த ஆர்வத்தில் தமிழ் கற்றவர் என்பது வியப்பளிக்கும் செய்தி. மலேசியாவில் , கோலாலம்பூர் பல்கலைகழகத்தில் இலத்திரனியற் பொறியியல் துறையில், கணினியை மையமாகக் கொண்டு பட்டப்படிப்பை முடித்த இவருக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் அனுபவம் உண்டு. "சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்" "ஒராக்கிள் கார்ப்பிரேஷன்" போன்ற பிரபலமான கம்பெனிகளில் புதுத் தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்தும் உயர் பதவிகள் வகித்தவர் . இன்று தமிழ்க் கணினி உலகில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் "முரசு அஞ்சல் " எனும் மென்பொருளின் படைப்பாளி. அது மட்டுமின்றி உலகிலேயே முதன் முதலில் தமிழ் மொழியில் "எஸ்.எம்.எஸ்" (SMS) செய்தியனுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியவர்.

தற்போது உலகின் பல முன்னணி சர்வதேசக் நிறுவனங்களுக்கு ஆலோசராக இருக்கும் இவர், "உத்தமம்" என அழைக்கப்படும் "உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மையம்" எனும் அமைப்பில் தலைமை வகிக்கிறார்.


"நிலாச்சாரல்" வாசகர்களுக்காக முத்துவுடன் ஒரு இ-பேட்டி:

மலேசியாவிலே பிறந்தும் தமிழில் இத்தகைய பிடிப்பு வந்தமைக்கு ஏதாவது பின்னணிக் காரணிகள் உண்டா ?

குடும்பச்சூழலே காரணம். அப்பா ஒரு கவிஞர் . சிறுவயதினிலேயே தமிழின்பால் பற்றினை ஏற்படுத்தி விட்டார்கள். முறையாக தமிழைப் பள்ளியில் படிக்காவிட்டாலும் . நான் பேசிய , எழுதிய,படித்த முதல் மொழி தமிழ்.

மேலும் நான் பிறந்து வளர்ந்தது ஒரு ரப்பர் தோட்டம். அங்கு ஏறத்தாழ அனைவருமே பால்வெட்டுத் தொழிலாளர்கள். தமிழ் மட்டுமே பேசினார்கள் . மற்ற மொழிகள் தெரியாது. எனவே ஏழு வயதில் பள்ளிக்கூடம் செல்லும் வரை ஆங்கிலம் என்றால் என்ன என்றே தெரியாது.ஆங்கிலம், மலாய் இரண்டுமே எமக்கு போதனா மொழிகள். அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை ஆங்கிலத்திலும், வரலாறு, பூகோளம் போன்ற பாடங்களை மலாயிலும் போதித்தார்கள். இந்த இரு மொழிகளையும் நன்கு கற்றாலும் தமிழின் பால் இருந்த அன்பு சற்றும் குறையவில்லை. சொந்த விருப்பத்தின் பெயரில் தமிழ் நாளிதழ்களைப் படித்தேன். நிறைய சொற்பொழிவுகளைக் கேட்டேன். இதன் மூலம் தமிழையும் , தமிழைப்பற்றியும் தெரிந்து கொண்டேன்.

எங்கள் நாட்டைப் பொறுத்தவரை "தோட்டப்புறத்தில் பிறந்தும் ஆங்கிலம் இவ்வளவு சரளமாகப் பேசுகிறானே" என்று வியப்பார்களே தவிர - நான் தமிழ் பேசுவது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்காது.

முரசு - அஞ்சல் உருவாகக் காரணமாக அமைந்தது எது ? அதன் பெயற்காரணம் என்ன ?

"அஞ்சல்" என்ற பெயர் 1993ல்தான் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்னால் இந்தச் செயலிக்குப் பெயர் "முரசு" மட்டும் தான்.

அச்சுத்தொழிலில் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது. பள்ளி மாணவனாக இருந்தபோதே சுவரொட்டிகள் , பதாகைகள்(Banners) எழுதுவதில் ஆர்வம் காட்டினேன். அதுவும் தமிழ் வரிவடிவங்களின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு. 70களில் தொடங்கி எமது சொந்த ஊரான கிள்ளான் வட்டாரத்தில் " மாணவர் பண்பாட்டு விழா " எனும் பெயரில் ஆண்டுதோறும் இந்திய மாணவர்களுக்காகத் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு நினைவு மலர் அச்சிடுவதற்கு அச்சகங்களுக்குச் சென்று விலை கேட்கும்போது, ஆங்கில பக்கங்களுக்கு 7 வெள்ளி என்றும் ,தமிழ்ப்பக்கங்களுக்கு 35 வெள்ளி என்றும் விலை சொல்லுவார்கள். ஆத்திரம் அடைவதைத்தவிர வேறுவழியின்றி , தமிழ்ப் பக்கங்களைக் குறைக்க வேண்டியிருந்தது.

இதற்காகத்தானோ என்னவோ நான் படிக்க விரும்பிய "சிவில் என்ஜினியரிங்" படிக்க வாய்ப்புக் கிடைக்காமல் " கம்பியூட்டர் என்ஜினியரிங்" துறைக்கு மட்டுமே இடம் கிடைத்தது. படித்து வெளிவந்ததும் நான் செய்த முதல் வேலை, கணினியில் தமிழைக் காணும் முயற்சி. அந்த முயற்சியின் விளைவே "முரசு". முரசு எங்கள் குடும்பப்பெயர் . "இணைமதியில்" வரும் மதி எனது அம்மாவின் பெயர்.

தமிழ்க்கணினி மென்பொருள் வளர்ச்சிக்கு , தமிழ்க்கணினி நிறுவனங்கள்(Software Companies), கல்வி அமைப்புக்கள் மற்றும் தமிழக அரசு ஆகியவை எவ்வளவு தூரம் உதவியாக இருக்கின்றன?

எந்தத் துறையின் வளர்ச்சியும் அதன் தேவையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். எவ்வளவுதான் , தொழில்நுட்பம் ஒரு தலைசிறந்த பொருளை உருவாக்கித் தந்தாலும், அந்தப் பொருளுக்குத் தேவை இல்லாவிடில் அதன் விற்பனையிலேயோ அன்றி வியாபாரத்திலேயோ முன்னேற்றத்தை நாம் காண முடியாது.

பதிப்புத்துறையையும் , கல்வித்துறையையும் பொறுத்தமட்டில், உலகளாவிய நிலையில் தமிழ் மென்பொருளின் தேவை மிகுந்த அளவில் இருந்தது. தமிழ் மென்பொருள் நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து பல மென்பொருள்கள் உருவாக்கியும் வருகின்றனர். இது தொடர்ந்து மேம்பட்டு வரும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.

பயனுள்ள சில வளர்ச்சிகளைப் பற்றிப் பலர் அறியாதிருப்பதால், இந்த வளர்ச்சிகளின் தேவையை மக்கள் - பயனாளர்கள் உணராதிருக்கலாம். இந்தச் சூழலில்தான் அரசாங்களின் முயற்சிகளும்,அனைத்துலக மன்றங்களின் முயற்சிகளும் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் தமிழ் இணைய மாநாடுகளின் நோக்கமும் இதுவே. புதிய தேவைகளை உருவாக்குவதற்கு இவை வாய்ப்பளிக்கின்றன.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து தமிழ் விசைப்பலகை அமைப்பையும் , குறியீட்டு வகையையும் ஒருமுகப்படுத்தியது, அலுவலகப்பணிகளுக்கு தமிழ் மென்பொருட்களை வாங்குவது மற்றும் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவது போன்ற திட்டங்களின் வழி தமிழக அரசு அதன் பங்கை ஆற்றி வருகிறது. அதன் சேவை கண்டிப்பாக விரிந்த பலனை அளித்திருக்கிறது. தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசின் நடவடிக்கைகள் எப்போதுமே முன்னோடியாக அமைந்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது.

மலேசிய , சிங்கப்பூர் அரசுகள் கூட தமிழ் மென்பொருள்களுக்கு - குறிப்பாக பள்ளிகளில் பயன்பட செலவு செய்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (INFITT) தலைமைப்பதவியில் இருக்கும் நீங்கள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் "தமிழ் இணையம்" மாநாட்டின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிக் கூறமுடியுமா ?

தமிழ் இணைய மாநாடுகளின் வித்து, 1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த "தமிழ்நெட் 97" கருத்தரங்கில் இடப்பட்டது. இந்த மாநாட்டை ஒரு சீனரான பேராசிரியர் டான் டின் வீ அவர்களும் மறைந்த திரு நா.கோவிந்தசாமி அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பொதுவாக, இந்த முதல் மாநாடு உலகில் பலபகுதிகளில் வாழும் தமிழ்க் கணினி ஆய்வாளர்களையும் , ஆர்வலர்களையும் ஒன்றுகூட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மாநாட்டின் இறுதியில் நடந்த கலந்துரையாடலின் போது சில முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக விசைப்பலகையைத் தரப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான தேவையாக இருந்தது. அதன் தொடர்ச்சியில் நடந்த 1999ம் ஆண்டு மாநாடு இரண்டு பெரிய விளைவுகளைத் தந்தது. ஒன்று தமிழ்99 விசைப்பலகை மற்றொன்று தாப்/தாம் என்ற குறியீட்டு முறை. தமிழ்99 விசைப்பலகை அமைப்பு சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதொன்றாக அமைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.

2000ம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தான் "உத்தமம்"(INFITT) உயிர் பெற்றது. இதே மாநாட்டில்தான் ‘மாநாட்டு மையம்’, ‘சமூக மையம்’ ‘வணிக மையம்’ என்ற மூன்று மையங்களைக் கொண்ட மாநாட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அளவிலான கண்காட்சியும் மாநாட்டில் முதல் முறையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

2001ம் ஆண்டு மலேசியவில் நடந்த மாநாட்டை ஒட்டி ஒரு மாதகாலம் நாடெங்கிலும் தமிழ் இணையம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் , பள்ளிகளில் " தமிழ் இணைய வாரம்" நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டன. உத்தமம் இயக்கத்தால் அதிகாரபூர்வமாக நடத்தப்பட்ட முதல் மாநாடும் இதுதான்.

ஆசியாவிற்கு வெளியே நடந்த முதல் மாநாடு ,கலிபோர்னியாவில் 2002ம் ஆண்டு நடந்த மாநாடாகும். இதில் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள தமிழ் நண்பர்களுக்கு தமிழ் இணையத்தின் வளர்ச்சியைக் குறித்து விளக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அனைத்துலக அளவிலான தமிழ் இணையப்பக்க உருவாக்கப் போட்டியும் நடத்தப் பட்டது.

2003ம் ஆண்டு மீண்டும் சென்னையில் நடந்த மாநாட்டில் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப்ட்டது. தமிழ் கற்பிப்பதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்களையும் திட்டங்களையும் அத்துறையைச் சார்ந்த வல்லுனர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த ஆண்டு டிசம்பர் 11ம் , 12ம் திகதிகளில் தமிழ் இணையம் 2004 மீண்டும் சிங்கப்பூரில் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

தமிழ் எஸ்.எம்.எஸ் ஜ முதலில் அமைத்தவர் எனும் பெருமை பெற்ற தங்களால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக எது அமையும் என்று கணிக்க முடிகிறதா ?

சற்று முன்பு கூறியது போல், எந்த ஒரு தொழில்நுட்ப விரிவாக்கத்தின் வெற்றியும் அதன் தேவையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.

எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திச் சேவை அனைத்து வயதினரும் பயன்படுத்தும் ஒன்று. இதில் தமிழைக் காண்பது "தேவையான" ஒன்றாகத் தோன்றுகிறது. அன்றாட நடவடிக்கைகள் குறித்த செய்திகளை ஆங்கிலத்திலேயோ , மலாய் மொழியிலேயோ பரிமாறிக் கொண்டாலும்,அந்தரங்கமான பல செய்திகள் தமிழில் அமைந்திருபதைப் பலரும் விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ்க் குறுஞ்செய்திச் சேவையை வழங்கும் "செல் அஞ்சல்" (AnjalMobile) செயலியை அனைவரும் வரவேற்கின்றனர்.

அதேபோல "ஆங்கிலத்தில் செய்வதை விட தமிழில் இதைச் செய்தால் சிறப்பாக இருக்குமே" என்ற சூழல் ஏற்பட்டால்,கண்டிப்பாக தமிழின் புழக்கத்தை அதில் கொண்டுவரப் பாடுபடுவோம். முரசு நிறுவனத்தைத் தோற்றுவித்த நோக்கமும் அதுவே.

தமிழில் இதைச் செய்ய முடியது என்ற வரிகளைக் கேட்டாலே இருவகையான உணர்வுகள் தோன்றுகின்றன. "என்னடா" என்ற கோபமும் "ஏன்" என்று வாய்ப்பையறிந்த மகிழ்ச்சியுமே அந்த உணர்வுகள்.

பல இலவச மென்பொருட்கள் பல வந்துவிட்ட நிலையில் முரசு வர்த்தக ரீதியாக நிலைத்து நிற்கும் ரகசியம் என்ன ?

இரண்டு . ஒன்று சேவை ; மற்றொன்று தரம்

இன்னும் சொல்லப்போனால் , இந்த வகை மென்பொருட்கள் முரசின் விற்பனையைக் கூட்டியுள்ளன என்றே கருதுகிறோம். இலவசமாகக் கிடைக்கும் செயலிகளைப் பயன்படுத்தி, தேவையான நேரத்தில் உதவி கிட்டாமல் தவித்த பலர் முரசு அஞ்சலுக்கு வருகிறார்கள். இவர்களைப் போன்ற "புதிய" பயனாளர்களை இலவசமாக வழங்கப்படும் " ஓப்பன் சோர்ஸ்" செயலிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களது இலவசப் பதிப்பைப் (Murasu Anjal Lite) பயன்படுத்துவோருக்குக் கூட எமது நிறுவனம் வழங்கும் உடனடிச் சேவையை அனுபவித்த பலர், அவர்களது நண்பர்களையும் அழைத்து வருகிறார்கள்.

"இணைமதி" எனும் எழுத்து , இணைய எழுத்தாக மலர்ந்துள்ளது என்பது எமது கருத்து. இந்த எழுத்தின் வடிவம் பலரையும் கவர்ந்துள்ளது. தமிழ் இணையத்தளங்களுள் பெரும்பாலானவை "இணைமதி" எழுத்துருவில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதில் தவறு இருக்காது. கூகிள் தேடுதளத்தில் "இணைமதி" அல்லது"அஞ்சல்" என்று தேடினால் கிடைக்கும் பக்க எண்னிக்கையே இதற்குச் சான்றாகும்.

அத்தோடு மட்டுமல்லாமல், அச்சிட்டு வெளியிடப்படும் சஞ்சிகைகளுக்குக் கூட இந்த எழுத்துருவையே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே பார்த்துப் படித்துப் பழக்கப்பட்ட எழுத்துருவாகவும் இது அமைந்து விட்டது. தொழில்நுட்ப வல்லுனர்கள் இலவசமாகக் கிடைக்கும் சில எழுத்துருக்களைக் கொண்டு பக்கங்களை அமைத்தாலும் அவர்களின் நிர்வாகிகள் உடனே இணைமதிக்கு மாற்றாச் சொல்வதாகக் கூறி எங்களுக்கு எழுதுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காகவே சில சிறப்புச் செயலிகளையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

வடிவ அழகோடு பயன்பாட்டு எளிமையும் சேர்ந்திருப்பதால், முரசு அஞ்சல் செயலியை பயனாளர்கள் விரும்புகிறார்கள். இதனைக் கருத்திற் கொண்டே , முரசு அஞ்சல் விசைப்பலகை அமைப்பு மற்ற செயலிகளிலும் இடம்பெறத் தொடங்கியுள்ளது. இதனை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

தமிழ்க்கணினி உலகில் நடந்து வரும் வியத்தகு முன்னேற்றங்கள் மற்ற இனத்தோரையும் தமிழின் பால் ஈடுபாடு கொள்ள வைக்கும் என்று எண்னுகிறீர்களா ? இதற்கான உதாரணங்கள் ஏதேனும் உண்டா ?

இந்த முன்னேற்றங்கள் முதலில் தமிழர்களை தமிழின்பால் ஈடுபாடு கொள்ள வைக்க வேண்டும் என்பதே எமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும் - குறிப்பாக மின்னுலக பயன்பாட்டில். இணையத்தில் தமிழின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அது இன்னும் குறைவாகவே உள்ளது. பொருளாதார ஆற்றல் உள்ள அளவிற்கு பயன்பாட்டில் எண்ணிக்கை போதாது. தொண்டு அடிப்படையில் ஓரளவிற்கு மட்டுமே செய்ய முடியும்.

அனைத்துலக நிறுவனங்கள் வெளியாக்கும் தொழில்நுட்பங்களில் தமிழும் ஒரு தரிக்கப்பட்ட ஒரு மொழியாக வேண்டும். அதுவும் இயல்பாக சீன-கொரிய-ஜப்பானிய மொழிகள் அமைவது போல அமைய வேண்டும். இரண்டாம் கட்ட நிலையில் திணிக்கப்படக்கூடாது. அப்போதுதான் நிலையான முன்னேற்றங்களை நாம் தொடர்ந்து காண முடியும்.

தமிழில் குறுஞ்செய்திச் சேவையை வழங்குவதற்கு நான் பல செல்பேசி நிறுவனங்களை நாடியபோது அவர்கள் கேட்டதெல்லாம் "எத்தனை பேர்கள் பயன்படுத்துவார்கள் ? " என்பதுதான். அனைத்துலக அளவிலான தமிழர்களின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டால் போதாது. பயன்பாட்டைக் காட்ட வேண்டும். இதைக் கருத்திற் கொண்டுதான் "செல் - அஞ்சல்" என்ற தமிழ்க் குறுஞ்செய்திச்சேவை அடங்கிய செயலித் தொகுப்பை வெளியிட முயற்சிகள் செய்தேன்.

மற்ற சேவைகளோடு தமிழில் வழங்கப்படும் சேவைகளை தமிழிலேயே பெறும் மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக எங்கள் நாட்டில் இயங்கும் ஏர் - ஏசியா (www.AirAsia.com) நிறுவனத்தினர் தமது பயணிகளுக்காக 6 மொழிகளில் தமது இணையத் தளத்தை இயக்குகிறார்கள். தமிழ்ப்பக்கத்தை அதிகம் பேர் பார்வையிட்டாலொழிய இது தொடரப்போவதில்லை. உள்நாட்டிலேயெ பயணம் செய்யும் தமிழ் அறிந்த மக்கள் இந்தப் பக்கத்தில் நிரந்தர மொழியாகத் தமிழை நிலைநிறுத்த வேண்டும். நானும் அவ்வாறே செய்துள்ளேன்.

இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழி இணையப் பயன்பாட்டில் முதன்மையாக இருக்கிறது என்பது பலருடைய கருத்து. என்னுடையதுவும் அதுவே. இந்த முன்னேற்றம் மற்ற மொழிகளும் தொழிநுட்பத் துறையில் வளர்ச்சி காண ஆதரவு தந்து வருவதையும் இப்போது காண்கிறோம். பல தென்னிந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தமிழ்மொழி கடந்து வந்த பாதையிலிருந்து பலவற்றைத் தெரிந்துகொண்டு சேர்க்க வேண்டியதைச் சேர்த்தும் தவிர்க்க வேண்டியவைகளைத் தவிர்த்தும் வருவதைக் காணலாம். தனித்தனியே நடத்தப்படும் ஆய்வுகளை விட, இதுபோன்ற கூட்டு முயற்சிகளின் வழி இன்னும் பல முன்னேற்றங்களைக் காணலாம் என்பது எமது கருத்து.