பகுதி 05
 

'எழில் நிலா'வின் சிறப்புப் பக்கம்

25 கவியரசனே கண்ணதாசனே
26 தமிழ் இணையம் 2002
27 திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
 
28 என் குடும்பம்
29 புகலிடம்
30 அன்புடன் இதயம்


 
   
 
25. கவியரசனே கண்ணதாசனே

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்



அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே
கண்ணதாசனே

இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால்
நீ இறந்தநாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது



ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..



அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்

எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து

உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:




ஞானத்
தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு
மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ
இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான்
எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன்
வலக்கர விரல்கள் று

ம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட
இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே
மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா

கடைசியில் இடும்
என்
கையெழுத்தைத் தவிர
என்
காதல் கடிதங்களில்
உன்
கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என்
உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன்
செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ
என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ
அழுதிருக்கமாட்டாய்

அந்த
அகோர ராகத்திற்கும்
ஓர்
அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது
கொஞ்ச நாள்

இயற்றியது
எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த
என் அழுகை
உன்
சமாதியைக் கரைத்து
உன்னை
வெளிக்கொண்டு வருமா



என்
இனிய கவிஞனே
கவியரசனே
கண்ணதாசனே

இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன்
பிறந்தநாளுக்கு
நீ
இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981


26. தமிழ் இணையம் 2002

சிலிக்கான்
பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம்தொட்டு
மொழித்தேன்
கூடுகட்டி
தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன்
பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன்
கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க



ஐந்தாம்
கணித்தமிழ் இணையம்
அறிவுப் பிழம்பாய் உதயம்
பைந்தமிழ்
மின்தமிழ் பாடுது
புதுப்புது நுட்கலை தேடுது

கந்தகத்
தமிழினம் கூடுது
காரியச் செந்தழல் மூளுது
சிந்தனை
செயற்திறன் குது
செந்தமிழ் கணிமுடி சூடுது



தொன்னூற்றேழிலே
சிங்கை
துவக்கி வைத்தது இதனை
தொன்னூற்றொன்பதில்
சென்னை
தொடர்ந்த ஆண்டிலும் சிங்கை

பின்னர்
மலேசிய மண்ணில்
பிறந்தது நான்காம் கூட்டம்
இன்னும்
இனியும் வளர்க
இணையம் தமிழாய் நிறைக



தொட்டுத்
துவக்கியத் தலைவர்
தொடரும் உறுப்பினர்; நண்பர்
எட்டுத்
திசைகள் எங்கிலும்
எழுதும் ஆய்வுக் கரங்கள்

கொட்டிப்
பொருள்தரும் வள்ளல்
கூடம் நிறைத்திடும் ஆன்றோர்
ஒட்டு
மொத்தமாய் வாழ்க
இணையத் தமிழினைப் போல



வலைக்குள்
மொழிகளோ நூறு
வனப்பாய் தமிழினைப் பாரு
நிலைப்பதில்
அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும்
தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது
தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்



உலகத்
தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள்
கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்

கலையும்
தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும்
கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது



ஏழரைக்
கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை
நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோழுரம்
கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே
சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்



பழமைக்
கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை
குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி
மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை
விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே


27. திரும்பிய பயணத்தில்
திரும்பாத பட்டங்கள்


பிப்ரவரி 01, 2003: பதினாறு தினங்கள் விண்ணில் பறந்த கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது வெடித்துச்
சிதறியதில் இந்தியப் பெண்மணி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.


ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்



மண்ணிலிருந்து வானத்தில்
விழுந்துவிட்ட
நட்சத்திரங்கள்

திரும்பிய பயணத்தில்
திரும்பாத பட்டங்கள்



சாதனைக்கு மட்டுமின்றி
சாவுக்கும் சேர்த்தே
ஒரே பயணத்தில்
இருமுறை பறந்துவிட்ட
அவசரப் பறவைகள்



விண்ணில் பாய்ந்தபோது
மண்ணில் வாழ்த்தினர்
மண்ணுக்கு வரும்போது
விண்ணுக்கு அழைத்தது யார்



கொலம்பியா விண்கலம்
குழம்பிப் போனதா
கொடுப்பினை என்பதும்
தடுக்கிக் கொண்டதா



நாசாவின் கண்களில்
இன்னுமொரு முள்
சாகசக் களங்களில்
சாவுமோர் பிறப்பு



அரியானாப் பெண்ணின்
ஆகாய வெற்றி
இந்தியத் தலையில்
இன்னுமொரு மகுடம்

மகுடத்தின் கொடிகள்
அரைக்கம்பம் பறக்க
மறைந்தாயே தோழி
முக்காலும் வாழி



சாதனையற்றவன் சாவு
புறமுதுகு காட்டித்தான்
உங்களின் சாவோ
நெஞ்சிலே ஈட்டிதான்



ஆகாயக் கல்லறையில்
அழுக்கில்லா வெற்றிடத்தில்
அந்த ஏழு வீரர்களும்
அமைதியாக உறங்கட்டும்


28. என் குடும்பம்

சில்லறையை அள்ளி
தொப்பைக்குள்
போட்டுக்கொண்டு

கள்ளச்சாராயச்
சந்தைக்குச்
சலாம் அடிக்கும்
காவல்காரர்

என் மச்சான்



எதைக் கொடுத்தாலும்
குடிப்பேனென்று

குடித்துவிட்டு
நாக்குத்தள்ளி செத்துப்போன
குடிகாரன்

என் அண்ணன்



பட்டம்
வாங்கிவிட்டேன்
வங்கியில் மட்டும்தான்
வேலை பார்ப்பேனென்று

தெருத் தெருவாய்த்
திரியும்
வேலையில்லாப்
பட்டதாரி

என் தம்பி



மாவட்ட
ஆட்சித்தலைவன் தொட்டு
அடிமட்ட சேவகன் வரை

கை நீட்டிப்
பை நிரப்பும்
அரசு நிர்வாகிகள்

என் சகலைப்பாடிகள்




ஊரை அரித்து
உலையில் போட்டு

கைத்தட்டல் வாங்கும்
அரசியல்வாதி

என் மாமா



ஓர்
எவர்சில்வர்
குடத்திற்காக

எவனுக்கும்
ஓட்டுப் போடும்
இந்நாட்டு அரசி

என் அம்மா



உள்ளூரில் வேலையில்லை
என்று
திசைமாறிப் பறந்து

அத்தோடு
தொலைந்துபோன
அமெரிக்கப் பிரஜை

என் அக்கா



சுதந்திரம்
வாங்கித்தந்தத் தியாகி
என்ற பெருமையோடு

சாய்வு நாற்காளியில்
சலனமற்றுக் கிடப்பது

என் தாத்தா



வார்த்தைகள் உயர்த்தி
விடியல் திறக்கும்
வலிய பேனாவால்
தொலைந்துபோன காதலிக்காக

புலம்பல் கவிதைகள்
வடிக்கும்
அற்புதக் கவிஞன்

நான்


29. புகலிடம்

கிழக்கே அட்லாண்டிக் கடல் மேற்கே பசுபிக் கடல், இவற்றுக்கு இடையே மூன்று மணி நேர வித்தியாசம் கொண்ட கனடா உலகின்
இரண்டாவது மிகப் பெரிய நாடு.

வட அமெரிக்காவில் ஐந்தில் இரண்டு பாகம் இதற்குத்தான் சொந்தம். ஆனால் சுமார் 31 மில்லியன் ஜனத்தொகையே கொண்ட இந்த நாட்டில், ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் என்று பல்வேறு
திசைகளிலிருந்தும் வந்து குடியேறியவர்களே 97க்கும் மேற்பட்ட சதவிகித மக்கள்.

தொழில், திறமை, தகுதி போன்ற அடிப்படையில் தேர்வு செய்து, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இந்நாட்டின் மீது ஆர்வம் கொண்ட மக்களை, தன் குடிமக்களாய் ஏற்றுக்கொள்ளும் இந்நாடு அபயக் குரலோடு ஓடிவரும் பெரும்பாலான அகதிகளையும் தகுதிபாராமல் அன்போடு அள்ளியணைத்துக்
கொள்ளும் கருணைத்தாயாய் விளங்குகிறது.

இதன் புண்ணியத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் இங்கே அடைக்கலம் புகுந்து தங்களின் வாழ்வை மேம்படுத்தி சிறப்பாக
வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தன் நன்றி பொங்கப் பாடுவதாய் அமைந்ததுதான் இக்கவிதை



கண்ணில் விளக்கெரிப்பாள் - என்றும்
கருத்தில் எனைக்கொள்வாள்
எண்ணும் பொழுதிலெல்லாம் - என்றன்
இதயம் குளிர்விப்பாள்

பொன்னும் மணியுமிங்கே - பெற்ற
தாய்தமக் கிணையாமோ
நன்றியும் சொல்வதுண்டோ - நித்தம்
நேர்வரும் தெய்வமன்றோ

முன்னம் தாய்தந்தை - அவர்முன்
மூதாதையர் பலரும்
அன்னைத் திருமண்ணே - உன்னில்
ஆடிக் களித்திருந்தார்

உன்னை உண்டுதானே - உயரில்
உரங்கள் சேர்த்திருந்தார்
வென்றுன் மடிசாய்வேன் - விடுத்து
நன்றியா நானுரைப்பேன்

இன்னல் பிளந்தெடுக்க - சுற்றும்
இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க - முற்றும்
கிழிந்தே கிடந்தவென்னை

உன்னில் அணைத்தவளே - உயிரின்
ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே - கருணை
அன்பில் புதைத்தவளே

எண்ணம் மதித்தவளே - என்னை
எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய் - எனக்குள்
எல்லாம் ஈந்தவளே

மண்ணே புகலிடமே - என்றன்
மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே - நன்றி
ஊற்றே உயிர்தனிலே


30. அன்புடன் இதயம்

விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

அன்பே நீயென்
உடன் வருவாயா



என் கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்

உன் கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்

இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்

வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

அன்பே நீயென்
உடன் வருவாயா



கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம்
இருவர் எண்ணங்களும்
அருகருகே
நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

அன்பே நீயென்
உடன் வருவாயா



முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்

சுத்த பாவங்களை
மட்டுமே
சத்தமாய்க் காட்டி

என்றும் நிலைக்கும்
நிதர்சனம் தழுவ

அன்பே நீயென்
உடன் வருவாயா



ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய்
மொழிபெயர்த்தாலும்

நடுநாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி

உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

அன்பே நீயென்
உடன் வருவாயா



சரியா - நூறுசதம்
அழகா - அற்புதம்
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

சரியா - ம்ஹ¥ம்
அழகா - மாற்று
என்னும்
அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

அன்பே நீயென்
உடன் வருவாயா



தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்

உன் நம்பிக்கையோடு
இந்த உலக நம்பிக்கை
அனைத்தையும்

என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

அன்பே நீயென்
உடன் வருவாயா



அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்

அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

அன்பே நீயென்
உடன் வருவாயா



சுக்கல் சுக்கலாய்
மனம்
நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்

நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு

கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

அன்பே நீயென்
உடன் வருவாயா



இத்தனையும் கொண்ட
உன்னை
என்
ஆருயிர்ப் பொக்கிசமாய்

ஆராதித்து
ஆராதித்து
நான் பாதுகாக்க

அன்பே நீயென்
உடன் வருவாயா


   
இத்தொகுப்பின் கவிதைகள் நிறைவு பெறுகின்றன