பகுதி 04
 

'எழில் நிலா'வின் சிறப்புப் பக்கம்

19 அம்மா வந்தாள்
20 பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
21 பிரிகின்றேன் கண்மணி
 
22 தமிழை மறப்பதோ தமிழா
23 சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு
24 எழுதக் கூடாத கடிதம்


 
   
 
19. அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்

உலகின்
அத்தனை அன்பையும்
ஒன்று குவித்து
தன் பாச உதடுகளால்
என் நெற்றியில்
முத்தமிட்டாள்



பொட்டிற்கு என்பது
உபரிப் பணி
அவளின் முத்தத்திற்கு
என்பதே
என் நெற்றியின்
தலையாயப் பணி



மங்கலாய் எரியும்
தெருவிளக்குகளில்
ஒளிந்து பிடித்து விளையாடியவள்

கணினிப் பெருநகரில்
கைநிறைந்த சம்பளத்தில்
மூக்குக் கண்ணாடி வழியே
மொத்த உலகத்தையும்
அலசிக்கொண்டிருக்கிறேன்

ஆம்
இந்தக் கிராமிய நிலா
இன்று பட்டணத்து வானில்

நுனிநாக்கில் 'டமில்' பேசும்
சென்னைத் தமிழ் இளசுகளும்
மூக்கின்மேல் விரல்வைக்கும்
ஓர் இடத்தில்



நாட்டுக்கு ஒரு கிளையும்
ஆளுக்கு ஒரு கணினியும்
என் நிறுவனத்தின் பெருமை

இணையத்தில் நுழைந்து
நிமிடத்தில் பொருள் குவிக்கும்
நுட்பங்கள் அடர்ந்தது
எங்கள் பணி



எட்டுமணி நேர
அலுவலக இறுக்கம்
பல்லவன் வந்து முகமூடி கிழிக்க
நான் என்னிடம் மீள்வேன்



எண்ணெய் வழிய
இறுக்கிப் பின்னிய
இரட்டை சடைப் பின்னலுடன்
எங்களூர் மண்ணில்
மணிக்கணக்காய் ஓடியாடியபோது

பக்கத்து வீட்டுப்
பட்டணத்து அக்காவின்
அலங்கரித்த முகமும்
ஆங்கிலம் பேசும் அழகும்
எப்போது நாமும்
இப்படி வளர்ந்து
வாளிப்பாய் நிற்போம் என்று
கண்களுக்குள் கனவுகளை
இறக்குமதி செய்யும்



இன்று
எல்லாம்தான் இருக்கிறது

அடுத்த மாதம் நான்
அமெரிக்கா போக
வேலையும் விசாவும் தயார்



ஆம்
இருந்தது இல்லாமல்
போனதைத் தவிர
மற்ற எல்லாம்தான்
இருக்கிறது



மனிதர்களைத்
தனிமைப் படுத்தும்
விஞ்ஞான வளர்ச்சி

இரத்த பந்தங்களை
ஊருக்கு ஒன்றாய்த்
தூக்கி எறிந்து விளையாடும்
வேலை வாய்ப்பு

வெறுமையை
நிரந்தரப் படுத்தும்
இயந்திரங்கள்



அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்

அடுத்தவாரமே
உன் மடிதேடி வருவேன் நான்

எனக்குக் கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்

அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்

நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல


20. பனிரெண்டாம் குடியரசுத் தலைவா



வைர விதையே
எங்கள் அப்துல் கலாம்


ஒரு பனித்துளி
தென்னிந்திய
புழுதிப் புல்வெளியிலிருந்து
உயரே உயரே எழுந்து எழுந்து
ஆதவ நெற்றியில்
அழகு முத்தம் தந்த
சரிதையோ உன் சரிதை



ஒரு
சின்னத் தேன் சிட்டு
தன் சிறகால் வான் தொட்டு
கோள்களையெல்லாம்
சோற்றுப் பருக்கைகளாய்க்
கொத்தித் தின்னும்
திறமையோ உன் திறமை



எழுத்தாணி முனையினைப் போல்
கூரேறி நிற்கும்
எழில் இராமேஸ்வரம் ஈன்றெடுத்த
தங்கத் தமிழனே


உன்னை
விதைத்த வனத்திலெல்லாம்
உச்சிச் சூரியனின்
உயர் மூச்சுக் காற்று
உஷ்ணமாய் வியாபிக்கிறது



சூழும் சூனியங்களைச்
சுட்டெரித்து நிற்கும்
உன்
மனத்திண்மையும்
மூளைத்திடமும் கண்டு
நான்
நகக்கூச்செறிகிறேன்



சாட்டை சொடுக்கச்
சுற்றும் பம்பரம்போல்
உன் ஒவ்வொரு செயலும்
வெற்றியின் பாதையில்
வீறுகொள்வதெப்படி



குஞ்சுகளைக் காக்க
சிறகுகளை விரித்து
சிலிர்த்துக்கொண்டு நிற்கும்
தாய்க் கோழி கூட

ஒரு கணம் சக்திகெட்டு
ஒன்றிரண்டு குஞ்சுகளை
பருந்துக்குப் பலிகொடுக்கும்

நீயோ

இந்தியாவின்
முட்டை ஓட்டில்
எந்தத் தூசும் தொட்டுவிடாமல்
அரண் அமைக்கும் வித்தையில்
அதிசயத்தைக் கண்டுவிட்டாய்



ஐயனே
எங்களை ஆள வந்த
மெய்யனே

எழுபதைத் தொட்டும்
முதுமையைத் தொடாத
இலக்கிய இளைஞனே

வீணையின் நரம்புகளோடு
சேர்ந்தே அதிர்ந்து
நாதம் எழுப்பும் பூமனத்தோனே

எழாமலும் விழாமலும்
எந்நேரமும் பணிக்குள்
புதைந்துபட்ட போதும்

இயந்திரமாகிப் போகாமல்
கடலடியின்
ஈர இதயம் கொண்ட
இனிய மனிதனே

நல்ல தமிழ்க் கவிஞனே

ஒருநாளும் ஆறிப்போய்விடாத
ஆற்றல் விசையால்
பிறந்த மண்ணை வாரி எடுத்து
வான உச்சிக்கே ஏற்றிச் சென்று
வாசித்துக் காட்டிய
அணுசக்தியே



உன்
ஏவுகணைத் தேடல்களும்
அணுசக்திச் சோதனைகளும்
வல்லரசுக் கோட்டைகளையும்
வேரோடு ட்டிப் பார்த்துவிட்டன



அதோடு

அரை நூற்றாண்டிலேயே
அழுகிச் சிதைந்து
ஆணிவேரில் புற்றேறி
அருவருப்பாய்த் திரிந்துபோன
விடியல்கெட்ட நம் அரசியலை
அடியோடு ஒழித்துப் போட
ஓர்
ஏவுகணை செய்வாயா



கனலாகவே கருவான
கிராமத்துக் கதிரவனே

நீ பற்றியெரிந்த வெளிச்சத்தால்
மண்ணும் விண்ணும் இன்று
ஒரு
பிரகாச உற்சவத்தில்



சம்மதமே உன்மதம் என்று
சத்திய மனிதனாய் எழுந்துநிற்கும்
நம்பிக்கைப் பேரொளியே

இந்தியாவின்
ஒவ்வோர் இளைஞனும்
இன்று
உன் முகம் பார்த்தே
ஏங்கி நிற்கின்றான்

ஆயிரமாயிரம்
அப்துல் கலாம்களாய்
அவர்களை ஆக்கித் தருவாயா



மதங்களின் முதுகினில்
மரவட்டையாய்த் தொற்றிக்கொண்டு
அரசக் கரங்களே
அரிவாள்களை எடுத்துக் கொடுத்து
ஆள்வெட்ட ஆள்தேடும்
அவலம் இன்னும் நீள்கிறதே

அதை
அடியோடு பொசுக்கிப் போடும்
அணுகுண்டாய் நிற்பாயா



திட்டமெல்லாம் போட்டுவிட்டாய்
நான் கண்டு பூரிக்கிறேன்

உன் திசைகளெல்லாம்
தீச்சுடர்தான்
நான் கண்டு குதூகலிக்கிறேன்

தேனளக்கும் நம்பிக்கையை
நீ
வாரி வாரி வழங்குகின்றாய்

உன்
தீவிரமும் நானறிவேன்

நாளை எழுந்துநிற்கும்
இந்தியாவை
ஒரு கற்பூரச் சுடராய்க்
காட்டுகின்றாய்



கண்களின் கரைகளிலெல்லாம்
இன்று நான்
கண்ணீரே ஏந்துகின்றேன்

இனியேனும்
ஏற்றங்கள் காண்போமா
இல்லை
ஏமாற்றம் ஒன்றேதான்
கொள்வோமா



உனக்கொரு தோல்வியெனில்
அது உன் தோல்வியல்ல
தேம்பிக்கிடக்கும்
ஒரு நூறுகோடி மக்களின்
ஒட்டுமொத்தத் தோல்வி

அப்படியரு
தோல்வியைச் சொல்ல
நீ யன்றும் கோழையல்ல

நீ சோதித்த அணுகுண்டை
அழுகிய அரசியல் வாதிகளின்
இடுப்பிலேயே போட்டு

இழுத்து வரமாட்டாயா
நம் சுதந்திரத்தை
என்ற மனத்தெளிவோடு
நான் நிற்கிறேன்



துரோகக் கிருமிகளாய்
உன்னைச்
சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளை
நீ வென்றெடுக்க

நூறு கோடி நெஞ்சங்களும்
ஒன்றுபட்டே நிற்கின்றோம்

ஒரு
வேண்டுதலாய்த் தொழுகின்றோம்



மறவாதே ஐயனே

கொண்ட
கொள்கையின் தீட்சண்யதினின்று
என்றும் எதற்காகவும்
துளியும் பிறழாதே எங்களின்
பனிரெண்டாம்
குடியரசுத் தலைவனே


21. பிரிகின்றேன் கண்மணி

எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள்.
வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால்
வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும்
ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே விவரிக்கிறது.

பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்


இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்

இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை


மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்

தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி


துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்

அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை


மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய

எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே


இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே

எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்


22. தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ
தமிழா - உன்
தரமின்று தாழ்வதோ
தமிழா



கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
கைகூப்பித் தொழுவது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன்
உயிரை வேண்டுமானால்
உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழற்றுப் போனவனோ
தன்
தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம்
செந்தமிழ் மறுப்பதோ
தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ



வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து
உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும்
சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும்
இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
நிஜமாய்க் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை
அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா


23. சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு

சித்திரையே
எழில் முத்திரையே
சொல்லிவிடு உன் சூட்சுமத்தை

எத்தனையோ
தமிழ் மாதங்களும்
இன்னமுதத் தேன் அளந்தாலும்

முத்தொளிரும்
தமிழ்ப் புத்தாண்டில்
முரசொலித்தே உன் முகமெடுத்து

முத்தமிழர்
ஏன் முன்வைத்தார்
மொழிவாயே என் சித்திரையே



அத்தைமகள்
விழி மார்கழியும்
அமுதளக்கும் நிலத் தைமகளும்

முத்தமிடும்
பொற் கார்த்திகையும்
முகிலவனின் நல் ஐப்பசியும்

எத்தனையோ
இம் மாதிரியாய்
முத்தமிழர் தம் மாதங்களும்

சித்திரமாய்ப்
பண் பாடிவர
சித்திரையே நீ ஏனடியோ



கத்தரியாய்த்
துயர் துண்டாடி
கவிபாடும் தீப் பிழம்பரசி

எத்தனையோ
இருள் எழுந்தாலும்
எரிப்பாயே அருள் நிறைப்பாயே

சித்திரையே
தவப் பொற்கொடியே
சூரியனும் உன் சொற்படியே

முத்தெடுக்கும்
நீள் மூச்சழகே
முறைதானே நீ தலைமகளே



முத்துரதம்
மண் ஊர்ந்துவர
மேற்தளத்தில் தமிழ் வீற்றிருக்க

எத்திசையும்
வளர்த் தூயதமிழ்
எழுந்தோங்க வளம் விண்முட்ட

புத்தாண்டின்
புது நல்வாழ்த்தாய்
புவியெங்கும் தமிழ்ச் சுரம்பாட

சித்திரையே
நீ வந்துவிட்டாய்
செந்தமிழின் தேன் தந்துவிட்டாய்


24. எழுதக் கூடாத கடிதம்

அன்பே

கோடி கோடியாய்ச்
சொற்களைச் சுரந்து
உன்முன்
கொட்டிக் கொட்டி
நான்
பேசித் தீர்த்திருக்கிறேன்

இருந்தும்
நான்
இடைவிடாமல் கையாண்ட
ஒரே ஒரு சொல்மட்டும்
என்னால்
மௌனமாகவே
உச்சரிக்கப் பட்டிருக்கிறது



ஆம்
அந்த
ஒற்றைச் சொல்லைமட்டும்
உன்முன்
ஒலியைத் தீண்டவிடாமல்
என் நாவினுள்ளேயே
நான் பத்திரமாய்ப்
பூட்டிவைத்திருக்கிறேன்



எனக்குத் தெரியாததா

மௌனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை



எனக்குக் கேட்காததா

நீ
உன் அந்தரங்கத்துக்குள்
என்னை
இரகசியமாய் முத்தமிடும்
சப்தங்கள்



பல நேரங்களில்
நீ உன்
விரல் கொழுந்துகளை
என்முன் நீட்டி நீட்டி
என்னைத் தொட
முன் வந்திருக்கிறாய்

உன்
பெண்மைக்கே உரிய நாணம்
என் பதில்
என்னவாக இருக்குமோ
என்ற அச்சம் எழுப்ப
விருப்பமே இல்லாமல்
பின்வாங்கி இருக்கிறாய்

இருந்தும்
என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை



நான்

உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே
தவமிருக்கும் உன்னையே
உயிருக்கு உயிராய்
காதலிக்கும்
ஈர நெஞ்சன் தான்

ஒரு
நெடிய காட்டுத்தீ
உன் நெஞ்சில் எழுந்துவிட
நான் காரணமாகிவிடுவேனோ
என்ற பீதியினால்தான்
கல்நெஞ்சனாய் இருக்கிறேன்



உனக்குள்
எழுந்துவிடுமோ என்று நான்
ஐயப்படுகின்ற அந்தத் தீ

எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்

ஆனால்
உன்
சொந்தக் கூட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

எனவேதான் என் அன்பே

என் மனதை
ஒலிபெருக்கியில்
அறிவிக்காவிட்டாலும்
உன் செவியோரத்தில்
ஒரு சின்னக்
கிசுகிசுப்பாய் அறிவித்துவிடேன்
என்ற
உன் விழிக் கெஞ்சல்களையும்
நான்
நிதானமாகவே நிராகரிக்கிறேன்



இருந்தும்
என் காதலை உன்முன்
என்
உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர்
உற்சவமே நடத்திவிட்டது

சந்தேகமிருந்தால்
நான்
அடிக்கடி சென்று
மனம் வடிந்து வருவேனே
அந்த ஏகாந்த மணல்வெளி

அதன்
ஒவ்வோரு
மணல் மொட்டுகளையும்
கேட்டுப் பார்

அவை சொல்லும்

கண்ணே
நான் உன்னைக்
காதலிக்கிறேனடி

இதயத்தின்
எல்லா அணுக்களாலும்
நான் உன்னை
நேசிக்கிறேனடி

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை
அஉச்சரிக்கிறேனடி

என்று நான்
தினந்தினம்
தொண்டை கிழியக் கூவும்
சோகத்தை



நீ கேட்கலாம்
இதுமட்டும் தகுமோ என்று

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்

இருந்தும் என் அன்பே

நான்
எத்தனையோ தூரமாய்
ஓடி ஓடிப் போனாலும்
என்னை
இழுத்து இழுத்து
உன் நினைவு வனத்திலேயே
கொண்டுவந்து விடும்

அந்த
மரணமடையாத மனத் துடிப்புகள்
எனக்குள் எப்படியோ
நிரந்தரக் குடியமைத்தபின்

என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய


   
ஐந்தாவது பகுதிக்குச் செல்ல