பகுதி 02
 

'எழில் நிலா'வின் சிறப்புப் பக்கம்

07 கண்களின் அருவியை நிறுத்து
08 ஒரு வாரிசு உருவாகிறது
09 நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
 
10 தோழியரே தோழியரே
11 நீர்
12 நெருப்பு


 
   
 
7. கண்களின் அருவியை நிறுத்து

கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா - தோழா
கவலைக்குள் சாகாதேடா

விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா - தோழா
செவியோடு செந்தேனடா

உள்ளத்துச் சிறையின் உள்ளே
ஓயாமல் தள்ளப் பட்டே
சிறையையே தண்டிக்கின்ற
பொல்லாத கைதிகளடா - தோழா
பிணந்தின்னிக் கவலைகளடா

முடக்கங்கள் இந்தப் பக்கம்
பலகீனம் அந்தப் பக்கம்
மனத்தினுள் கிள்ளி வைக்கும்
கவலைகள் முள்ளாய் தைக்கும் - தோழா
முள்ளுக்குள் உயிரும் சிக்கும்

வாழ்வெனும் கடலில் நீந்தி
நம்பிக்கை வலைகள் வீசி
விழிகளை விரித்தே பாரு
குதூகல மீன்கள் நூறு - தோழா
கவலையோ விலகும் சேறு

மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் - தோழா
வெற்றி உன் காலடி முட்டும்

கைவிட்ட காதல்தனையும்
கஷ்டத்தில் காணாதொளியும்
கயவாளித் தோழர்களையும்
காலுக்கடி மிதித்துவிடடா - தோழா
கருத்தினில் ஒதுக்கிவிடடா

ஏமாறு தவறே இல்லை
ஏமாற்றம் குற்றம் இல்லை
ஏமாற்றம் முதல்முறையென்றால்
ஏமாறு தவறே இல்லை - தோழா
ஏமாற்றம் குற்றம் இல்லை

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்

வாழ்க்கையில் விட்டுக்கொடு
விட்டுநீ கொடுக்கும் போது
விண்தொட்டு வளரும் இன்பம்
கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா
எட்டியே நடக்கும் துன்பம்

பொருள் தேடி உலகம் ஏறு
பொன்னோடு பண்பும் சேரு
பொருள் கண்ட உன்னையாரும்
பணம் என்று மட்டும் பார்த்தால் - தோழா
பிணம் என்று மட்டும் பாரு

சப்தத்தின் சிரிப்பும் கானல்
மௌனத்தின் புன்னகை வரம்
ரசிக்கின்ற உன்னுளம் தென்றல்
பாராட்டும் ஒளிமுகம் விடியல் - தோழா
பாராட்டும் பண்பே வானம்

மாறாத மகத்துவம் என்று
மண்மீது மாற்றமே உண்டு
இருண்ட உன் இதயமே கேடு
சொர்க்கமும் பூட்டிய கூடு - தோழா
திறவுகோல் உனக்குள் தேடு

கைகளில் அள்ளியே நாளும்
கணக்கின்றி உரித்தென்ன லாபம்
கவலைகள் பெருகியே போகும்
வெங்காயம் வேறென்ன ஆகும் - தோழா
வீசிநீ எறிந்தாலே தீரும்

மோப்பநாய் போலவும் தேடி
ஆனந்தம் காணுவாய் கோடி
பதுங்கியப் பூனைபோல் தாவி
சுகங்களைக் கவ்வியே வாழி - தோழா
சந்தோசம் உனக்கான தோணி

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்களை அறுத்து - தோழா
கண்களின் அருவியை நிறுத்து


8. ஒரு வாரிசு உருவாகிறது

நாடெங்கும் கொடிக் கம்பம்
நட்டுவச்சாச்சு
நட்டநடு வீதியெங்கும்
செலையும் வச்சாச்சு

வீடெங்கும் புகுந்தலசி
ஓட்டுக் கேட்டாச்சு
வெவரமாகப் பேசினவன்
இடுப்பொடிச்சாச்சு

காடுமலை மேடுயெல்லாம்
மேடை இட்டாச்சு
கள்ள ஓட்டுப் போட்டு இப்போ
ஆட்சி வந்தாச்சு

ஏடெங்கும் பொய்யெழுதிப்
புகழும்வந்தாச்சு
ஏழெட்டுத் தலைமுறைக்குக்
காசும் சேத்தாச்சு

கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு

ஆடு மாடு மந்தையான
மக்கள் மாறிடுமா
ஆட்சி நம்மக் கையைவிட்டு
ஓடிப்போயிருமா

பாடுபட்டுப் புளுகிவச்ச
சத்தியங் கேட்டு
பழயபடி இந்தமொறையும்
நமக்குத்தான் ஓட்டு

ஏடெடுத்துப் புகழெழுது
செத்த பயலுக்கு
எனக்கும் அதுல பொய்யெழுது
நல்ல பெயருக்கு

நாளைக்கு நான் புதுச்சட்டம்
போட்டுறப் போறேன்
நாடெங்கும் லஞ்சத்தையே
அமுலிலாக்கிடுவேன்

வேளைக்குயோர் ஊழலுன்னு
வரிசைப் படுத்திட்டேன்
வேறெதுக்கு ஓட்டு வாங்கி
ஜெயிச்சு வந்திருக்கேன்

ஏழை ஜனங்க ஏமாறும்
வழியைத் தெரிஞ்சிக்க
எட்டடுக்குக் காரனுக்கு
ஒதவி செஞ்சிக்க

காளை மனசுக் காரங்களைத்
தூண்டி விட்டுக்க
காரு கடை வீதியெல்லாம்
நாசமாக்கிக்க

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க

கேளுயின்னும் எத்தனையோ
புத்தி வச்சிருக்கேன்
கேட்டெனக்குப் பின்னுமதைச்
செய்ய நெனைச்சிக்க

பாலுமோரு தயிருயெல்லாம்
ஓரினச்சாதி
பந்தபாசம் நம்மளுக்கும்
அந்த மாதிரி


9. நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை


உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

ஓருயிர் அழிந்தால் உலகம் அழவேண்டும்
உன்னுயிர் போல்தான் அந்நியர் உயிராகும்
போரெனில் அழிவது பாமரத் தலைதானோ
பண்பைத் துறந்த உன்பெயர் அழியாதோ

பேச்சே இல்லாப் பண்டைக் காலத்தில்
பயத்தால் கொன்றான் பார்க்கும் மனிதர்களை
ஆச்சோ அப்படி ஆயிரம் மொழியிருந்தும்
அரசியல் தீர்வில் ஆயுதம் வரலாமோ

ஏழை வயிற்றின் கூழைப் பறித்தெடுத்தே
ஏவு கணைகள் ஆயிரம் செய்கின்றாய்
பாலை வனத்தின் எண்ணெய்க் கிணறுகளில்
தீயை மூட்டி நாசம் செய்கின்றாய்

அகிலம் யாவும் உயிரினச் சொத்தாகும்
அதனுள் என்றும் அன்பே மூச்சாகும்
முகிலைப் போலே உப்பை விலக்கிவிட்டு
மக்கள் மீதுன் நல்லதைப் பொழிந்துவிடு

கெடுப்பவன் என்றும் கெட்டே சாகின்றான்
கொடுப்பவன் தானே சரித்திரம் ஆகின்றான்
அடுப்பினை எரிக்க அவசரப் போர்வேண்டும்
அத்தனை மாந்தரும் உண்கிற நிலைவேண்டும்

உலகின் தலைவன் யாரோ அவன்யாரோ
உயிர்கள் காக்கும் கருணை வேந்தனன்றோ
சலவை செய்துன் அழுக்கைத் போக்கிவிடு
சகலரும் வாழ பூமியைப் பூக்கவிடு



உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை


10. தோழியரே தோழியரே


பெண்ணே
நீ
போகாதே பின்னே

நீ
பின்னுக்குப்போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே



போராடு

யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க

உன்னோடு
இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும்
மூர்க்கச் செயலல்ல

ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற
அவலமல்ல

ஆணோடு பெண்ணும்
சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய



பிறப்புச் சூட்சுமம்
உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல - ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்

ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்

ஆக,
ஊதாரிதானே ஆண் -
கவலையை விடுங்கள்



பெண்களின்
விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம்
உங்கள் ஆண்கள்

அவர்களிடம்
கேளுங்கள் தோழியரே

காதல் பேசிய
விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக்
கேளுங்கள்

தொட்ட நாள் முதல்
தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல்
வீரமாய் நின்று - வார்த்தை
மொட்டவிழ்த்துக் கேளுங்கள்

கேட்பது என்பது
எவருக்கும் பொது

நாளெல்லாம்
அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே
அதைப் போல

கேளுங்கள் தோழியரே

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம்
பெண்கள்

அதைக் கொடுத்துவிட்டு
அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும்
எழுதப் பட்டிருக்கின்றன

அந்தப் பயத்தில்
எவரேனும் முரண்டுபிடிக்கலாம்

அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும்
போக்கு அல்ல



உங்கள் வரங்கள்
வாழ்வதற்கன்றி
வதைப்பதற்கல்ல என்று
உங்கள் முகப்பூக்களின்
விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய்
எழுதி வையுங்கள்

பிறகு பாருங்கள்

நீங்கள்
கேட்கும் முன்னரே
எல்லாமும் கிடைக்கக் கூடும்



திருமணம் என்பது
தண்டனை அல்ல

செக்கில் கட்டிச்
சிதைக்கும் காரியமல்ல

தலையைக் கொய்யும்
தலையெழுத்தல்ல

அடிமையாவதற்கு
அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச் சாசனம் அல்ல

இதைத்
தெளிவாக்கிக்கொண்டுவிட்டால்

தோழியரே

பெண்ணின் மீது இடப்பட்ட
அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று
தெறித்துச் சிதறி
எங்கும்
சமத்துவமே துளிர்க்கும்

வாழ்த்துக்கள்


பஞ்சபூதக் கவிதைகள்

தண்ணீர் தொடங்கி ஆகாயம் வரை இனிவரும் ஐந்து கவிதைகளும் 'பஞ்சபூதக் கவிதைகள்' என்ற தனித் தலைப்பிற்குரியது.

இக்கவிதைகளை வாசிக்கும் கவிப்பிரியர்களுக்கு, இவன் என்ன ஒவ்வொரு பூதத்தைப் பற்றி கவிதை பாடும் போதும் அந்த பூதமே உயர்வு என்று பச்சோந்தி வேலை பார்க்கிறானே என்று தோன்றக்கூடும். உண்மை என்னவென்றால்,
இக்கவிதைகளை எழுதும்போது, எனக்குள்ளேயே நான் ஒரு கவியரங்கத்தைக் கற்பனை செய்துகொண்டேன். தனித்தனிக் கவிஞனாய்ப் பிறப்பெடுத்து எடுத்துக்கொண்ட கருத்துக்கு முழுமையாய் முன்னின்று வாதிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஓர் உத்வேகத்தையும் கொடுத்தது. அதோடு, எனக்கு ஐம்பூதங்களின் மீதும் அளவுகடந்த பிரியம். என் சிந்தனையைத் தூண்டிய ஐந்து பூதங்களையும் என் ஆசை தீர, கவிதைகளால் வாழ்த்தி வணங்கினேன்.

தண்ணீர்தான் என்னைப் பஞ்சபூதங்கள் என்ற இந்தத் தொடர் கவிதைகளை எழுதத் தூண்டிய அழகு பூதம். ஆனால் ஆகாயமே என்னை ஆட்டிப்படைத்த ஒற்றைப் பூதம்.

11. தண்ணீர்

தாகத்தைக் கொண்டுவிட்டுத்
தண்ணீரைக் கண்டோமா
தண்ணீரைக் கண்டுவிட்டுத்
தாகத்தைக் கொண்டோமா

கடலோடும் நதியோடும்
மழையோடும் அருவியோடும்
சலிப்பின்றி விழிபேச
அலுப்பேனோ வருவதில்லையே

சுற்றுகின்ற உலகமிதில்
சூழ்ந்ததெலாம் தண்ணீரே
சூரியனும் விழுங்கிடாமல்
காப்பதுவும் தண்ணீரே

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்

மொழிபேசும் நாவுகளோ
சுழல்வதுவும் நீரில்தான்
கண்ணின்கரு மணிகூட
ஆடுவதும் நீரில்தான்

பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்

தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்

தண்ணீரால் ஆனதினால்
தண்ணீரைக் கேட்டோமா
தாய்த்தண்ணீர் வேண்டித்தான்
சேய்த்தண்ணீர் தவிக்கிறதா

தண்ணீரின் கூறுகளாய்
உலகெங்கும் உயிரினங்கள்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்


12. நெருப்பு

ஊனும் பசியில் உயிரும் பசியில்
நோயும் பசியில் மருந்தும் பசியில்
பசியின் விசைக்கு மூலம் உண்டா
பசியைப் பார்த்த விழிகள் உண்டா

நிலமும் தின்னும் நீரும் தின்னும்
வெளியும் தின்னும் காற்றும் தின்னும்
நெருப்பே மூலம் பசியின் உருவம்
நெருப்பின் விசையே யாவும் எங்கும்

வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்

மூட்டி விட்டால் முயற்சி எழும்பும்
பற்றி விட்டால் உணர்ச்சி படரும்
ஓங்கிக் கதறும் கதறல் உள்ளும்
ஒளிந்து கிடக்கும் நெருப்பின் வேகம்

அறிவும் நெருப்பு அன்பும் நெருப்பு
கருணை ஓங்க நெருப்பே பொறுப்பு
கண்ணீர் சிந்தும் தாயின் உள்ளம்
பாசம் என்னும் நெருப்புப் பந்தம்

மோகம் மூளும் மூச்சும் வேகும்
முத்தம் பற்றும் இரத்தம் எரியும்
நெருப்பே பெண்ணுள் கருவாய் ஒட்டும்
நெருப்பே நெஞ்சில் கவிதை கட்டும்

வேரின் நெருப்பு நீரை நாடும்
உயிரின் நெருப்பு சாவைத் தேடும்
ஆக்கும் அழிக்கும் நெருப்பின் கைகள்
இருளை எத்தும் நெருப்பின் கால்கள்

கல்லை எரித்துக் குழம்பாய் வார்க்கும்
கடலை எரித்து மழையைக் கொட்டும்
உள்ளம் எரித்துத் தர்மம் காக்கும்
கள்ளம் எரித்து நீதி நிறுத்தும்

வைரக் கல்லும் நெருப்பின் பிறப்பே
கணினி இணையம் யாவும் நெருப்பே
வெளிகள் எங்கும் உருளும் கோள்கள்
வெடித்த நெருப்பு கொடுத்த துகள்கள்

நிலத்தின் நடுவில் இருப்பது நெருப்பு
அணுவின் நடுவில் வெடிப்பது நெருப்பு
நூறு பில்லியன் விண்மீன் நெருப்பு
நெருப்பின் தயவில் அண்டம் இருப்பு


   
மூன்றாவது பகுதிக்குச் செல்ல