13. தமிழ் உலக அறிவிப்பு  
 
பொற்கிழி வழங்கிக் கெளரவித்த மகேனுக்கு நன்றிகள். வாங்க ஆல்பர்ட் ... இப்போது ஆல்பர்ட் அவர்கள் தமிழ் உலக அறிவிப்பை அறிவிக்கப் போகிறார்கள். உங்களை எல்லாம் மகிழ்விக்க அடுத்த ஆSதானக் கவிஞர் யார் என்று அவர் அறிவிப்பில் வரும் என்று நினைக்கிறேன். வாங்க,,,, ஆல்பர்ட்... அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் வாங்க.. மணியம்



அன்பினிய தமிழ் நெஞ்சங்களே!
இந்த இனிய விழாவின் நிழல்வெளி மேடையில் அமர்ந்திருக்கும் நிஜத் தலைவர் மாலன் அவர்களே,
முன்னிலை வகித்த லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அய்யா சிவா பிள்ளை அவர்களே,
கவிஞர் புகாரி அவர்களே, சகோதர குழுக்களிலிருந்து விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே,
அரபிக்கடலளவு அன்பும், பசிபிக் கடலளவு பாசம் நிறைந்த தமிழ் உலக அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்!

உங்களை எல்லாம் என் மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கும்போது,

வெள்ளத்தின் பெருக்கைப் போற்
கலைப் பெருக்கும் **கவிப்பெருக்கும்** மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.............."

என்கிற பாடல்வரிகள் என் நெஞ்சில் விம்மிப் புடைத்து எழுகிறது. வாழ்கின்ற காலத்தில் ஒருவனின் திறமைகளைப் போற்றி வரவேற்க மனமில்லாதது மனித மனம்! குறிப்பாக, சக கவிஞர்கள் எழுத்தாளர்களின் வெற்றியை அங்கீகரிக்காதவர்கள் உலகமாக உள்ள இந்தக் காலக்கட்டத்தில் கூட, மனம் திறந்து வாழ்த்த முன்வந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஏனைய பிற அறிஞர் பெருமக்களையும் அவர்கள் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். இன்றைக்கு எல்லோருடைய பாராட்டையும் பெற்ற கவிஞராக புகாரி திகழ்கிறார். மோசமான கவிதைகள், மனித குல சமுதாயத்திற்குப் பயன்படாத கவிதைகள் நிலைத்து நிற்காது.

கவிஞர் புகாரியின் கவிதைகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. பட்டுமெத்தையில் படுத்துறங்கி மதுக்கோப்பையில் கண்விழிக்கிற கவிஞர்களுக்கு நடுவே, சமுதாய கருத்துக்களைப் பரப்புவதே சகல சுகம் என்று நினைக்கின்ற நேசக் கவிஞர் அவர்! சகமனிதர்களின் தோள்களிலும் தோழமையோடு கைபோட்டுப் பேசும் உரிமை புகாரியின் கவிதைகளுக்குண்டு!

வாழ்க்கையில் விட்டுக்கொடு விட்டுநீ கொடுக்கும் போது விண்தொட்டு வளரும் இன்பம் கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா எட்டியே நடக்கும் துன்பம்..........................................இந்தத் தோழமையைப் பார்த்தீர்களா?

எந்த ஆமை வேண்டுமானாலும் இருக்கலாம்; இந்த ஆமைமட்டும் இருக்கக்கூடாது என்பதை எவ்வளவு நயம்பட தோளில் கைபோட்டுப் பக்குவமாகப் பகர்கிறார் பாருங்கள்!

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்.."

வாழ்க்கையை நொடிப்பொழுதில் மூர்க்கத் தனமாய் முடிக்கத் துடிக்கும் முரடனைக்கூட அரவணைத்துச் சொல்லுகிற அசாதாரண அன்பைப் பாருங்கள்! சொல்லும் எளிமை; அதில் பட்டுத் தெறிக்கும் இனிமை பாருங்கள்;

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை
வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை
உணர்த்தும் இயற்கையை
உற்றுப் பார் சகோதரா..."

வெட்டரிவாள் சகிதமாக வெட்டிச் சாய்க்கும் கொம்பன் கூட இந்தக்கவிதையை ஒருமுறை வாசித்துப் பார்த்தால் வசிக்கவே தோன்றும், அவனுக்கும்!

குனிந்து நடக்கத் தெரியாமல் முட்டிக்கொண்ட பிறகு குனிகின்ற வர்க்கம் இங்கே! கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்து பழக்கப்பட்ட நம்மவர்களுக்கு நாசூக்காய் நாலுவரியில் எதார்த்தமாய்ப் புரியவைக்கும் பாங்குதனைப் பார்க்கின்றேன்.

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்
ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்
மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்..."

கவிஞர் புகாரியின் ஆழ்ந்த சிந்தனை! அழுத்தமான சொல்லாட்சி!

தமிழைப் பற்றிக் கவிதையாத்திருக்கிறார். ஒருவரிக்கு மறுவரி உயிர் கொடுக்குந் தன்மை அவர் கவிதையில் மிளிரக் காண்கிறேன்!

இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்........................................"

இந்தக் கவிதையைப் படிக்கும்போது சில்லென்ற நதி நனைப்பு திடீரென தேகத்துக்கு வந்துவிடுகிறது!

அழிவில் வாழ்வா? என்ற தலைப்பில் கலவரம் குறித்துக் கலவரத்தோடு எழுதும்போது இவன் நிலாக் கவிஞன் இல்லை; சூரியக் கவியாக உருவெடுக்கிறான்!

கலவரம்
அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

O

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா.......

புல்லின் ஒரு இதழைக் கூட மயில் தோகையாய் ஸ்பரிசித்துப் பார்க்க முடிந்தவர்களுக்கு மட்டுமே இப்படி எழுதுவது வசப்படும்! நீ! மனித ஜாதியை நேசத்தோடு பார்க்கும் பாசக் கவிஞன்!

உன் கவிதைகளை என் மனம் உரக்க வாசிக்கும்போது
நினைவு மேகங்கள் கூட்டம்கூட்டமாய்
எனக்குள் கடந்து கொண்டிருக்கிறது.

உன் கவிதைகள்
என் புலன்களைப் பூக்கவைத்திருக்கிறது~!
உன் கவிதைப் பறவை
என் வானத்தில் பறந்து போகும்போது
என் மீது அதன் நிழல் படிகிறதே!
அந்த நிழல் பட்டு மூலிகை வெளிச்சமாய்
மனம் மலருகிறதே!


கவிஞர்கள் சகோதரர் புகாரியின் கவிதையை அக்குவேறு ஆணிவேறாக அலசி இங்கே சொல்லிவிட்ட பிறகு நானும் அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சொல்லப் போவதில்லை;

எமக்குத் தொழில் கவிதை!
நாட்டுக்கு உழைத்தல்!
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

என்ற மாகவியின் வாரிசாக நான் புகாரியை இங்கே பார்க்கிறேன். இவன் விருதுகளுக்காக சோரம் போகாதவன்! காசுக்காக சிறகுவிரிக்காத கவிக்குயில்!

கல்லை நொறுக்குமொரு வலுவிருக்கும் - அந்தக்
கவியுளத்தில் ஆவேசம் கொலுவிருக்கும்!
வில்லிலிருந்து ஒரு கணை பறக்கும் - அந்த
வேகத்திலே அதில் கனல் தெறிக்கும்...

என்ற ஜெயகாந்தன் எப்போதோ, எதற்கோ எழுதிய பாடல்வரிகள் நம் நேசக் கவிஞர் புகாரிக்குப் பொருந்தும்!

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் !
பண்ணோடு சந்தமும் வரும் - பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்!

என்ற அந்தப் பாடல் வரிகள் ஏனோ நம் கவிஞருக்காகவே எழுதியதாக என் மனதில் தோன்றுகிறது.

எல்லோரும் உங்களை... இதயத்தை அலசிவிட்டதால் எனக்கென்று மிச்சம் வைக்கவில்லை. சந்தர்ப்பம் வாய்க்கும் போது பிறிதொரு முறை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் ஏற்புரையில் தமிழ் உலகு குறித்து எழுதிய

தமிழுலகே தமிழுலகே வா வா -

என்ற கவிதையை தமிழுலக தேசிய கீதமாக நாங்கள் ஏற்கிறோம்!

கடந்த ஆண்டு இதே நாளில் பேருவகை முகத்தில் பூக்க கவிஞர் புகாரி நம்மிடையே வலம் வந்தார்; அந்தப் புன்னகை இன்று பன்மடங்காகக் கூடி இருக்கிறது; கடந்த ஆண்டு தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞராக அறிவிக்கப்பட்டார்; இன்று "அன்புடன் இதயம்" ஞானப்பழத்துடன் இணைய உலகையே வலம்வந்து கொண்டிருக்கிறாரே!

இணைய உலகில் முதல், உலக மொழிகளில் முதல், தமிழ் நூல்களில் முதல் என்று முதல் விழாவாக கடந்த ஒருவாரகாலம் இரவுபகலாக நடைபெற்றுள்ளது. இணையத்திலேயே ஒரு மாநாடு போல நடந்து முடிந்திருக்கிறது.

இந்த விழா மாலன் அவர்கள் குறிப்பிட்டது போல,

இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்.
தமிழ் என்பதாலே வாய்த்தது இந்தத் தகமை.
சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.
கணினியும் காலமும் நம் கைகளில் தந்ததிது.
இப்போது சொல்லுங்கள்,
இது பொற்கணமா இல்லையா?
பூபாளம் இசைக்கின்ற புது விடியல் பொழுதல்லவா?"

என்ற வரிகளை நான் இங்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் உலகின் ஆஸ்தானக் கவிஞராக சகோதரர்.புகாரி அறிவிக்கப்பட்டு இன்றோடு ஒருவருடம் நிறைவு பெறுகிறது. இன்றைக்கு இன்னொரு அறிவிப்பை வெளியிடுகின்ற நிலையில், இந்தப் பொறுப்பை தமிழ் உலகில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கு அளிப்பது என்ற எங்கள் நிலையில் ( மட்டுறுத்துனர்கள் பழனி, மணியம், நான்) இந்த வருடத்துக்கு உரியவர் யார் என்று ஆய்ந்தோம்.

ஆய்வுகள் பலகட்டமாக எங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு இறுதியான ஒரு முடிவு....ஆனால் உறுதியான முடிவாக அதை எடுத்தோம். எடுத்த பிறகு இதை சம்பந்தப்படவருக்கு முதலிலேயே தெரிவிப்போமா என்று ஆலோசித்தோம்.

பின்னர் அது நமக்குள்ளாகவே இருக்கட்டும் விழாவில் அறிவிப்போம் என்ற முடிவுக்கு வந்தோம். இந்த விழாவை ஏறத்தாழ டிசம்பர் மாதத்தில் துவங்கி விழாவை எப்படிச் சிறப்பாக நடத்துவது என்று நாங்கள் மூவரும் திட்டமிட்டோம்; திட்டமிட்டபின்தான் சகோதரர் கவிஞர் புகாரியை அழைத்து விபரத்தைச் சொன்னோம். அவருக்கே உரித்தான சங்கோஜத்திலும், சந்தோசத்திலும் உங்கள் விருப்பம் அண்ணா என்றார்

அதற்கு வடிவம் தர இந்த விழாவை ஏற்பாடு செய்து கவிஞர்களை அழைத்து வாழ்த்துரை வழங்க அழைப்போம் என்ற போதுதான் எங்களுக்கு பெருத்த சோதனை ஏற்பட்டது. அதை நான் இங்கே சொல்லப் போவதில்லை; அடுத்ததாக இந்த விழாவை நடத்தவிடக்கூடாது என்பதில் சிலர் இரகசியமாக ஈடுபட்டு இவருக்கு ஏன் நீங்கள் விழாவெடுக்க வில்லை? இவரை ஏன் நீங்கள் விழாவில் சேர்க்கவில்லை?

இவருடைய புத்தகத்தையும் நீங்கள் இதோடு சேர்த்து வெளியிடலாமே என்றெல்லாம் எங்களைக் கேட்டு தர்ம சங்கடத்துக்குள்ளாக்கினர். இவர்களுக்கு விளக்கமளித்து, இதற்கான காரணகாரியத்தையும் சொல்லி இந்த விழா இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை; இது ஒரு தொடக்கம் தான்; முடிவல்ல; என்று சொல்லி எல்லோருக்கும் இது போன்ற வாய்ப்பை அளிக்க தொடர்ந்து ஆவன செய்வோம் என்று தொடர் மடற்போர் நடந்தது.

ஏளனம் செய்தார்கள்; எள்ளி நகையாடினார்கள்; இதை இப்படியே அனுமதித்தால் இந்த விழா நடக்காது, என்ற முடிவுக்கு வந்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம்;

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

என்பதற்கொப்ப எங்கள் வேலைகளைக் கவனிக்கத் துவங்கினோம்.

அழைப்பிதழ் மூன்று நாள் அவகாசத்தில் தயாரிக்க வேண்டியதாயிற்று.

மாலன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது உடனடியாக, இது மகிழ்ச்சிக்குரிய குடும்பக் கடமை அல்லவா! நிச்சயம் பங்கேற்கிறேன், என்று சொல்லி உடனடியாக ஒப்புதல் தர இரவோடிரவாக எல்லோருக்கும் மடலனுப்பி அவர்கள் ஒப்புதலையும் மறுநாளே பெற்று அழைப்பிதழ் தயாராகி இதுதான் என்றபோது ஒரு அணுகுண்டு வெடித்தது! அண்ணன் பழனி அவர்கள் அவசரமாக ஆஸ்திரேலியா செல்லவேண்டிய நிர்ப்பந்தம்! எனக்கு வலதுகரமாக இருந்த அவர் என்ன செய்வது தம்பி நான் பிப்.20ம்தேதி தான் திரும்ப முடியும்;

சமாளியுங்கள் என்று கூறிப் பறந்துவிட்டார். என் மனம் அவருக்குச் சங்கடத்தோடு விடைகொடுத்தது. அங்கிருந்து எப்படியும் நான் தொடர்புகொள்வேன் என்றார். என்ன சூழலோ விழா முடியும் வரை அவரால் இதில் பங்கேற்க இயலாது போனது ஒரு வருத்தமான விசயம்தான்! நானோ, இரவுப் பணி புரிபவன்! இரவுப் பணி செய்துவிட்டு உறக்கம் தொலைத்து கணினியோடு..உங்களோடு இந்த விழாவில் அய்க்கியப்படுத்திக் கொண்டு செயல்பட்டேன்; இடையில் உடல்நலம் கெட்ட்து; சளி,காய்ச்சல், இருமல் என்று வாட்டியது;

சங்கமம் ஆசிரியர் அண்ணா, இதழ் வேலை அப்படியே கிடக்கிறது என்று அவர் ஒரு பக்கம் இடிக்க; உடம்பு கெட்டுப் போகும் ஓய்வெடுங்கள் என்று எங்கள் வீட்டிலும் போர்க்கொடி; இதனால் சில விசயங்கள் எதிர்பார்த்தபடி செய்ய முடியாமற் போனது; அதனால் சிலரின் பங்களிப்பு பெறமுடியாதும் போனது.

தமிழ் உலக விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிக்க ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்துத் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் சார்பாக கைகூப்புகள்! உங்கள் கரமலர் ஒற்றி எம் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

இந்த விழா ஒரு முடிவல்ல;
ஒரு தொடக்கம்தான்.

உங்களின் பேராதரவோடு இணையத்தில் வசப்படும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்தி இன்னொரு விழா எடுக்கும் நாள் தொலைவில் இல்லை; அதில் விடுபட்ட கவிஞர்களும், எழுத்தாளர்களும் சிறப்புச் செய்யப்படுவார்கள் என்ற உத்திரவாதத்தை மாத்திரம் சொல்லி உங்களிடமிருந்து விடைபெறும் முன்பாக ஓர் அறிவிப்புச் செய்கிறோம்.

2004-2005க்கான தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞராக
*** சகோதரி மும்பை மாதவி ***
அவர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்;

உங்கள் பேராதரவை அவருக்கு நல்கி அவருக்கு எங்கள் வாழ்த்தைச் சொல்லி மகிழ்கின்றோம். நீங்களும் அவருக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அவருக்கு அன்பெனும் மாவிலைத் தோரணம் கட்டி, வரவேற்பு வளைவு அமைத்து வருகவருகவென்று வரவேற்று வாழ்த்துப் பா பாடுவோம்.

நன்றி. வணக்கம்.

அன்புடன்,
ஆல்பர்ட்,
பழனி,
மணியம்,
தமிழ் உலக மட்டுறுத்துனர்கள்
மற்றும்
விழா ஏற்பாட்டாளர்கள்.

 
 

'எழில் நிலா'வின் சிறப்புப்பக்கம்