| |
|
|
 |
| |
12.
பொற்கிழி, பொன்னாடைகள், பூமாலைகள் |
|
| |
அமீரகத்திலிருந்து சகோதரி உஷா கவிஞர் புகாரி
அவர்களுக்கு ஒரு வாழ்த்தைச்சொல்லி பொன்னாடை அணிவிக்க
விரும்புகிறார்...... கவிஞரே...கொஞ்சம் உஷா அவங்ககிட்ட ஒலிவாங்கியை...
சரி...சரி.. ம்ம்ம்...நீங்க பேசுங்க...
பெரியவர்கள் நிறைந்த சபை, என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற பயத்தில்
ஒதுங்கி நின்று சுகமாய் செவிக்குணவு கிடைத்துக் கொண்டிருக்கும் போது
என்னையும் பேச சொல்லி சகோதரர் ஆல்பர்ட் அவர்கள் மேடையேற்றிவிட்டார்.
தமிழில் அதிக பயிற்சியில்லாத எனக்கு கதையோ, கவிதையோ எளிமையானவைதான்
புரியும். திருகுறளும், பாரதியும் இன்றும்
நிலைத்து நிற்பதற்கு அதன் எளிமைதான் காரணம் என்பது எண்ணம். அதிக
படிப்பறிவில்லாதவர்கள் கூட சர்வசாதாரணமாய் திருக்குறளை சொல்வதை நாம்
பார்த்திருப்போம். புகாரியின் கவிதைகளும் எனக்கு புரியும்படி எளிமையானவை.
கண்களில் அருவியை நிறுத்து என்று தோழனுக்கு சொல்லும் கவிதையை தோழி என்று
மாற்றி படித்தேன். அத்தனையும் எனக்கு சொல்வதாகவேயிருந்தது. பல
பெரியவர்கள், கற்றவர்கள், கவிஞர்கள் வாழ்த்துவிட்டார்கள்.
இணைய நண்பர் கவிஞர் புகாரி இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து பேரும்
புகழும் அடைய வாழ்த்தி
இந்த பொன்னாடையை கவிஞர் புகாரிக்கு அணிவித்து மகிழ்கின்றேன்.
உஷா

வணக்கம் சபையோரே!
ஏற்புரையை கவி நடையில் மிக அற்புதமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிஞர்
புகாரி அவர்களுக்கு, கனடிய மண்ணின் தமிழ் உலக அங்கத்தவர்கள் சார்பாக
இந்த மலர்மாலையை மாணிக்கமாலையாகச் சூட்டுகிறேன்.
மகேன்

அன்பு தமிழ் உலக நெஞ்சங்களுக்கு,
நண்பர் கவிஞர் புகாரியின் கவிதை விழாவிற்கு காலம் தாழ்ந்து வந்ததாலும்
கண்களும் விழியும்போன்ற கவின் மலர் கவிதைக¨ளைப் பற்றிய தங்கள்
எண்ணங்களை வண்ணமாக்கி எழில்மிகு ஓவியங்கள் எழுந்துக் கொண்டிருப்பதை
காணுவதில் பெரும் மகிழ்ச்சி. இதுவரை யாரும் செய்யாத புதுமையான ஒரு
நிகழ்ச்சி- நிழல் வெளியில் நூல்வெளியீடு . அந்தப் புதுமை தமிழ்
உலகத்தில் நடப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.இங்கு வந்துக்
கொண்டிருக்கும் எழ்த்துக் குவியல்களைக் கண்டப் பின்னும் நானேதாவது
எழுதினால் இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலையென்று எண்ணம்
எழாமலில்லை.
ஒரு கவிதையில்
"நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்"
என்று கவன்றிருந்தார் நண்பர். இங்கு வந்துக்கொண்டிருக்கும் கருத்துக்
குவியல்கள் அவரது கவலைகளை மாற்றியிருக்கு மென்று நம்பலாமா? இனி கடை
விரித்தேன் கொள்வாரில்லையென்று எண்ணவேண்டாம் நண்பரே. உங்கள் கவிதைகள்
படிக்கப் படுகின்றன. அதனால் இனி எதிர் வினைகளைப பற்றி கவலுறாது எழுதிக்
கொண்டிருங்கள்.
இந்த நிகழ்ச்சியில் இன்னொரு புதுமையென்னவென்றால் பார்க்க முடியாத பலரை
காணமுடிந்ததுதான். பலமுறை இலண்டன் சென்றாலும் காணமுடியாத இலண்டன்
சிவாவே இந்த விழாவிற்கு வந்திருக்கின்றாரென்றால்!!
புகாரியும் தமிழுலக அறிமுகம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
அவரின் பெயரைப் பார்த்தவுடன் என்ன இப்படியுமொரு பெயர் உண்டோ என்று
வியந்தேன் ஏனெனில் அதுவரை அது உணவகத்தின் பெயராக மட்டும்
தான்தெரியும்:-)). அடுத்து சில கவிதைகள். அதைனையடுத்து ஒரு மடல் மனிதப்
பிறவி எடுப்பதே கவிதைப் படிப்பதற்காகத்தான் எனற பொருள் பட
எழுதியிருந்தார். என்ன விவகார மனிதராக இருப்பார்போலிருக்கிறதே.
கொஞ்சம்விட்டால் கவிதைகளைக் கண்டால் காத தூரமோடும் என் போன்றோரெல்லாம்
மனிதராக பிறகத் தகுதியில்லாதவர்களென்று கூறினாலும் கூறிவிடுவார்
போலிருக்கிறதே என்று எண்ணினாலும் அதன் பிறகு வந்த மடகள் எண்ணத்தை
முற்றிலும் மாற்றிவிட்டன. தன்னுடய தமிழ் உணர்வை பல் முறை தயங்காது
வெளிப்படுத்தியுள்ளார். தகுதியான மடல்களைக் கண்டால் உடனே பாராட்ட
தயங்கியதில்லை அதேபோல் அவரைப் பாராட்டி வரும் கடிதங்களுக்கு நன்றி கூற
மறந்ததில்லை. மிக நல்லப் பண்பு நாமொவ்வொருவரும் -கண்டிப்பாக நான்!!-
கடைப் பிடிக்க வேண்டியப் பண்பு... இன்னொரு நிக்ழ்ச்சி. பாவேந்தர் விழா
தொடக்கம் பற்றிய அறிவிப்பு ஒரு நாள் இரவு வந்தது. மறுநாள் காலையில்
பாவேந்தரை பற்றிய வைரக் கவிதை யன்று ஒளிவீசிக்கொண்டிருந்தது
தமிழ்லுகத்தில். திருச்சி வானொலி நிலையத்தில் நடந்த பாரதியார்
விழாவிற்கு தலையேற்ற பாவேந்த தன் கவிதையை விழவிற்கு ஒரு சில
மணினேரங்களிலெழுதிய நிகழ்வுதான் என் நினைவிற்கு வந்தது..அலுவலுக்கு
இடையே குறுகியக் காலத்த்ல் எழுதிய அவர்கவிதைத்திறத்தை பாராட்டாமல்
இருக்கமுடியுமா?
கவிஞனுக்கு கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும் என்பார்
பாவேந்தர். இந்தக் கவிதனத்தை நம்புகாரியிடம் நிறைக்காணலாம். நம்
பாவேந்தர் ஏடொன்று எடுக்க கவியன்று எழுதிடப் பணித்து எழுந்ததாம் வான்.
என் நினைவைவிட்டு அகலாத பாவேந்தரின் கவிதைகளில் அதுவொன்று., நம்
புகரிக்கோ விழும் நயாகார விழ்ச்சிமட்டுமல்ல , கனடாவின் கடும்குளிரும்
கூட கவிபுனையவைத்திருக்கிறன. நீர் குளிர் மட்டுமல்ல, தென்றலாய் வந்து
காற்றையும், நெருப்பின் நெறுக்கத்தையும் பாடி ஊடே வானத்தையும்
அளந்திருக்கிறார்.
காதலைக் கூறி, காதலியைப்பாடி, திருமணத்தைப் பற்றி புகழ்ந்து விட்டு கூடவே
பிரிவுத்துயரையும் மறக்கவில்லை. வெளினாடு செல்லும் பலருக்கு அது
பொதுவல்லவா?
பனி மலரே புது நிலவே
பருவமழை தேன் துளியே
தனிமரமாய் நின்று
தவிப்புடனே என்னை நோக்க
கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளினாடுபுறப் பட்டேன்
போன்ற வரிகள் சிலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வன்றோ அமைந்து
விடுகின்றன.
தமிழரென்று கூறிக்கொள்பவர்களுக்கு தமிழ் மீது பற்று வேண்டும்.
தமிழைவைத்து ஏய்க்கும் கூட்டமும், தமிழைவிற்று வயிறு வளர்க்கும்
கூட்டமும் பெருகுவரும் இந்நாளில் நல்ல தமிழ் பற்று உள்ளவர்களைக்
காண்பதே அருகிவருகிறது. .தமிழில்' தன் கவிதைத் தொகுப்பைத் தொடங்கி
இதயத்தில் இனிக்கின்ற
மொழி-தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்
என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
'தமிழை மறப்பதோ தமிழா' வில் தன் தமிழ் பற்றை வெளிச்சம் போட்டு
காட்டுகிறார்.
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
...
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
...
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ
நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
.....
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா
ஒவ்வொரு தமிழரும் நினைவில் நிறுத்த வேண்டியவை.
இன்னும் இதுபோன்ற பல கவிதைகளை அவரிடம் காணத்தான் போகிறோம்.
வாழ்த்துகள்,
அன்புடன், பிலிப், ஹாங்காங்

கவிஞரின் ஏற்புரை முடிந்துவிட்டால் கூட்டம் கலைந்துவிடும் நாங்கள்
ஒன்றிரண்டு வார்த்தைகள் அவரை வாழ்த்தி இந்தப் பட்டாடையை அணிவிக்கிறோம்
என்று சகோதரி கவிஞர். உதயசெல்வியும் அவரது கணவர் ஜோதியும் சேர்ந்து
இப்போது மேடைக்கு வந்துள்ளனர். கவிஞரே உங்களுரையில் குறுக்கிடுவதற்கு
மன்னியுங்கள். ம்ம்ம்..வாங்க...வாங்க....சீக்கிரம் முடிச்சிக்கங்க...
விழாத் தலைவர் திரு. மாலன் அவர்களே!
விழா நாயகன் கவிஞர். புகாரி அவர்களே!
அவை நிறைந்த அறிஞர் பெருமக்களே!
நட்பு நெஞ்சங்களே!உறவுக் கூட்டமே!
அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்!
'அன்பின் இதயம்' என்று கவிதைத் தலைப்பை தொகுப்புக்குச் சூட்ட
தேர்ந்தெடுத்த விதமே அவர் இதயத்தை நமக்குப் பறை சாற்றுகின்றதே! அவரின்
அத்தனை கவிதைகளிலும் விரவிக் கிடப்பது அந்த கவிமனதின் மனிதநேயமே.
தமிழையும் அதே நெகிழ்சியோடும் அது தன் மொழியென்ற பெருமையோடுமே
பாடுகிறார்.
இந்தத் 'தமிழ்' கவிதையையும் 'நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை'
கவிதையையும் நம் குழந்தைகளை வாய் விட்டுப் பாடச் சொல்லலாம். பொருள்
கூறி விளக்காமலேயே உணர்வு பொங்கப் பாடமுடியும் அவர்களால். அவ்வளவு
உணர்ச்சி பொங்கும் கவிதைகள். இவர் காதல் நிராகரிக்கப் பட்ட போதும் சரி
காதலை இவர் மறைக்கும் போதும் சரி அது வெறும் உணர்வுப் பூர்வமானதாக
இல்லாமல் அறிவின் துணையோடே அதையும் அணுகுவது அழகு! 'அழிவில் வாழ்வா'
கவிதையில் கவிமாமணி சொன்னது போல் இவரின் அணுகுமுறை மனிதம் மீது கொண்ட
நிஜமான அக்கறையில் பாடப்படும் கவிதையேயன்றி வெறும் சொற்களன்று!
பஞ்சபூதக் கவிதைகள் படித்துச் சுவைக்க வேண்டிய கவிதைகள். இவைகளில்
இவரின் கவிதிறனும், தமிழ் பற்றும், அறிவியலை கையாண்டிருக்கும் விதமும்
படித்து இன்புறத்தக்கவை. பிடித்த வரிகளை பாடப் போனால் நேரம் போதாது.
தொகுப்பு முழுக்க அசத்தும் கவிவரிகள். இவரின் தமிழ் தாகம் தீராது
தொடரட்டும் என்றும் கவித்திறன் வற்றாது வளரட்டும் என்றும் கவிஞர்
நீடூழி வாழி என்றும் வாழ்த்தி இந்தத் தூய பட்டாடையை அணிவித்து
(பட்டாடையை ஜோதி அணிவிக்கிறார்.... கவிஞர் புன்முறுவலோடு பெற்றுக்கொண்டு
இருவரிடமும் எதோ சொல்கிறார்..)
விடை பெறுகிறோம்.
உதயா & ஜோதி

கானடாவிலேயே மூன்றுபத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் காரணத்தால் எனக்குத்
தமிழ் நூல் வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளைக் காணவோ பங்கெடுக்கவோ
கிடைத்த வாய்ப்புகள் மிகச் சிலவே. எனவே, இங்கு அமர்க்களமாய் நடக்கும்
இணையவெளி விழா பிறர்க்குக் கிடைப்பதை விட முப்பது மடங்கு அதிகமான
மகிழ்ச்சியை எனக்குத் தருகிறது!! இவ்விழாவின் சிறப்பை இங்குள்ளோர்
அறிந்துகொள்வதற்காக நான் இப்போது கவிஞர் புகாரிக்குக் கனேடியப்
பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையைச் சாற்றுவதைக் கனேடியத் தொலைக்காட்சித்
திரையில் இன்றிரவு காட்டுவதற்கென, சிபிசி (CBC) படப்பிடிப்பாளரைக்
கையோடு கூட்டிவந்திருக்கிறேன். புகாரியின் மாலை அணிந்த மலர்ந்த
சிரிப்பும் உங்கள் மகிழ்ச்சி முகங்களும் கைதட்டலும் நன்கு தெரியும்படி
எல்லோரும் காமிராவைச் சிலநிமிடங்கள் பாருங்கள். ஆகா, அருமையாக
வந்துள்ளது, நன்றி!
அன்புடன் அனந்த், ஹாமில்டன், கனடா
பி.கு. மணியம் அவர்களே! உங்களுக்கு முன்பாக நான் நூலைப் பெற்றுக்கொள்ள
வேண்டிய கட்டாயமும் அப்போது அங்கு வந்த சிபிசி தொலைக்காட்சிக்காரர்
என்னை அவசரப்படுத்தியதால் வந்ததுதான்!

வணக்கம்
>அன்பின் நண்பர்களே,
>எப்பவாவது உணர்ச்சிவசப்பட்டு விசிலடிச்சிட்டேன்னா முதுகுல
இப்பொழுதுமா? (இப்பவுமா?) :-)))
>ஓரமாக நின்றாலும்
>ஒதுங்கி விடாத
>ஆசிப் மீரான்
அன்புடன்
திரு

வணக்கம்
> வானம் உடைக்கும் உளியோடு - இந்த
> வையம் பிளக்கும் வாளோடு
> யாரோ ஒருவன் வருகின்றான் - அவன்
> எழுதும் போதே வாழ்கின்றான்
கவிஞர் புகாரி அவர்களுக்கு இந்த மலர்மாலையை வைரமாலையாகச் சூடி
அணிவிப்பதில் எங்கள் தமிழ் சங்கம் , ஒட்டாவா மிகவும் பெருமை
அடைகின்றது. வாழ்த்துகின்றோம்
அன்புடன்
திரு

அன்பினிய நண்பர்களே! கவிஞர் கண்ணதாசன் அவர்களை அறியார் எவரும் இங்கிருக்க
மாட்டார் என்று நம்புகிறேன். அவரின் உறவினரான மீனா அவர்கள் இப்போது
கவிஞரை ஓரிரு வார்த்தைகள் கூறி வாழ்த்த வருகிறார். கண்னதாசனே வந்து
வாழ்த்துவதாகக் கருதுகிறோம்.....
( கைதட்டல்கள் தொடர மீனா மேடைக்கு வருகிறார்....)
அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய எங்களின் கவிஞர் புகாரி! தங்களின்
"அன்புடன் இதயம்" இதயத்தை விட்டு என்றும் நீங்காது எல்லாக் கவிதகளும்
ஒன்றுக்கொன்று சிறப்பாக இருக்க எதை பாராட்டுவது? எனக்கு மற்றவர்கள்
போல் தனித்தனியாக பாராட்டத் தெரியாது அத்தனையும் அற்புதமாய் இருக்கிறது
அதில் என்னைக் கவர்ந்தது
'தமிழ்'
வைரமாக,எழுத்தாக,சுகமாக,வாசமாக,வானமாக,வளமாக,
மழையாக,உணர்வாக,தாகமாக,இளமையாக,சிறகாக,கருணையாக, மானமாக,புனிதமாக
எத்தனை விதமாக அந்தத்தாயை பார்க்கிறீர்கள்! பிரமித்துப் போய்விட்டேன்!
"வேங்கூவர் கனடா"
பார்க்காத கனடாவைப் பார்க்க வைத்தது!
அம்மாவந்தாள் அருமை!
குடியரசுத்தலைவர் குறித்த கவிதை! ஆம் அவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்!
எழுதக் கூடாத கடிதம் எல்லோர் மனதிலும் இப்படி ஒரு கடிதம் இருக்குமோ
என்னை பாதித்தது கவியரசனே கண்ணதாசனே.
இவரின் ஊரில் (உறவினராக) பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் இவரைப்
பற்றி எழுதிய இக்கவிதை எனக்கு கண்ணீரை வரவழைத்தது
அன்புடன் இதயம்
ஆஹா அன்பே நீ என் உடன் வருவாயா!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல்!!
எப்பொழுதும் இதுபோல் கவிதைகளை வாரி வழங்க ஆண்டவன் அருள் உங்களுக்குக்
கிடைக்க வேண்டி வாழ்த்தி இந்தப் பொன்னாடையைப் போர்த்துகிறேன்.
( கைதட்டல்கள்.....அரங்கம் அதிர்கிறது )
வணக்கம். நன்றி.
மீனா., சிங்கப்பூர்

அன்பிற்குரிய நண்.பிலிப் எங்கிருந்தாலும் சரியான தருணத்தில் வந்து
பாராட்டுக்குரியவரைப் பாராட்டத் தயங்கமாட்டார் என்பதை அறிந்தோம்.
சிங்கை தேசியக் கல்விக்கழக பேராசிரியர் கலைமணி புகாரி விழா குறித்து எதோ
சொல்லுகிறார்... அது எங்களுக்கு காதில் விழவில்லை. அன்பிற்குரிய மணியம்
அருகிலிருக்கிறார்... என்று எண்ணுகிறேன். அவர் என்ன சொல்ல
விரும்புகிறார் என்று கேட்டு மீண்டும் ஒரு முறை ஒலி வாங்கியருகே வந்து
தெளிவாகச் சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஆல்பர்ட்.

கவிஞர் புகாரியின் ஏற்புரைக்கு இடையே, அவரை பொன்னாடை போர்த்திக்
கெளரவிக்க விரும்புகிறார். நம் தமிழ் உலக உறுப்பினரும், சிங்கப்பூர்
தேசிய கல்வி கழக தமிழ்ப் பேராசிரியருமான கலைமணி! கவிஞருக்குப் பொன்னாடை
போற்ற, இதுவரை அமைதியாக நிகழ்வை ரசித்த திரு கலைமணி அவர்களை மேடைக்கு
அழைக்கிறோம். திரு கலைமணி....... வாங்க...வாங்க... கைதட்டல்கள்....கர
ஒலிகள்............................ ஒன்றிரண்டு விசில் சத்தங்கள்....

அவையோருக்கு என் வணக்கங்கள். எனக்கும் கவிதைக்கும் விண்ணுக்கும்
மண்னுக்கும் உள்ள தூரம். ஆனால் கவிஞர் புகாரியின் - அன்புள்ள இதயம் -
படித்தபின்னும், இங்கு இந்த நிகழ்ச்சியில் பேசிய பெரியோர், சான்றோரின்
உரையைக் கேட்டபின் எனக்கும் கவிதைமீது ஒரு காதல் வந்துவிட்டது. இது
காதலர்தினத்தின் தாக்கமா அல்லது மொழியின்மேல் எனக்கு ஏற்பட்ட காதலா !
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை
என கண்ணதாசன் பாடிச்சென்றார் அனால் நானோ - நான் கவிஞன் இல்லை அனால் நல்ல
ரசிகன் மட்டும் இல்லாமல் ஆஸ்தான கவிஞர் புகாரிக்கு இன்று இந்த
பொன்னாடையை, வைர வைடூரிய இழைகளால் நெய்யப்பட்ட இவ்வாடையை போர்த்துவதில்
பெரு மகிழ்வெய்துகின்றேன். இந்த வாய்பை அளித்த தமிழ் உலக அன்பர்களுக்கு
எனது
நன்றி
கலைமணி

கவிஞரின் ஏற்புரையை அடுத்து அடைமழை போல் உங்கள் கரவொலி நடந்து
முடியட்டும் என்று காத்திருந்தேன். எங்கள் அன்பிற்கினிய சகோதரர் கவிஞர்
புகாரி அவர்கள் தன் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர்களை எல்லாம்
பட்டியலிட்டு இதுகாறும் நன்றியை ஏற்புரைத்தார்கள். அவருக்கு
விழாக்குழு, ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றி.
இப்போது தமிழுலகம் சார்பில் நண்பர் மகேன் கவிஞருக்கு பொற்கிழி வழங்கி
வாழ்த்த அழைக்கின்றேன்
மணியம்

இந்த இணையவெளிப் பந்தலில் குழுமியிருக்கும் என் இனிய நண்பர்களே!
அனைவருக்கும் வணக்கம்!
ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்த இணையவெளியில் மின்னஞ்சல் மூலமாகவும்
வலைத்தளங்கள் வாயிலாகவும் சந்தித்த இதயங்கள் பலநூறு.
இதில் மறந்துபோனவர்கள், மறைந்துபோனவர்கள், விலகிப்போனவர்கள் என்று
பார்க்கும்போது எஞ்சியிருப்பவர்கள் சிலநூறு.
அந்தச் சில நூறு இதயங்களில் இந்த "அன்புடன் இதயம்" புகாரியும் ஒருவர்.
இவர் எனக்கு அறிமுகமானதே கவிதை மூலம்தான்.
புகாரி எழுதிய கவிதைகள் பலவற்றை நான் வாசித்திருக்கின்றேன். நான்
வாசிக்காமல் விட்ட கவிதைகள் என்றால் அவை நீ....ள...மான கவிதைகளாக
ஒருவேளை இருந்திருக்கலாம். (நண்பர் புகாரி மன்னிக்கவும்)
அவரின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது என்று சொல்வதானால் "உலகம்"
என்ற கவிதையாகும். இதுதான் நான் வாசித்த அவரின் முதல் கவிதை.
அக்கவிதையை நான் முதலில் வாசித்தபோது எனது மனதில் சிறிது தாக்கத்தை
ஏற்படுத்தியது அந்தக் கவிதை. என்னைச் சற்றுச் சிந்திக்க வைத்தது.
அப்போதே அக்கவிதையை எடுத்து எழில் நிலாவில் "எனக்குப் பிடித்த
கவிதைகள்" பகுதியில் சேர்த்துக்கொண்டேன்.
இப்போதும் சில சமயங்களில் அக்கவிதைப் பக்கத்திற்கு போய் அதனைப் படித்துப்
பார்ப்பேன்.
என்னைப்பொறுத்தவரை கவிதை என்பது அதனை வாசிக்கும் ஒருவர் மனதில் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை அதனை வாசிக்கத்தூண்ட
வேண்டும்.
இதனை நண்பர் புகாரியின் கவிதைகள் செய்யத்தவறவில்லை.
உதாரணத்திற்கு அன்புடன் இதயம் தொகுப்பிலிருந்து சில கவிதை வரிகள்..
"கலவரம்
அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்"
***
"ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்
ஆக,
ஊதாரிதானே ஆண் "
***
"தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ"
***
"ஞானத்
தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது
வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு
மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது "
ம்.. சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்..
அவரின் 'அன்புடன் இதயம்' கவிதைகளை இங்கு பல நண்பர்கள் மதிப்புரை
செய்திருந்தனர். பல கவிதைகள் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப்பட்டு
விமர்சனம் செய்யப்பட்டன. எனவே அதனை நானும் செய்யாமல் அவரிடம் ஒரு
அன்பான வேண்டுகோள்!
சாதி, மதம், மொழி, இனம் என்பனவற்றிலான சகல வன்முறைகளும் ஒழிய, சகல
வழிகளிலுமான அடக்குமுறை அழிந்து போக, யுத்தமில்லாத பூமி வேண்டி நிறையக்
கவிதைகள் பாடுங்கள்! நண்பரே!! நிறையக் கவிதைகள் பாடுங்கள்!
நண்பர் புகாரியின் கவித்திறன் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துவதுடன் இந்த
இணையவெளி கவிதா நூல் வெளியீட்டு விழாவை ஒழுங்கு செய்த அனைத்து
இதயங்களையும் அன்புடன் வாழ்த்திக்கொண்டு, தமிழ் உலக மடலாடற்குழு
சார்பில் இந்த பொற்கிழியை கவிஞர் புகாரிக்கு வழங்கி அவரைக்
கௌரவிக்கின்றேன்.
அட, எங்கே இந்த பொற்கிழி என்று கேட்கின்றீர்களா?
"அன்புடன் இதயம்" என்ற இந்த கவிதைத் தொகுப்பு என்றுமே இணையவெளியில்
இருப்பதற்காகவென ஒரு தனி வலைப்பக்கத்தை உருவாக்கி ஏற்றியுள்ளேன்.
இதுதான் நான் அவரிற்கு "தமிழ் உலகம் மடலாடற் குழு" சார்பில் அளிக்கும்
பொற்கிழி.
இத்தளத்தில் மிக விரைவில் இந்த இணையவெளி கவிதா நூல் வெளியீட்டு விழாவில்
இடம்பெற்ற அனைத்து உரைகளும் தொகுத்து வெளியிடப்படும்.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் நண்பர் புகாரி அவர்களே!
புத்தம் புதிதாகப்
....பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில்
....பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும்
....அன்பு வேண்டும்
சித்தம் கலையாத
....பண்பு வேண்டும்
புத்தம் மறவாத
....புனிதம் வேண்டும்
ரத்தம் பழகாத
....மனிதம் வேண்டும்
சத்தம் வெல்லாத
....அமைதி வேண்டும்
யுத்தம் இல்லாத
....பூமி வேண்டும்
இவையும் புகாரியின் கவிதை வரிகள்தான்!
என் அன்பு வேண்டுகோளின்பேரில் "எழில் நிலா"விற்காக எழுதப்பட்ட கவிதை இது.
நன்றி. வணக்கம்,
அன்புடன்,
எழில் நிலா மகேன்.
 |
|
| |
'எழில்
நிலா'வின் சிறப்புப்பக்கம் |
 |
|
|