| |
|
|
 |
| |
6.
வாழ்த்துரைகள் - 1 |
|
| |
ஞான வெட்டியானின் வாழ்த்துரைக்கான அழைப்பு:
ஆல்பர்ட், அமெரிக்கா
இரவு உணவு அருந்துவோருக்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்துவிட்டு
தொண்டர்படையினருக்கான மறுநாள் பணி யினை விளக்கிச் சொல்லிவிட்டு வெளியே
வரும்போது தூரத்தில் பெரியவர் ஒருவர் கூட்டத்திலிருந்து முண்டியடித்துக்
கொண்டு வர சிரமப்படுவதை அறிய முடிந்தது. உடனே நான் அவருக்கு உதவலாம்
என்று விரைந்தால் அது அய்யா ஞானவெட்டியான்! இராசபாளையத்திலிருந்து!
அய்யா, வணக்கம்...என்று அவரைக் கூட்டத்தின் பிடியிலிருந்து விலக்கி,
பசியாறீட்டீங்களா? என்று கேட்டேன்?
தம்பீ....பசியாறியாச்சு.... கல்யாண விருந்து போல...அதும் செட்டிநாட்டுச்
சமையல்காரங்களைவிட்டு இப்படி ருசியா சமைச்சுப்போட்டா இந்த மாநாட்டை
விட்டுப் போக யாருக்குமே மன்சு வராதுங்க தம்பி.... இன்னம் கைகழுவின ஈரம்
கூடப் போகல... இப்ப நா.. வந்தது முக்கியமா... நான் அவசரமா கெளம்பணும்....
நலல் பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமக் கொள்ளாம கெளம்புறதும்பாங்க... இந்த
அருமையான வெழாவுக்கு வந்துட்டு ரெண்டு வார்த்தை புகாரித் தம்பிக்காக
பேசாமப் பாஒனா எப்டி? அதான்...நீங்க கொஞ்சம் ஒதவி
செய்யணும் என்றார்.
என்ன அவசரம் அய்யா..கெளம்புரதுக்கு இப்ப...? அதற்கு...
கடலலையெனக் குழுமியுள்ள தமிழ் உள்ளங்களால் அழுத்தப்பட்ட சங்கெனக் கிடந்து
தங்கள் உதவியினைக் கோருகிறேன். என்னை எப்படியாகிலும் மேடைக்கழைத்து "அன்புடன்
இதயம்" நூல் வாங்கித்தந்துதவ வேண்டும்.
முடிந்தால் என் உள்ளக் கிடக்கையை வெளியிட நான்கு வார்த்தகள் பேச
ஒலிவாங்கியையும் வாங்கித்தர வேண்டுகிறேன். அவசரமாக விசயவாடா
செல்லவேண்டும். காலம் தாழ்த்திச் செலின், தொடரி சென்றுவிடும். மிக்க
அவசரம்...என்றார்.
மேடையைப் பார்த்தேன்.
திருச்சியிலிருந்து வந்த கலைக்குழுவினர் "எங்கே தமிழன்? என்ற வீதி
நாடகத்தை முடிக்கு தறுவாயில் இருந்தனர். அருகில் இருந்த அன்புவை
அழைத்து..காதில் ரகசியித்தேன். அன்பு புரிந்து கொண்டு அய்யா
ஞானவெட்டியானை மேடைக்கு அழைத்துச்சென்றார். மேடையிலிருந்த புகாரிக்கோ
இருப்புக் கொள்ளவில்லை. இருக்கையிலிருந்து எழுந்து ஞாவெயை ஆரத் தழுவி
வரவேற்றார். தன் கோட்டுப் பையில் கைவிட்டு எதையோ எடுத்துக் கொடுத்தார்.
பின்னர்தான் தெரிந்தது. அது அன்புடன் இதயம் நூல் என்று! கலைக்குழுவினர்
முடித்துவிட்டதற்கு அறிகுறியாக அரங்கில் கரவொலி எழ... அன்பு ஒலிவாங்கி
அருகே சென்று இப்போது இராசபாளையத்திலிருந்து அய்யா ஞானவெட்டியான் ஓரிரு
வார்த்தைகள் உங்கள் முன் பேசுவார் என்றதும்... அடடே இவங்க தான் அய்யா
ஞானவெட்டியானா? என்ற கிசுகிசுப்புகளும் அவரை வரவேற்கும் முகமாக
கரவொலியும் சீராக அரங்கில் எழுந்தது... சரி..என்று அடுத்த வேலையைக்
கவனிக்க நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
-ஆல்பர்ட்.
வாழ்த்துரை: ஞானவெட்டியான், தமிழ்நாடு
அன்பு கெழுமிய தமிழ் நெஞ்சங்களே,
வணக்கம்.
என் அவசரமறிந்து உதவிய அன்புத் தம்பி ஆல்பர்ட்டுக்கு நன்றி. முத்து
முத்தான முப்பது கவிதைகளை அள்ளித் தந்திருக்கும் தம்பி புகாரியே!
தினமொரு குறள் போல் தினம் ஒரு கவிதையாய் ஒரு மாதம் எழுதினாயோ?
முப்பதிலும் என்னை ஈர்த்தவை "பஞ்சபூதம்"தான். தத்துவங்களைச் சொல்லாமல்
பாதியையும் துள்ளல் நடையில் மீதியைச் சொல்லியும் முடித்துள்ளாயே. அருமை.
அருமை.
"பஞ்சபூதம் தண்ணீர்
பிறந்தபோது உடைந்துவந்த
பனிக்குடமும் தண்ணீர்தான்"
ஆனால் பிறக்கும் முன் பாற்கடலில் பள்ளிகொண்ட எம்பெருமாள் போல்
அக்குடத்துள்தானே இருந்தாயெனவும்,
"தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்"
பாலெனும் தண்ணீரும் அன்னையின் உதிரமே எனவும் சொல்லாமல் சொல்லிய பாங்கு
என்னைக் கவர்ந்ததையா.
"கண்ணீரும் தண்ணீர்தான்
கருணைகூடத் தண்ணீரே
ஈரமில்லா உள்ளத்தை
இதயமென்று யாருரைப்பார்"
ஈரமில்லா உள்ளம் இதயம் இல்லை. இதயம் இல்லையெனில் உணர்வில்லை; சடம்தான்.
ஆகவே ஈரமில்லா
இதயத்தோரே! இனியாகிலும் கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறாயோ!
"ஓர்+அத்தா+நாட்டாரே"(ஒரத்தநாட்டார்)
(அரங்கில் பலத்த கரஒலி எழுந்து அடங்குகிறது...)
"நெருப்பு
வெளிச்சம் இன்றி விழிகள் இல்லை
வெளிச்சம் விரிய கலைகள் மலரும்"
விழிகள் மலர்ந்தால்தான்(பூரணை) கலைகள் மலரும். எத்தனை உயர்வான தத்துவக்
கருத்து.
"வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்"
ஆதவனின் எச்சம் வெளிச்சம். ஆதவனோடு நிலவும் கூட கிரகணம். ஓ! ஓ! அதுதானா
நெருப்பின் மச்சம்?
இடையிடையே அறிவியல்............ பாராட்டுக்கள்.
"நிலம்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை"
ஆம் ஐயா. அதில் விளையாததுவுமுண்டோ? அகழ்வாரையும் தாங்கும் பொருமை கொண்ட
அன்னைதான்.
"காற்று
இலைகள் ஊடே காற்றின் ஜாலம்
இசையைத் தேடும் ஆவல் நெய்தது
கலைகள் யாவும் காற்றின் ஆடல்
இலக்கியம் கூட காற்றின் தேடல்"
மூங்கிலில் கற்றோடி இசை வந்தது என்பர். ஆனால் இலயசைவினில் இசையைக்
காட்டிவிட்டீர்.
"ஆகாயம்
சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
அறியா நெஞ்சம் அறிந்தது கொஞ்சம்
அறியும் முன்னர் ஆறடி மிஞ்சும்"
ஆகாயம்தான் மூலம்; முடிவும·தே. தத்துவத்தின் சாரம். நெஞ்சம் அறிந்தது
கொஞ்சம். முழுவதும் அறியுமுன் ஆறடிக்குள் தஞ்சம். மனித வாழ்வதுதான்.
நிலையாமை. சூக்குமத்தில் நான்கு நிலைகள். அறிவு, உணர்வு, கருத்து,
நினைவு. இலக்கியவாதிகள் அறிவுடன் நின்றுவிடுகின்றனர். கவிஞன்
உணர்வுகளைக் கவிதைகளாக்குகிறான். ஆக கவிஞன் இரண்டாம் நிலைக்கு உயர்ந்து
விடுகிறான்.
தம்பி! இறை அருளால் உணர்வுகள் பெருகட்டும். கவிதைகள் மடை திறந்த
வெள்ளமெனப் பெருகட்டும். வாழ்க! வளர்க!
அன்புடன் ஞானவெட்டியான், இராசபாளையம்.
*
அது யார்... அடடே உதய செல்வி...
இணைய விழா ஈரேழு லோகங்களுக்கும் தெரிஞ்சு எல்லோரும் வாழ்த்துக்களை
அனுப்பி குவித்துக் கொண்டுள்ளனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம்
வாழ்த்துக்களை நான் வாசிக்கட்டுமா என்று கொஞ்சம் முன்னால் கேட்டார்.
ஒலிவாங்கி அருகே யாரும் இல்லைன்னதும் வந்த வாழ்த்துகளைப் வாசிக்கப்
போகிறாரோ?! பார்ப்போம்...என்ன செய்கிறார் என்று?
-ஆல்பர்ட்.
கவிக்கோ அப்துல் ரகுமானை அழைத்து வருகிறார் உதயச்செல்வி, தமிழ்நாடு
கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்" இணையத்தில் முதல் கவிதை நூல்
வெளியீட்டு விழா! என்ற செய்தியை நம் கவிக்கோவுக்கு விழா
ஏற்பாட்டாலர்கள் தெரிவித்ததும் அவர் மனம் மகிழ்ந்து உடனே புகாரியின்
கவிதையைப் பாராட்டி எழுதி நமக்கு அனுப்பிய வாழ்த்து தந்தியில் உள்ளதை
அப்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன்
பனி தேசத்தில்
கவிதைச் சுடர்
ஏற்றிவைத்திருக்கிறார்
புகாரி.
அவருடைய இதயத்தையே
நமக்கு
அன்புடன் அளித்திருக்கிறார்.
ஒரு கவிஞனால்தான்
இத்தகைய பரிசைத்
தர முடியும்.
உணர்வுகள் மீட்டிய
இசையை, நமக்காக
எழுத்துக்களில்
பதிவு செய்து தந்திருக்கிறார்.
தமிழை
"ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம்' என்று சொல்லும்
புகாரிக்குக்
கவிதை நன்றாக வரும்.
இந்தக் கவிதைகளும்
நம் நெஞ்சில்
கூடுகட்டிக் கொள்ளும்.
அன்புடன்,
அப்துல் ரகுமான்
பெரியவர்களுக்கெல்லாம் வழி விட்டுவிட்டு வாழ்த்துக்களோடும்
விமர்சனங்களோடும் பின்னால் வருகிறேன் நான்.இப்போதைக்கு முன் வரிசையில்
பரவசத்தோடு...பார்வையாளராய்..!
உதயா
*
இலந்தையாரின் வாழ்த்துரையும்
மாலன்: வடதுருவத்துக் குயிலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
கவிக்கோ அப்தூல் ரகுமான் தம்பி புகாரியின் தமிழ் மணம் பற்றிச்
சொன்னார். அடுத்து வருகிறார் கவிமாமணி. இலட்சிய நோக்காலும், இனிக்கும்
தமிழாலும் எல்லோர் நெஞ்சத்திலும் இடம் பிடித்த இலந்தையார் சந்தக்
கவிஞர் புகாரியின் சமூக நோக்குப் பற்றி சான்றுரைக்க வருகிறார். எழுந்து
நின்று வரவேற்போம்:
ஈண்டு குழுமியுள்ள தமிழ் சான்றோரே! தமிழ் ஆர்வலர்களே!! எல்லோருக்கும் என்
வணக்கம்!
பழமையின் லயமும் புதுமையின் வீச்சும்
பளிச்சிடும் அன்புடன் இதயம்
உழுததோர் வயலில் உரச்செழிப்போடே
உயர்ந்திடும் பயிரெனக் கண்டேன்
அழகிய முறையில் அதைவெளியிட்டே
அரும்பணி செய் தமிழுலகம்
செழுமைகொள் இணையச் செயல்வரலாற்றில்
சிறப்பிடம் தான்பெறுகிறது
எனது நல்வாழ்த்துகள்.
புகாரியின் "அன்புடன் இதயம்" தொகுப்பில் நான் விரும்பும் கவிதைகளில்
ஒன்று "அழிவில் வாழ்வா?'..
கவிதை என்ற அளவுகோல் கொண்டு பார்க்கும் போது அதைவிடச் சிறந்தவை வேறு
இந்தத் தொகுதியில் உண்டு. ஆனால் சமுதாய அக்கறையோடும் மனிதாபி
மனத்தோடும் மனோதத்துவ முறையில் அமைக்கப் பட்டிருக்கும் கவிதை இது.
வெறி கொண்டிருக்கும் ஒருவனை,அவனைக் குற்றம் சாட்டும் முறையில் அணுகினால்
அவனது வெறி அதிகமாகும்.
எனவே அவனிடம் "நீ செய்வது சரிதான்," என்று சொல்லி அணுகினால் வாளைக் கீழே
வைத்துவிட்டுக் கேட்பான்.
'தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்
சிதைந்து கிடக்கும் சகோதரா"
என்று சொல்லும் போது சற்றே நிமிர்ந்து பார்க்கிறான்.
"என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நீட்டுகிறேன்"
என்னும்போது அவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது.
அடுத்து
நீ வெறி கொள்வதில் நிச்சயம்
நியாயம் இருக்கத்தான் செய்கிறது"
என்கையில் அவன் காதுகளும் நெஞ்சமும் திறக்கின்றன. இப்படிப் படிப்படியாகச்
சென்று
" இன்று தப்பலாம் உன்தலை,
அது என்றும் தப்புமா"
என்னும் போது சிந்திக்கத் தொடங்குகிறான்.
"கையரிவாள்களைக் கண்தொடாக்
குழியில் வீசிக் கடாசிவிட்டு
உன்மனோபலத்துடன் மீண்டும் வா"
என்று சொல்லும் போது படுத்துக்கிடந்தவன் எழுந்து உட்காருகிறான்
"பொருளாதார மேன்மை .....
பூரண அரண்கள் உனக்கு"
ஓ, இதுதான் வழியா எனச் சிந்திக்க அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது.
பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் இங்கே தீர்வும் சொல்லப்படுகிறதே
என நிமிர்கிறான்.
அவனின் காயத்தை வருடுவதற்காக அவன் எதிரி எனக் கருதுபவனை "மூடர்" என்று
சொல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. வரலாற்றுச் சான்றுகள் பேசப்படுகின்றன.
'அந்த அறிவு வெளிச்சம்
உன்னுள் பட்டுத் தெறிக்க
சின்னதாக ஒரு தீ
மொட்டையேனும் பூக்க வை "
என்று கவிஞர் சொல்லுகிறார்.
அழிவுக்கும் 'த'£தான்
ஆக்கத்துக்கும்' தீ 'தான்.
கவிதை இன்னும் சற்றுச் செதுக்கப்பட்டிருக்கலாம்.
தமிழ் உலகத் தளத்தின் முயற்சி வெல்க! மற்றக் கவிஞர்களும் இவ்வாய்ப்புப்
பெறுவார்களாக!
இலந்தை
*
வாழ்த்து: நம்பி, சிங்கப்பூர்
வணக்கம்.
அலைகடலென திரண்டு வந்து இந்த விழாவை சிறப்பிக்கும் கூட்டத்தின் நடுவில்
ஒரு மூலையில் நானும் ஒட்டிக்கிட்டேன். பெரியவர்கள் மேடையில்
இருக்கிறார்கள். அன்புடன் இதயம் நூலையும் கவிஞர் புகாரி அவர்களையும்
வாழ்த்துகிறார்கள்.
நான் நிக்கிற இடத்துலருந்து சரியா தெரியல. அவ்வளவு கூட்டம். எனக்கு
பக்கத்துல ஒருத்தரு என்னத்தையோ கையில வச்சிக்கிட்டு உத்து உத்து
பாக்குறாரு. என்ன முணுமுணுக்குறாரு
" கன்னி தேடிப் போனேன் .. கவிதை வாங்கி வந்தேன்...
கன்னி மனதைப் போலே .. கவிதை புரிய வில்ல....
நான் ...."
" யோவ் புண்ணாக்கு, தலைகீழா படிச்சா கவிதை என்ன, உன் பேரே புரியாது. நேரா
புடிச்சி படி "
" அட .. ஆமா..கவிஞர் புகாரியோட 'அன்புடன் இதயம்' .."
" இப்ப படிச்சி பாரு. குழந்தைக்குகூட புரியற மாதிரி எளிமையா இருக்கும்"
" ஆமாங்கோவ்....."
தஞ்சை தந்த சந்தக் கவி
நெஞ்சை அள்ளும் இந்தக் கவி
சிந்தை நிறப்பும் அன்புக் கவி
விந்தை செய்யும் இணையக் கவி
பந்தல் போட்டது இணையத்தில்
ஒரு கால் நிற்குது கனடாவில்
மறு கால நிற்குது சிங்கையில்
மூன்றாம் காலோ அமீரகத்தில்
நாலாம் காலோ நம் நெஞ்சில்
இடைபட்ட கால்கள் இந்தியாவில்
சந்தனம் தெளிப்பது சவுதியில்
பன்னீர் தெளிப்பது பாபநாசத்தில்
கற்கண்டு கொடுப்பது கனடாவில்
மலர்கள் கொடுப்பது மலேசியாவில்
மேடையில் கண்கள் விரிகிறது
உலகம் அங்கே தெரிகிறது
அன்புடன் இதயம் நூல் தாங்கி
வெளியிடும் பெரியவர் சென்னையிலே
இணையக் கரம் நீட்டி
வங்கும் உள்ளம் லண்டனிலெ
கரவொலி விண்ணைப் பிளக்கிறது
சிவகாசியிலிருந்து சிகாகோ வரை ...
அன்புடன் இதயம்
நம்பி.
*
விருந்தோம்பல்: பாரத், துபாய்
பாண்டியரே அந்த ஒலிவாங்கிய சரி பண்ணுங்க.. நீங்க முடிந்சா இங்கேயே
நில்லமய்யா.. என்ன மாதிரி குள்ளமான ஆளும் உண்டு.. மாலன் மாதிரு நல்ல
உயரமான ஆளுக வேற அதனால நீரு அங்கேயே இருங்க சாமி..
அடடே வாங்கண்ணே மகேன் அண்ணே நல்லா இருக்கீங்களா.. வாசன் அண்ணன மட்டும்
நிக்க சொல்லுரிங்க.. நம்ம கோவிந்தசாமி பலபொருள் அங்காடி யிலேருந்து
வந்த இளநீரை எடுத்து எல்ல நண்பர்களுக்கு கொடுங்க..
இந்தாங்க முகுந்த் அண்ணே, மாகோ அண்ணே, ராம் அண்ணே, சுவாமிநாதன் அண்ணே,
யாரு சுலைமான் தம்பியா என்ன அண்ணே எப்படிகீரிரு.. இந்தாங்க எடுங்க
எடுங்க
நம்ம ஊரு பக்கத்துல இருந்து வந்த இளநீரு சும்மா தேனு மாதிரி இருக்கும்..
குடிங்க குடிங்க..
வரட்டா அந்தா நம்ம பழனி அண்ணன் குடும்பம், நம்ம தமிழுலக குடும்பமே ஒரு
பக்கமா இருக்காங்க எல்லா அண்ணிகள், குழந்தைங்க எல்லோரும் உக்காந்து
இருக்காங்க.. அவுங்களுக்கு கொடுக்கனும் வரட்டா அண்ணே..
என்ன அண்ணி (இளங்கோ அண்ணன் மனைவி) எப்படியிருக்கீங்க சென்னையில
பார்த்தது. அடடே நம்ம புதுக்கோட்டை அண்ணி (முத்து நிலவன் அண்ணன் மனைவி)
மன்னிக்கனும் அண்ணி உங்க மக கல்யாணத்துக்கு என்னால வர முடியல.
என்னம்மா(ஞானவெட்டியான் அண்ணன் மனைவி) எப்படி இருங்கீங்க, உங்கள
அண்ணைக்கு திண்டுங்கல் வந்த போது ரொம்ப தொந்தரவு செய்துட்டோம்முல்ல..
எடுங்க எடுங்க இளநீர் நல்லா இருக்கும்..
அன்புடன்
பாரத்
*
அறிவிப்பாளர்: புதியமாதவி, மும்பை
ஒவ்வொருவராக வந்து வாழ்த்து மடல்களை வாசித்துக் கொண்டும் மலர்ச்
செண்டுகளை வழங்கிக் கொண்டும் பொன்னாடைகளைப் போர்த்திக் கொண்டும் மேடையை
நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பெரியவர் ஞானவெட்டியான் அவர்களும்
இலந்தையார் அவர்களும் பேசியதைக் கேட்டவர்கள் சொல்லத்தான்
செய்தார்கள்... "சும்மாவா சொல்றாங்க பெரிசுகள் பெரிசுகள் தான் அய்யா...
என்ன தீர்க்கமானப் பார்வை.. என்ன தத்துவ அனுபவங்கள்.. தன்னை மறந்து
கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்..
கவிதை மாநாட்டில் புதிது புதிதாக இளங்கவிஞர்கள், கவிதாயினிகள் மின்னல்
மாதிரி மேடையில் ஏறி கவிதை வாசிக்கும் போது மாலன் புன்னகைப்பதும்,
புகாரி அவர்களின்
புகழ் மாலையில் சங்கடப்பட்டு நெளிவதும் கண்கொள்ளாக் காட்சிதான்..
கவிதைகள்:..ஒலிக்கின்றது...
என் இதயமே..
இதயம் பாடிய தமிழ் இதயமே
உன் கவிதைப் படித்துவிட்டு
கல்லீரலும் நுரையீரலும்
கண்கலங்கி நிற்கின்றது..
மூளைக் கதவுகள் கூட
மூடிக் கொண்டுவிட்டது
"என்ன பாவம் செய்தோம்
எங்களை ஏன் பாடவில்லை?
நாங்கள் இல்லை என்றால்
இதயத்தின் துடிப்புகூட
இருக்குமா?
எண்ணிப்பார்.."
சிரித்தான் கவிஞன்
அங்கங்களே அங்கங்களே
உண்மையைச் சொல்லட்டுமா
"என்னவள் இருக்கும்
இடம் இதயம்"
என்பதால் மட்டுமே
இதயத்தைப் பாடினேன்..
*
கவிதையே
கவிதையின் இதயமே
எழுதக் கூடாதக் கடிதத்தை
நீ எழுதிவிட்டாய்
அதனால்தான்
உன் இதயத்தில்
ஈரம் வற்றவில்லை..
காதலும் வாடவில்லை...
நீ
எழுதியக் கடிதத்தை
வாசிக்கவும் முடியாத
இருட்டில்
இதயம் பாலைவனம்
இல்லை என்னிடம்
இனிக் காதல்மனம்
கைதட்டல் கரவொலிகள்.. அடேங்கப்பா.. எப்படித்தான் இந்த இளசுகள் இப்படி
எல்லாம் கவிதைகளை அள்ளி விடுகின்றார்களோ
அவர்கள் கவிதைகளைக் கேட்க கேட்க "அடடா இது என்ன கவிஞர் புகாரியின்
முகத்திலும் நாணம்.. வெட்கம்..!! கவிஞரே ஆண்களுக்கும் வெட்கம் வரும்..
ஒத்துக் கொள்கின்றேன் கவிஞரே.....
நம்பி ஓடி வந்து என்ன மாதவி சாப்பீட்டீங்களா..?னு கேட்கிறார்..
"செவிக்கு உணவில்லாதப் போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்..."சொன்னா
அய்யோ வேண்டாம்மா எனக்கு டென்சன் தராதீங்க.. சாப்பிட்டிட்டு வந்து
எவ்வளவு வேணும்னாலும் செவியை நிறைத்துக் கொள்ளூங்கள் தாய்க்குலமே"
வாங்க எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்....
வடைப் பாயாசத்துடன்...
புதியமாதவி., மும்பை
*
வாழ்த்துரை: சுவாமிநாதன், அமெரிக்கா
புகாரியின் நூல் வெளியீட்டில் பாராட்ட வந்த தாடிக்கார அழையா விருந்தாளி
ஒருவர் ஒலிவாங்கியைக் கையிலெடுத்துச் சொன்னவை:
புகாரி செய்தார் அரும் உழைப்பு
எழுதிக் குவிப்பதே அவர் பிழைப்பு
அதனால் வந்தது பெரும் தழைப்பு
ஆனால், இவ்விழாவுக்கு எனக்கில்லை ஒரு அழைப்பு
முற்றி விட்டதோ இங்கு கலி
அதனால் ஆக்கினரோ என்னை பலி
என் இதயத்தில் தாளா வலி
ஆயினும் எழுப்ப வந்தேன் ஒரு ஒலி
கவிஞர் புகாரிக்கு பாராட்டு என்றது காகம்
எனக்கு வந்தது கவிதை தாகம்
உடனே எழுந்தது உடலில் ஒரு வேகம்
எனவே பாட வந்தேன் இங்கு ஒருதலை ராகம்
வானத்தில் பாடிடும் வானம்பாடி
எனக்குப் பிடித்த ஊர் தரங்கம்பாடி
நானிங்கு வரவில்லை விருந்துநாடி
பாராட்டவே வந்தேன் எழுந்தோடி
என் மகன் சிம்பு
அவன் கையில் கம்பு
பாய்ந்து வரும் நம்பு
எனவே செய்யாதீர் வம்பு
ராகங்களில் முகாரி
உலக ப்¢ரதமர்களில் அடல் பிகாரி
உணவகங்களில் மெரினா புகாரி
கவிஞரில் சிறந்தவர் டொராண்டொ புகாரி
எட்டா உயரத்தில் மேகமாய்ப் பறப்பார்
எளிதாய்க் கவிதை மழையைச் சுரப்பார்
எல்லோர் இதயத்தையும் கருத்தால் திறப்பார்
எனவே பாரெங்கும் புகழில் சிறப்பார்
வட்டமாய் இருப்பது வடை
துச்சாதனன் தட்டினான் தொடை
தலையில் இருப்பது சடை
நான் பெறுகிறேன் இப்போது விடை
அனைவருக்கும் என் வணக்கம்
முகத்தில் வேண்டாம் சுணக்கம்
இதயத்தில் இருக்கட்டும் இணக்கம்
நினைவெல்லாம் நித்தியம் கவிதையாய்,
உயிரிள்ள வரை உசாராய் இருந்து,
தம்பிக்கோர் கீதம் பாடிடும்
அண்ணன் - டி. இராசேந்தர்
*
மதுமிதா அழைத்துவந்த சிறப்பு விருந்தினர்
இத்தனைபேர் வந்தும் தான் வராத குறை இருக்கக் கூடாதென அவர் புயலாய்
ஸ்டைலாய் வந்தார். அரங்கே எழுந்து கரகோஷம் செய்ய ஒரு கை உயர்த்தலில்
அமைதிப்படுத்தி ஒசிந்த தலையசைவுடன் மேடை ஏறினார்.
மாலன் எழுந்து வரவேற்க மார்போடு சேர்த்தணைத்து உடன் விடுதலை செய்தவர்
சொன்னது:
இமய மலையில்
இருந்தேன்
வாழ்த்து மழையின்
மொழி கேட்டு
வாழ்த்திட நானும்
வந்தேன்.
கடல் கடந்து
தேசம் கடந்த பின்னும்
தொடர்ந்து
தமிழ்ப்பணி செய்யும்
புகாரி வாழி !
கவிதை உலகில்
என் நேசக்
கவிஞர்களை அடுத்து வந்த
சூப்பர் ஸ்டார் நீ
அன்புடன் பட்டம்
அளித்தேன் உனக்கு
பெறுவாய் புகாரி
கவிச்சுடர் நீ
நான் ஒருமுறை சொன்னா.... ஹா.... ஹா.... ஹா.... !
என்று புரியும் படி பேசி முடித்து வந்த வேகத்தில் விடை பெற்றுச் சென்றார்
மாலன் ஒரு கண்ணசைவில் வழி அனுப்பி வரச் சொல்ல பணிவாய் எழுந்த புகாரியை
அரங்க மேடையிலேயே அமரச் சொல்லி இருவரின் சார்பாய் வாசல் வரை சென்று வழி
அனுப்பி விட்டு வந்தேன் வந்ததும் மகிழ்வாய் நன்றி சொன்னார் கவிச்சுடர்
மதுமிதா
*
இணையவெளிப் பந்தல் மேடையின் சற்று கிழக்கே முதலுதவி மையத்தில் இருந்த
மருத்துவர், கால் நரம்பு இழுத்துப் பிடித்துக்கொண்ட ஒருவருக்குச்
சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஆங்காங் மரு.பிலிப்
அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று எம்ஜிஆர் குரல்
கேட்டது.
ஒரு கணம் திடுக்கிட்டு நண்.பிலிப்பிடம் வினவினேன்; அவரும் அது எம்ஜிஆர்.
பேசுன டேப்பை போடுறாங்களா? இல்லையே நம்ம விழா சம்பந்தமான பேச்சாவுள்ள
இருக்கு என்றார். வெளியே வந்து பார்த்தால்.....மேடையில் ஒரு இளைஞர்
எம்ஜிஆர் போல பேசிக்கொண்டிருக்கிறார்.
யார் அந்த பல குரல் மன்னன்?
"என் ரத்தத்தின் ரத்தமான உதன்பிறப்புக்களே! எனதருமைத் தம்பி புகாதியின்
விழாவில் கலந்து கொள்ள எண்ணினேன்; நல்ல வேழை; நம்ம ஊர்ல இல்லைங்கிறது
தெரிஞ்சது; இணையவெளியில...றொம்ப வசதியாப் போச்சு; வந்துத்தேன். தம்பி
புகாரி மட்டும் நான் திதைப் பதங்களில் நதிக்கும்போது இருந்திருந்தால்
இந்நேரம் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாக...என்னருமைத் தம்பியாக
ஜினிமா உதகிலே மின்னி இதுப்பார்.
எனக்குப் பிறகு தம்பி புகாரி என்பதால் அவருக்கு பொன்மனச் செம்மல்
புகாதி...ம்ம்ம்ம்பு..கா..ரி..! என்ற பட்டத்தை வழங்கி இந்தத் தங்கச்
சங்கிலியை அருமைத் தம்பிக்கு அணிவித்து மகிழ்கிறேன்.... வாழ்க அண்ணா
நாமம்!
(கூட்டத்திலிருந்து விசில் சத்தம்....கரஒலி......அடுத்து
கலைஞர்..பேசுகிறார் என்று பலகுரல் இளைஞர் அறிவிக்க மீண்டும்
கரஒலி...விசில்...)
*
உடன் பிறப்பே!
தம்பி புகாரிக்கு விழா! என்று காதில் சேதி விழுந்தது!
அக்கறைச் சீமையின் அருமைத் தம்பி புகாரிக்கு விழா என்றால் அண்ணன்
கோபாலபுரத்தில் இருக்க முடியுமா? சேதி விழுந்ததும், இங்கு
புறப்பட்டேன். சோனியாகாந்தி என்னைப் பார்க்க தேதி கேட்டு நிலைபேசியிலே
தகவல்; அம்மையாரை அலைபேசியில் அழைத்து அப்புறம் சொல்லுவதாகச்
சொல்லிவிட்டு இங்கு வந்தேன்;
தம்பி நாளும் ஒரு குறள் எழுதிய பாங்கு கண்டேன்; யார் கண் பட்டதோ தம்பி
புகாரி நிறுத்திவிட்டார்!
தமிழ் என்றாலே இனிக்கும்; அதிலும் தம்பி புகாரி தேனில் குழைத்துத் தரும்
தமிழமுதம் பருக வாயன்று போதா! செவியிரண்டு போதா! தம்பி, இந்த அண்ணன்,
இங்கு கூடியிருக்கும் லட்சோபலட்சம் பேர் முன்னிலையில் ஆணையிடுகிறேன்.
நாளும் ஒரு குறள் பணியை விழா முடிந்ததும் தொடங்கு!
அடுத்து அமையப் போவது எங்கள் ஆட்சிதான் தமிழகத்தில்! உனக்கு ஒரு இடம்
உண்டு..எங்கு என்று சொல்ல மாட்டேன்! இது தம்பிக்கு புரியும்! கேட்கும்
எல்லோருக்கும் புரியும்!
புகாரி என்பதும் மூவெழுத்து!
தமிழ் என்பதும் மூவெழுத்து!
அவர் எழுதிய இதயத்திலிருக்கும்
அன்பு என்பதும் மூவெழுத்து!
அவருக்கு வசப்பட்ட
கவிதையும் மூவெழுத்து!
தமிழே! தவமே!
நீ! வாழ்க! வளர்க!
என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்
தமிழுலகம் நடத்தும் இந்த விழா வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்று
சொல்லி வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.
வணக்கம்.
(கரஒலி காதைப் பிளக்க....அடுத்ததாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா...
என்று சொல்ல மீண்டும் விண்ணதிர கரஒலி... எழ தொடர்ந்து
கொண்டிருந்தது...)
-ஆல்பர்ட்.
*
மேடையை ஒட்டி அண்ணாந்து பார்த்தவாறு போவது யார்? அடடே! நம்ம பிரகாஷ்.
இவர் எங்கே...இங்கே? குடும்பமே துயரில் இருக்கிறதே தொந்திரவு செய்ய
வேண்டாம் என்று எண்ணினோமே!? என்று எண்ணியவாறு அவரை அணுகி கரங்களைப்
பற்றிக் கொண்டேன். என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் தெரியவில்லை. மவுனம்
என் பக்கம் நீடிக்கவே பிரகாஷ் மெல்லப் பேசி மவுனம் கலைத்தார்.
" பெரியவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மைக் எனக்குக்
கிடைக்குமா தெரியவில்லை. இருப்பினும் ஒரு ஓரமாக நின்று கொள்கிறேன். "
ஆல்பர்ட் நீங்க உங்க வேலை கெடாம அதுகளப் பாருங்க..." என்றார் பிரகாஷ்.
" என்னங்க நீங்களே இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க... உங்களை
விட முக்கியமான வேலை எனக்கென்ன இருக்கு... வாங்க முதல்ல எதாவது
சாப்பிடுவோம்....இல்ல எதாவது எளனிகிளனியாவது....
" அட நீஇங்க வேற... உங்க தொண்டர்படைக்காரங்க சாமானியப்பட்ட ஆளுங்களா? என்
அடையாள அட்டையைப் பார்த்து அன்போட உபசரிச்சு இப்ப என்னால நடக்கக் கூட
முடியல... வயிறு மனசு எல்லாம் நிரம்பி இருக்கு... இந்த நேரத்துல நம்ம
கவிஞர். புகாரியப் பத்தி ரெண்டுவார்த்தை சொல்லலாம்ன்னு பாத்தேன்.
ஆனா..."
ஆனாவாவது ஆவன்னாவாவது... இருங்க...இப்ப கவிஞர் சேவிய¨ர் பேசச் சொல்வார்
மாலன்! அவரை அடுத்தாப்புல பேசச் சொல்லலாம். அதற்குள் மேடையிலிருந்து
தலைவர் மாலன் அவர்களிடம் கவிஞர் புகாரி எங்களைக் காட்டிச் சொல்ல விசயம்
எளிதாக முடிந்தது. மிடுக்காக எழுந்த கவிஞர் சேவியரை....மாலன்
கையமர்த்திவிட்டு சென்னையிலிருந்து தன் சொந்தச் சோகங்களை எல்லாம்
ஒதுக்கி வைத்துவிட்டு வருகை தந்துள்ள நம் நண்பர் பிரகாஷ் இப்போது உரை
நிகழ்த்துவார் என்று மாலன் சொல்ல முகம் நிறைய புன்னகை பூக்க
ஒலிவாங்கியருகே நண்பர் பிரகாஷ் செல்ல.... பிரகாஷ் பேசுவதைக் கவனிக்க
வசதியாக நான், ஒரு ஓரமாக நின்று கொண்டேன்.
*
அன்புடன் இதயம் alias
புகாரி யின் நுல்ல் வெளியீட்டிற்கு
வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்!
கவிதைகளுடனான என்னுடைய உறவு அத்தனை சிலாக்கியமானதில்லை என்பதை என்னை
நன்றாக அறிந்த நூறுக்கு குறைவான இணைய நண்பர்கள் அறிவார்கள். i hate
poetry என்று என் நண்பர் சமீபத்தில் முன்னணி நாளிதழில் அறிக்கை விட்டு
ஆபத்தில் சிக்கிக் கொண்டதைப் போலவே, நானும் என் லெவலுக்கு சிலரிடம்
தர்ம அடிகள் வாங்கி இருக்கிறேன். இந்த சிக்கலுக்கு முழுக்காரணம், நல்ல
கவிதைளிடம் என்னுடைய பரிச்சயம் இல்லாமைதான் என்று புரிந்தது.
அப்படிப் புரிய வைத்த பல கவிஞர்களுள் நண்பர் புகாரிக்கு ஒரு முக்கிய
பங்கு இருக்கிறது எனக்கு புகாரி என்றதும் நினைவுக்கு வருவது இரண்டு
விஷயங்கள். ஒன்று மவுண்ட் ரோடு பிரியாணி. மற்றொன்று கனடா வாழ் நண்பர்,
கவிஞர் புகாரியின் கவிதைகள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு
இல்லைதான் என்றாலும், அவ்வாறு நினைப்பதை தடுக்க முடிவதில்லை. கவிஞர்
தன்னுடைய வெளிச்ச அழைப்புக்கள் தொகுதியில் இருந்து கவிதைகளை இணையக்
குழுக்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த போதுதான் அவருடன் எனக்குப்
பழக்கம். அது தான் அவருடைய முதல் தொகுதி என்று தெரிந்த போது ஆச்சர்யம்.
மிகக் கொஞ்ச நாளிலேயே அவரது இரண்டாவது தொகுதியும் வெளிவந்தது என்பது
தெரிந்தபோது மகிழ்ச்சி.
அன்புடன் இதயம் நூலை நான் வாசித்திருக்கிறேன். வாசித்த போது என்னுடைய
முதல் ஆச்சர்யமே, பல ஆண்டுகளுக்கு முன்பே, புலம் பெயர்ந்து விட்டாலும்,
இன்றளவுக்கும், நமது மெயின் லாண்டு குறித்து இவ்வளவு அக்கறையும்,
கவலைகளும் கொண்டிருக்கிறாரே என்பதுதான். தஞ்சை மண்ணின் வாசம் நம்
மூக்கைத் துளைப்பதை பல கவிதைகள் மூலமாக உணர்ந்தேன்.
பல கவிதைகளை வாசிக்கும் போது , அவரை வைரமுத்துவின் இளவல் என்று
குறிப்பிடத் தோன்றுகிறது. ஆனால் அப்படி சொல்லப்போவதில்லை. ஏனெனில்
நண்பர் புகாரி அதனைப் பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம். வேறு யாராவது அதை
திரித்துப் படிக்க நேரிடலாம். தர்க்கவியலை ஆதாரமாக கொண்ட
கணிணித்துறையிலே, பல்லாண்டுகளாக பணியாற்றிகொண்டிருந்தாலும், அதற்கு
சிறிதும் தொடர்பில்லாத கவிதை எழுதுதல் குறித்த ஆர்வம் எவ்வாறு
எழுந்திருக்க முடியும் என்று நினைத்துப்பார்க்கிறேன். இதற்கும் விடை
கிடைக்கிறது, அவரது கவிதைகளின் மூலம். இணையக் குழு ஒன்றிலே வெளியான
அவரது கவிதை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கவிதை அசப்பில்
வெண்பா போலவே காட்சியளித்தது. எனக்கு யாப்பு பற்றிய அறிவு போதாமையால்,
அதனை மரபுக் கவிதையா அல்லது புதுக்கவிதையா என்று இஅனம் கண்டுபிடிக்க
முடியவில்லை. நான் அமைதியாக இருக்க,
"என்ன கவிஞரே வெண்பா எழுதத் துவங்கி விட்டீர்கள் போலிருக்கிறதே ? " என்று
நண்பர் ஒருத்தன் கேட்க, அதற்கு நம் கவிஞர், " இது வெண்பா அல்ல, என் பா
" என்றார் கிண்டலாக. கவிஞர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்காது என்று
யார் சொன்னது?
அந்த நூலின் முன்னுரையில், கவிமாமணி இலந்தையார் சொல்கிறார் " பழமையின்
வீச்சும், புதுமையின் தாள லயமும் ஒருங்கே இருக்கின்றன இவர் கவிதைகளில்"
என்று வாசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். மனிதம் குறித்த
கவலைகளும், நட்புகளின் உயர்வும், வாழ்க்கையின் பொது வான தன்மைகள்
குறித்து இவர் கேட்கும் கேள்விகள், இவரை மற்ற கவிஞர்களிடம் இருந்து
சற்றே தனிப்படுத்திக் காட்டுகின்றன என்று சொல்லலாம்.
காதலியின் பிரிவை சொல்லும் போது, ஆ... மற்றொரு காதல் கவிதை என்று ஒதுக்க
முடியாமல்,
நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள்
மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்
என்ற வரிகள் நம் முகத்தில் அறைகின்றன.
காதல், பிரிவு, போர்த்துயரம், கல்யாணம், இயற்கை வருணனை ( வேங்கூவர் ) ,
அம்மா பாசம் என்ற சம்பிரதாயமான பாடு பொருட்கள் இருந்தாலும், அவற்றை
கற்பனை செய்த விதத்திலும், கவிதை மொழியாக்கிய விதத்திலும் , இவர்
கவனிக்கப் படவேண்டியவர் என்ற எண்ண வைக்கிறார்.
அதிலும் குறிப்பாக, அம்மா வந்தாள் என்ற கவிதையிலே,
புது மணப்
பெண்ணவளோ
புரையேறி சிரித்திடுவாள்.
வட்ட
நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட
மேடை தனில்
இளமுகில் பாய்போட்டு
என்று சரம் சரமாய் நீளும் பாக்களில் இருக்கும் துள்ளலும், தாள லயமும்
அருமை.
லேசாக புன்னகை செய்ய வைக்கும் ' ஐயா, இது அமெரிக்கா.. " என்ற கவிதை
புதுக்கவிதையிலே ஒரு புது ரகம்.
சில கவிதைகளை படிக்கும் போது, நம் மனக்கண் முன்னே வைரமுத்து
நிழலாடுகிறார். கவியரசு உருவாக்கியது கவிதைகளை மட்டுமல்ல.
கவிஞர்களையும் தான் என்று புரிகிறது.
குறிப்பாக, வன்முறையை பற்றி சொல்லும், அழிவா வாழ்வா என்ற கவிதையில்,
உன்
உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு
வெட்டிகொண்டு சாவதை
வீரமரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே
என்ற வரிகள், நம் கவிஞரை, கவியரசு எந்த அளவுக்கு பாதித்திருக்கிறார்
என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இது ஒரு கவிதைக்கு பலமா அல்லது பலமின்மையா என்பதை கவிதா ரசிகர்கள் தான்
முடிவு செய்ய வேண்டுமே அன்றி நானில்லை.
நிலவு, வான் , முகில் , மழை, மேகம், என்று அவ்வப்போது, தரையை விட்டு ஓரடி
எவ்வி நின்றாலும், நுகர்பொருள் கலாசாரத்தின், கேடுகளை நையாண்டி செய்து
சொல்லும் கடன் அட்டை பற்றிய புராணம் பாடும் அந்த அமெரிக்கா கவிதை நிகழ்
காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது.
முப்பது கவிதைகளில், சில நம்மை சிரிக்க வைக்கின்றன. சில சிந்திக்க
வைக்கின்றன. சில அச்சமூட்டுகின்றன, சில வியப்பூட்டுகின்றன. கண்ணீரும்
சில இடங்களில் கிடைக்கின்றன. சந்தத்துக்கு கவிதை எழுதுவது என்பது
கொஞ்சம் சிரமமானது. அது எத்தனை எளிதாக இவருக்கு வருகிறது என்று எண்ணிப்
பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது போன்ற பல தொகுதிகளை அவர் வெளியிடவேண்டும். கூடவே தமிழுலகம், இது
போன்ற இணைய வெளியீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி, வணக்கம்
அன்புடன் ஐகாரஸ் பிரகாஷ்
பேசி முடித்து திரும்பியதும் கவிஞர் புகாரி எழுந்து பிரகாஷை ஆரத்
தழுவிக்கொண்டார்.
( பிரகாஷ் பேசி முடித்ததும் கர ஒலி இணைய வானைப் பிளந்தது என்றால் அது
மிகையில்லை......! நான் பிரகாஷ் அவர்களை அழைத்துக் கொண்டு தேனீர்
அருந்தச் சென்றேன்.
*
(நாக.இளங்கோவன்)
தமிழைப் பாடாத தமிழ்க்கவிஞர் இல்லை. அப்படியரு கவிஞர் இருந்தால் அவர்
தமிழுக்கான கவிஞராக இருக்க மாட்டார்.
பாரதியாருக்கு செந்தமிழ்நாடு என்ற கேட்டவுடன் தேன் வந்து பாய்ந்தது அவர்
காதினிலே!
பாரதிதாசனுக்கோ தமிழ் அவர் உயிருக்கு நேரானது மட்டுமன்றி முதும் மதுவும்
வேலும் வாளும் என்று அனைத்துமாய் ஆனது தமிழ் அவருக்கு.
கவிஞர் புகாரி, தனது இதயத்தை திறக்கையிலேயே தமிழோடு திறந்திருக்கிறார்;
தனது 30 கவிதைகள் கொண்ட "அன்புடன் இதயத்தில்" முதல் கவிதையே மனதை
கொள்ளை கொள்கிறது. காரணம் இரண்டென்று யாரும் அறிவர். ஒன்று - அது
புகாரியின் கவிதை. மற்றொன்று - தமிழைப் பாடும் கவிதை.
ஆயிரம் கவிதைகளைப் படித்தாலும், தமிழ்பால் ஒன்று படிப்பதிலேதான் எத்தனை
சுகம்!!
30 கவிதைகளிலும் புகாரி தமிழையே பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்று
பார்க்கிறேன். இது பேராசை; என்று என் மனம் கூறிடினும், இதைப் படிப்போர்
கூறிடினும், அதைச் செய்யக் கூடியவர்தானே நண்பர் கவிஞர் புகாரி என்றே
என் உதடுகள் உச்சரிக்கின்றன.
தொகுப்புக்கு ஒன்று வைத்தால் கூட அவரால் 30க்கும் மேலான தமிழைப் பாடும்
கவிதைகளை எழுதிவிடமுடியுமல்லவா? அத்தனை நம்பிக்கை எனக்கு அவர் மேல்.
"விரலுக்குள் ஊறிவரும் எழுத்து தமிழ்
தமிழ் எழுத்தினில் நிமிர்கின்ற விரல் "
உண்மையான சொல். நல்ல தமிழில் எழுதும்போது எழுகின்ற விரலுக்கு வீழாத
விரல்கள் உண்டோ? விரலில் ஊறிவந்த தமிழ்தான் இந்த குமரிநாட்டை கடந்த
நூற்றாண்டில் மீட்டெடுத்தது பெருமளவு. விரலில் ஊறிவந்த தமிழ்தான்
வாயில் ஊறிவந்த பலவற்றையும் தடுத்தது. விரலில் ஊறி வரவேண்டிய தமிழ்
இன்னும் எவ்வளவோ உண்டு. அது வரவேண்டும்.
விரல்களில் எல்லாம் தமிழ்ப் பெருக்கு ஏற்படவேண்டும்; ஆங்கிலமும்
வடமொழியும் தமிழிற்கு ஏற்படுத்தியிருக்கும் கட்டுகளை, கட்ட முற்படும்
சழக்குகளைக் களைதல் வேண்டும்.
சழக்குகளைக் களைந்து விட்ட விரல்கள் நிமிர்ந்தே நிற்கும்.
"உயிருக்குள் குடிகொண்ட மானம் தமிழ்
தமிழ் மானத்தில் துடிக்கின்ற உயிர்
மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
தமிழ் வளத்தினில் கொழிக்கின்ற மண்"
அத்தனை வரிகளும் அற்புதமெனினும், இவ்வரிகளை மேலெடுத்து எழுதுவது
அவற்றின்பால் சற்றே அதிகமாய் உள்ள நேசத்தால்.
வாழ்க கவிஞர் புகாரி.
தமிழ் விரல்களை நிமிரவைக்கட்டும் அவரின் கவிதைகள்.
மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன்
நாக.இளங்கோவன்
*
உள்ளேன் அய்யா. கல்யாணம் செஞ்சு பார்; வீட்டைக் கட்டிப்பார்ன்னு
சொன்னாங்களே தவிர இப்படி ஒரு விழாவை நடத்திப் பாருன்னு யாரும் சொல்லாம
போயிட்டாங்க! நாந்தான் ஏற்பாட்டாளர் குழுவில் சிக்கி அவர்களுக்கு
தேவையானதை குடுக்க, இப்டி மேற்பார்வையிலேயே நேரம் சரியாப் போகுது. சரி
கொஞ்ச நேரம் மேடைப்பக்கம் எட்டிப் பாக்கலாம்ன்னா 50000 வாழைப்பழம்
தீந்து போச்சு... இன்னொரு 50000க்கு சொல்லி வரவழைங்கன்னு தொண்டர் வந்து
குரல் கொடுக்கிறார். நான் என்ன செய்வது?
நூலை கவிஞர் மாதவி வெளியிடப் போறாங்க அப்டீன்னு சொல்லும்போது, சமையல்
கட்டுல இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டு அப்பளம் பொறிச்சு எடுத்து
கொடுத்துக் கிட்டு இருந்தேன். என்ன செய்ய...முனைவர் அனந்த்
அதிர்ஷ்ட்டக்காரார்..போய் நின்னு வாங்கி நாலுவார்த்தையும் பேசீட்டார்!
சரி யார் வாங்குனா என்ன? என்று வந்த விருந்தாளிகளை மனம் கோணாம
கவனிக்கனும் இல்லையா? அதுமுக்கியம்ன்னு இருந்துட்டேன், மகேன்! சரி
இப்பக் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கே மேடைப்பக்கம் போகலாம்னு போனேன். என்ன
முந்தி அடிச்சிட்டு நம்ம மதுமிதா போயிட்டாங்க. அடுத்து நம்ம பிரகாஷ்
வந்துட்டாரு அப்பரம் என்ன ! அடுத்தது நாந்தேன்
மணியம்
*
மாலன்: 'எழுத்தில் கூட வல்லினம் தவிர்க்கும் மென்மனதுக்காரர்' என
அறியப்பட்ட நாஞ்சில் நாட்டுக்காரர் நம் சேவியர். வட
அமெரிக்காவிலிருந்து தமிழ் வளர்க்கும் தென் குமரித் தமிழர்.
மனவிளிம்புகளில் அவரது கவிதைத் தொகுதி. இங்கு மனதின் ஆழத்திலிருந்து
வாழ்த்துரைக்க வருகிறார் சேவியர்.
விழாத் தலைவர் அவர்களே!
மேடையிலும், எதிரிலும், சுற்றிலும் வியாபித்திருகிற தமிழ் நெஞ்சங்களே!
எனது நேரத்தில் கொஞ்சம் பங்கெடுத்துக் கொண்ட நண்பர் பிரகாஷ் அவர்களே!
எல்லோருக்கும் என் முதல் வணக்கம்!
ஏனோ தெரியவில்லை, கவிதை பற்றி பேசும் போது மட்டும் மனம் நான்கைந்து
இறக்கைகளை எங்கிருந்தோ எடுத்துக் கொண்டு வருகிறது.
கவிதைகளில் நல்ல கவிதைகள் அல்ல கவிதைகள் என்று இரண்டு வகை இருப்பதாகச்
சொல்கிறார்கள். அதன் வரையறைகள் எனக்குத் தெரியவில்லை. காக்கைக்கும்
தன்குஞ்சு பொன்குஞ்சு என்றொரு பழமொழியும், லவ்பேர்ட்? தான் வீட்டுக்கு
அலங்காரம் காக்கைகள் அல்ல என்று இன்னோர் வாதமும் வந்து கொண்டே
இருக்கின்றன. எனக்கும் மனசுக்குப் பிடித்தமான கவிதைகளைப் பற்றிப்
பேசுவதற்குத் தான் பிரியம். அப்படி மனதைப் பிடித்துக் கொண்ட
புத்தகங்களில் ஒன்று நண்பர் புகாரியின் அன்புடன் இதயம்.
சந்தங்களின் மனம் தின்னும் சத்தங்களைக் கொண்டு கருத்துக்களைக்
கருக்கலைப்பு செய்யாமல் சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த வரம்
புகாரிக்கு வாய்த்திருக்கிறது. வெண்பா போல எழுதுவார், ஆனால்
இலக்கணங்கள் இருக்காது, இருந்தால் அவர் பெருமிதப் படுவதுமில்லை,
இல்லையேல்
அதற்காய் 'காய்' தேடிக் கவலைப்படுவதுமில்லை. அவர் எழுதுவது தான் அவருடைய
கவிதைக்கான இலக்கணம். புட்டிகளுக்கேற்ப தைலம் தயாரிப்பதில் அவருக்கு
உடன்பாடு இருந்ததில்லை. அது அவர் பாடு ! அவருடைய கொள்கைகளோடு அவர்
கொள்ளும் ஈடுபாடோடு எனக்கு உடன்பாடு !
அன்புடன் இதயம் தொகுதியில் என்னை சட்டெனக் கவர்ந்த கவிதைகளில்
குறிப்பிடத்தக்கவை பஞ்சபூதக் கவிதைகள் ! நீர், நெருப்பு, நிலம்,
காற்று, ஆகாயம் - என்ற ஐந்து நிலைகளாகவும் மாறி கரைந்து கரைந்து
வடித்திருக்கின்ற இந்தக் கவிதைகள் காலம் தாண்டி நிற்கும். இந்த
கவிதைகளுக்காகவே நான் இந்த தொகுப்பை மிகவும் நேசிக்கிறேன். மற்ற
கவிதைகள் சிறப்பில்லை என்பதல்ல அதன் பொருள். மிட்டாய்க் கடையில் எனக்கு
பஞ்சு மிட்டாய் தான் வேண்டும் என்று அடம்பிடித்தழும் குழந்தையைப் போல
அவரவர் விருப்பம் அவரவர்க்கு !
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீயே கர்ப்பப் பையே
என்று நிலத்தோடும்,
செவியும் மூக்கும் எப்படிப் பிறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்
என்று காற்றோடும்
சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே
என்று ஆகாயத்தோடும்
தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்
என்று நீரோடும்
வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்
என்று நெருப்போடும் இவர் நின்று வாதிடும் போது நடுவராய் இருக்கும் வாசகன்
கொஞ்சம் குழம்பித் தான் போவான்.
ஆறாம் வகுப்பு தாண்டினாலே ஆங்கிலத்தை நாக்கில் கட்டி அலையும் இன்றைய
தலைமுறைக்கு அபரிமிதமான ஆங்கில அறிவு இருந்தும் எப்போதும் அழகுத்
தமிழில் அழுத்தமாய் பேசும் நண்பர் புகாரி, ஒரு சிறப்பான வழிகாட்டி.
நண்பரே, அன்புடன் இதயம் முதல் இணைய வெளியீடு விழா வெகு சிறப்பாகத்
துவங்கி யுள்ளது! இவ்விழா இணைய வரலாற்றில் ஒரு மைல்கல்லாய் இருக்கும்!
இருக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
சிந்தித்துச் சந்தத்தில்
எழுதுவதென் வழக்கம் - நீ
சிந்திப்பதே சந்தத்தில்
அதுதானே பழக்கம் ?
நன்றி! வணக்கம்.
சேவியர்
*
நன்றிகள் மணியம் ஐயா,
இப்படித் தெரிந்திருந்தால் சமையல் கட்டைக் கொஞ்சம்
எட்டிப்பார்த்திருக்கலாம். இன்னும் வேறு யாராவது அங்கு ஒழிந்துகொண்டு
இருக்கின்றார்களா? சமையலில் உதவி செய்ய அல்ல. சாப்பாட்டை ருஷி
பார்க்கத்தான்!
நட்புடன்,
எழில் நிலா மகேன்.
*
பஞ்ச பூதங்களைப் பாடிய கவிஞருக்குப் பாராட்டுகள். பஞ்ச பூதங்களில் இந்த
பூதத்தை இவர் பாடியிருப்பது மட்டும் சொக்க வைக்கிறது. ஏன் தெரியுமா?
நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற நான்கனுக்கும் இல்லாத அந்த ஒற்றைச்
சிறப்பு நிலம் என்ற பூதத்துக்கு இருப்பதுதான்.
தாய் நீர் என்று சொல்லிக் கேட்டிருக்கிறோமா? அது ஓடிப் போகும் இயல்பினது.
தாய் நெருப்பு என்று சொல்லிக் கேட்டிருக்கிறோமா? சிறிதாய் இருந்தால்
அடங்கிக் கிடக்கும். பெரிதாய் ஆனால் பேயாய் உலவும்.
தாய் வானம் என்று உண்டா? வானம் என்பதென்ன? வினாக்குறி!!
தாய்க் காற்று? சின்ன நகைப்புதான் இதழோரம்!!
தாய் மண் என்று சொல்லாத மாந்த இனம் பூவுலகில் ஏது? ஒரு மனிதனுக்கு
முகவரியைத் தருவது அவன்/அவளைப் பெற்றவர் மட்டுமா? இல்லை. பிறந்த
மண்ணும்தான். மனிதனுக்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் பேருண்டு ஊருமுண்டு!
மணப்பாறை மாடு முதல் ஆப்பிரிக்க ஆனைக்கும், அமேசான் பாம்புக்கும்
முகவரி உண்டு.
பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் பழிப்போரைத் தாய் தடுத்தாலும் விடுவரோ?
தாயும் மண்ணும் ஒன்று.
அவளும் அன்னை; இவளும் அன்னை. இருவருக்கும் அதே பொறுமை; தாய்மை.
அன்னைக்குத் தீங்கு வரும்போதெல்லாம் மனிதகுலம் சிதறித் தவிக்கிறது.
அன்னைக்கு வந்த தீங்கைக் காக்க மறந்த குலமெல்லாம் நாசமடைந்து போகிறது;
தமிழகத்தைப் போல.
அன்னைக்குத் தீங்கு செய்வோரைப் போற்றுபவரும் காப்பவரும் நிறைய நிறைய,
பொறுக்க முடியாமல் போனாலும் பொங்கியா எழுகிறாள்?
இல்லை இல்லை; தன்னையே தண்ணீரில் அமிழ்த்திக் கொண்டு பிணமாகிப் போகிறாள்!
ஒன்றா இரண்டா! நான்கு முறைகளாம் தமிழ் மண்ணில்.
பாதகர்கள் பெருகிய நாட்டில் "ஐந்தாம் கடல்கோளே வா!" என்று அன்னை நிலம்
அழைக்கும் முன்னர் அறிவு பிறக்கட்டும் பகைநக்கும் பாதகர்களுக்கு!
அதற்கு நண்பர் கவிஞர் புகாரியின் நிலமகளைப் பாடிய இக்கவிதை கண்ணொளி
வழங்கட்டும்! வாழ்த்துகிறேன் வாழியவே!
அத்துடனே, மீண்டும் மீண்டும் படித்த சில அடிகளையும் சுட்டிக்
காட்டுகிறேன். முழுக்கவிதையும் சற்று கீழே காண்க.
குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே
வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை
அன்புடன்
நாக.இளங்கோவன்
நிலம்
குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே
கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை
சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே
எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை
கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே
பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே
காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்
வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை
உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்
உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை
*
தமிழ் உலக அன்பர்களே!
'தொராந்தோ'வில் அண்மையில் நடந்த புகாரியின் நூல் வெளியீட்டு விழாவில்
கலந்து கொண்டவன் என்ற முறையில், மீண்டும் இங்கு வந்து கவிஞர்
புகாரிக்கு என் நல்லாசிகளை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரைப் பற்றிய என் எண்ணங்களை, என் உரைநடையை விட என் கவிதையே நன்றாய்ச்
சொல்லும் என்று நினைக்கிறேன்!
மின்னிணைய மேகத்தில் மின்னலென எம்பி
. மின்சார மெல்லோசை மீட்டுமென்றன் தம்பி
'அன்புடனே இதய'த்தை அளித்தகவி மாரி
. அறுசுவைப் பாச்சமையல் ஆக்கும்பு காரி
முன்னோரின் பைந்தமிழோ முக்கனியாய் விஞ்சும்
. மூவிரண்டு பூதங்கள் முன்வந்து கொஞ்சும்
நன்னெறிகள் நமக்குரைக்கும் நம்பிக்கைப் பேரி
. நல்லிணைய வாசகர்கள் நாடும்பு காரி
ஊடல்கள் கூடல்கள் தேடல்கள் பாடி
. உலகத்து நிகழ்வுகளை உன்னும்கண் ணாடி
பாடலிலே துள்ளிவரும் பலசந்த மாரி
. பழமைக்கும் புதுமைக்கும் பாலம்பு காரி
பசுபதி
*
அன்பு பசுபதி ஐயா,
உங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டியது மகிழ்ச்சி.
நான் பாவி. உள்ளூரிலிருந்தும் வரமுடியவில்லை. அன்றைக்கென்று என்
மக்களுக்கு ஒரு tae kwan do நிகழ்வு.
இருந்தாலும் இன்று இந்த அவையில் என் அன்புச் சோதரனை வாழ்த்த வரம் தந்த
இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். கூடவே அவர் முதுகெலும்பாக இருந்து,
அவரை ஊக்குவிக்கும் அவர் அன்புத் துணைவிக்கும் என் வாழ்த்துக்கள்..
அடிக்கடி இப்பக்கம் வரமுடியவில்லை. வேலைப் பழுதான்.. (தாய் தானே அம்..
என்னும் குழந்தைக்கு அம்..மா.. என்று சொல்லித் தந்து வழி நடத்தி
அப்பாவை அறி முகம் செய்து வைக்க வேண்டும்) தொடர்கிறது கடமைகள்.
அன்புச் சோதரி புஷ்பா கிறிஸ்ரி
*
அன்பின் நண்பர்களே,
நண்பர் புகாரியின் பஞ்சபூதக் கவிதைகளில் மற்றொன்றான "தண்ணீர்" அருமையான
கவிதை.
அதில் எனக்கு சிறு விளக்கம் தேவை.
"கண்ணீரும் தண்ணீர்தான் " என்கிறார் கவிஞர்.
தண் + நீர் = தண்ணீர். தண் = குளிர்ச்சி குளிர்ச்சியான பண்பு கொண்ட நீர்
"தண் நீர்" எனப்படுகிறது.
தண்மை = குளிர்ச்சி; வெம்மை = வெப்பம்/சூடு.
சுட வைத்த நீரை "வெந்நீர்" என்கிறோம்.
நடைமுறையில் அதைப் பலர் "சுடு தண்ணீர்" என்கிறார்கள் :-) பலர் வெந்நீர்
என்கின்றனர்.
சுட வைக்காமல், வெயிலில் கிடந்ததால் சூடாக இருந்தாலும் அதை வெந்நீர்
என்று சொல்லாமல் "தண்ணீர் சூடாயிருச்சி" என்கிறோம் :)
தமிழ்ச் சொற்கள் விதுமையான பெயர்களை இழந்து வருகின்றன என்று இராம.கி
அய்யா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம்.
வழக்கில், உரையில், இருப்பன ஒரு புறமிருக்கட்டும்.
கவிதைகளில், செய்யுள்களில் அந்த விதுமை குறையாமல் இருக்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பு சரியானதா?
"கண்ணீர்" வெதுவெது என்று இருக்கும். குளிர்ச்சியாக இருக்காது.
"கண்ணீரும் தண்ணீர்தான்" என்று சொல்லப்படும்போது அந்தத் "தண்மை"
கண்ணீரின் பண்புக்கு முரணாக இருக்கிறது என்று கருதுகிறேன். இதுபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்
நாக.இளங்கோவன்
*
வணக்கம் அண்ணே! என்னடா இது வரவேற்பு வாசித்துவிட்டதற்கு அப்புறம் ஆளையே
காணோம் என்று பார்க்கின்றீர்களா? என்ன பண்ணுறதுண்ணே ! விழாவுக்கு
வர்றவங்களே வரவேற்க வாசலுக்குப் போனேன். திரும்பி உள்ளே வர முடியலை.
இப்போது தான் கொஞ்சம் இடைவேளை. அதான் உள்ளே வந்துட்டேன்..
ஆகா என்னவொரு மகிழ்ச்சி. அரங்கத்தினுள் அமருவதற்கு கூட இடமில்லையா?
அரங்கு நிறைந்த காட்சிகளாக விருமாண்டியையும் புதுக் கோட்டை சரவணைனையும்
பார்த்து பழகிவிட்ட தமிழர்களுக்கிடையே இப்படியும் ஒரு இன உணர்வு.
அனுபவம் பெற்றவர்கள், அனுபவம் பெற போகிறவர்கள் என்று கதம்ப மாலையாக
அல்லவா அரங்கம் காட்சி அளிக்கிறது. தனியரு தமிழ் கவிஞனுக்கு நடக்கும்
விழா என்று இல்லாமல், ஒவ்வொரு தமிழன் இதயத்திலும் நடக்கிற விழா என்பதை
உலகுக்கு எடுத்துக் காட்ட வந்திருக்கும் தமிழர்களை பார்க்கும் போது ..
சித்தி னியல்பு மதன் பெருஞ் சத்தியின் செய்கையுந் தேர்ந்து விட்டால் மனமே
எத்தனை கோடி இடர் வந்து சூழினும் எண்ணஞ் சிறிதுமுண்டோ
என்ற மீசைக் கவிஞனின் வரிகள் நெஞ்சில் நிழாடிவிட்டுச் செல்கின்றன.
அது சரி! அங்கே என்ன தனியரு கூட்டம். ஒரு நிமிடம்...
அண்ணன் புகாரி கவிதைகளில் விஞ்சி நிற்பது எது? என்ற சிறு வாக்குவாதம்
தான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
நண்பர் 1 - என்னுடைய கருத்து என்ன என்றால் காதல் தான் என்னங்க கவிதைத்
தொகுப்பின் தலைப்பைப் பார்த்தாலே தெரியலையா? அன்புடன் ஓர் இதயம்
காதலைப் பற்றித் தான் அவர் அதிகம் எழுதியிருக்கிறார். அன்பு என்றால்
என்ன? பாசம், நேசம், காதல் இன்னும் என்ன என்னமோ சொல்லலாம். இந்த பாசம்,
நேசம், காதல் எல்லாம் எங்கு இருந்து வரும் இதயத்தில் இருந்து தானே.
காதலன் தன் காதலியை எங்கு வைத்து பூஜிக்கிறான் இதயத்தில் தானே. அதைத்
தான் அவர் அன்புடன் ஓர் இதயம் என்று அழகாக சொல்லி இருக்கிறார்.
நண்பர் 2 - அப்படி என்று ஒரேடியாகச் சொல்லிவிட முடியாது. சமூக
அவலங்களையும், தாய்மை உணர்வையும் அழகாக சொல்லி இருக்கிறாரே.
ஓர்
எவர்சில்வர்
குடத்திற்காக
எவனுக்கும்
ஓட்டுப் போடும்
இந்நாட்டு அரசி
என் அம்மா
இது ஒன்று போதாதா? நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் குடிமக்களின்
தேவை என்ன என்பது வெளிச்சம் போட்டு காண்பித்து இருக்கிறாரே..
குறுக்கிடுவதற்கு மன்னிக்கணும். இது பெரிய விசயம் அங்கே நிக்கிற ஆல்பர்ட்
அண்ணன்கிட்ட இது பத்தி கேட்டீர்கள் என்றால் உங்களுக்கு பதில்
கிடைக்கும் என்று சொல்லி விட்டு வாயிலைப் நோக்கினால் அட நம்ம தோழர்
தியாகு. விரைந்தோடி அவரிடம் சென்றேன். கரங்களைப் பற்றி அழைத்துச்
சென்று நண்பர்களை அறிமுகப்படுத்தி விட்டு, அரங்கத்தின் முன் வரிசையில்
அமர வைத்து விட்டு வாயிலுக்கு சென்றேன்.
உள்ளே அரங்கத்தில் கைத் தட்டல்கள் விண்னைப் பிளக்கின்றன.
அரங்கத்தின் வாயில் அருகே அமைதியாக வந்து நிற்கிறது. டாடா சுமோ. எங்கேயோ
பார்த்த வண்டி என்று யோசிப்பதற்குள் அமைதியாக கருப்புத் துண்டுடன்
புரட்சிப் புயல் வை.கோ .
தம்பி, தமிழனுக்கு இங்கு பாரட்டு விழா என்று கேள்விப்பட்டேன்.
வாழ்த்திவிட்டு போகலாம் என்று வந்தேன். மேடையேறி வாழ்த்திட ஆசைதான்,
என்றாலும் இப்போது அது இயலாது அல்லவா? தம்பி புகாரி கூட கனடாவில்
வசித்து வரும் தமிழராமே. மீண்டும் பொடாவில் உள்ளே போட்டுவிடப் போகுது
அம்மா
வேறு வினையே வேண்டாம் என்றவரை அரங்கினுள் அழைத்துச் சென்று அண்ணன்
புகாரியை அறிமுகப் படுத்தி விடைபெற்றேன் தற்காலிகமாக..
அன்புடன்,
அன்பு.
*
எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைக்கு இந்த விழாவில் நூலைப் பெற்றேன். ஆனால் அது என்றைக்கோ என்
இதயத்தில் இடம்பெற்றுவிட்டது
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு மக்கள் கவிஞர் என்று பெயர்!
இன்றைக்கு மக்கள் கவிஞராக நம்மிடையே இருப்பவர் சகோதரர் புகாரி!
எளிமையான நடையில் அழகாக எழுதக்கூடியவர் புகாரி! எழுத்துக் கூட்டிப்
படிக்கும் குழந்தை கூட புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகச்
சொல்லுகிற ஆற்றல் படைத்தவர் கவிஞர் புகாரி!
அவருடைய கவிதையில் தாக்கம் இல்லாத கவிதை உண்டா? கிடையாது. எனக்கு அவ்வளவு
கவிதா ஞானம் கிடையாது. இருந்தாலும் அவரது கவிதைகளைப் படிக்கும்போது
மனசுக்குள் ஒரு பரவசம் எழுகிறது!
பாரதியாரைப் பார்க்கும், பழகும் வாய்ப்பு இல்லை!
பாரதிதாசனைப் பழகும் வாய்ப்பு இல்லை!
ஒரு பட்டுக்கோட்டையாரை பரிச்சயப்படுத்திக் கொள்ள இயலவில்லை!
இவர்களாக என் கண்களுக்கு கவிஞர் புகாரி தெரிகிறார்.
இது முகத்தாட்சண்யத்துக்காகச் சொல்லப்படுவது இல்லை! உலகம் எங்கும்
அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ நிலவும் வானும்
நிம்மதி கேட்கிறதே.. என்று கவிஞர் யுத்தத்துக்கு எதிராகக்
குரல்கொடுக்கும்போதும்
கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு...
என்று நாட்டு நடப்பைப் பிட்டு வைப்பதிலும்
ஆளுக்கு ஆள் சாதி வெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க.....
என்று இவர் சொல்லுவதின் யதார்த்தம் எவருக்கேனும் புரியாமல்தான் போகுமா?
கவிஞரின் கவிதைகள் கரியமிலவாயு இல்லாக் காற்று!
இதயங்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது!
இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கிறது!
இன்னும் இந்தக் கூட்டத்தில் கவிஞரின் கவிதைத் தொகுப்பை படிக்காதவர்
இருந்தால் இப்போதே படிக்கத் துவங்குங்கள்!
இவர்கள் எல்லாம் இணையவானில் அன்புடன் இதயத்தைப் போதித்த கவிஞருக்கு
விழாவெடுக்கும் போது சிலருக்கு வாயார வாழ்த்த மனம் வேண்டாம்?
உதட்டளவிலாவது வாழ்த்துவோமே என்று எண்ன வேண்டாம்?
புன்னகைக்கத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு அருவியின் பாஷை
அறிமுகமில்லாமலிருக்கலாம்?!
பூபாளம் பாடத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு பூவின் புனிதம்
தெரியாதவர்களாயிருக்கலாம்?!
கண்களிருந்தும் குதிரைச் சேணத்தை வலுவில் பூட்டிக் கொள்பவர்கள்,
போகட்டும்; அவர்களுக்கு இதயங்களை ஈரப்படுத்தும்
எண்ணமில்லாதவர்களாயிருக்கலாம். என்று தான் எனக்குச் சொல்லத்
தோன்றுகிறது.
வாழும் காலத்தில் எந்த அறிஞன் சொன்னதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வரலாறு
இல்லை!
தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர் புகாரி வாழும் காலத்திலேயே
கெளரவிக்கப்படுபவர்!
இன்னும் இதுபோன்ற பலப்பல கெளரவங்களை, விருதுகளை அள்ளிக் குவிக்க வாழ்த்தி
விடைபெறுகிறேன்.
நன்றி; வணக்கம்
மணியம், சிங்கை
* |
|
| |
'எழில்
நில | |