5. நூல் வெளியீடு, ஆய்வுரை, வாழ்த்துரைகள்  
 
மாலன்:
பொதுவாக நூலுக்கு முன் பஞ்சு. ஆனால் இங்கு நூலுக்கு முன்னால் மஞ்சு (ரங்கநாதன்). மதுமிதா என்ற மஞ்சு பற்றி அவைக்கு ஒரு ரகசியத்தை அவசியம் சொல்ல
வேண்டும். மதுமிதாவிற்குக் கவிதை தொட்டுவிடும் தூரம்தான். ஆண்டாளின் ஊருக்கு அடுத்த ஊர் அவருக்கு. அந்தக் கவிதை இனித்ததிலும் வியப்பில்லை. காரணம் அவர் மாம்பழத்து ஊர்க்காரர். கவிதையில் கம்பீரம் கால் வீசி நடந்ததையும் கண்டிருப்பீர்கள். காரணம் அரசர்களின் பூமி அவரது ஊர். இன்னுமா தெரியவில்லை? அவருக்கு ஊர் ராஜபாளயம். பல மொழிகள் அறிந்தவர் பத்ருஹரியி ன் ஞானத்தைப் பகிர்ந்து கொன்டவர். நன்றி மதுமிதா.

காலணிந்த சிலம்பெடுத்து நியாயம் கேட்டார் கண்ணகி. மதுரை எரிந்தது, காப்பீடு கிடைக்கவில்லை, ஆனால் காவியம் கிடைத்தது! சரி கண்ணகியின் கோபத்தில் காவியம். பிறந்தது. மாதவிக்குக் கோபம் வந்தால் ?

நூலறிந்த நிமிர்வோடு இதோ வருகிறார், புதிய மாதவி. அரபிக் கடலோரப் புயல் அரங்கமேறுகிறது. ஆனால் அஞ்ச வேண்டாம். அது சகோதரியின் கோபம் அதனால் அது காயப்படுத்தாது. ஆனால் அது நியாயப்படுத்தும். அவரது கோபமும் நியாயமானதுதான்.

தமிழ் உலகின் தலை மகளே, தாமிரபரணி தந்த கலைமகளே வருக. இந்த இணைய வெளியில் இதயத்தை வெளியிட்டு இளவலை அன்புடன் வாழ்த்துக.



நூல் வெளியீட்டுரை: புதியமாதவி, மும்பை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு..!

என் அன்பினிய தமிழ் உறவுகளே...
வணக்கம்.

இன்று, இலக்கிய உலகின் ஒரு திருப்புமுனைநாள். இணைய உலகு தன் வலைப் பக்கங்களில் ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் பொன்னாள்!

இதையும் தமிழனே செய்தான் என்று வரலாறு எழுதி வைக்கும் ..! இதை நினைக்கின்றபோது உங்களில் ஒருத்தியாக நானும் இருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்.

சொல்லின் செல்வர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிதை உலகின் சிற்பிகள், கணினி உலகின் அற்புதங்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அரசியலின் அறிவுஜீவிகள், இலக்கிய விமர்சக வித்தகர்கள், தத்துவக் களஞ்சியங்கள்.. இப்படியாக அனைத்து துறைகளிலும் உள்ள அறிஞர்கள் இருக்கும் அவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் என்னை நூல் வெளியிடும்படி அன்புக்கட்டளை இட்டிருக்கின்றீர்கள்.

நானா? என்னையா? ஏன்? என்ன காரணம்? என்று அழைப்பிதழ் வந்த நாளிலிருந்து சிந்தித்து சிந்தித்துப் பார்க்கின்றேன்... இந்தத் தமிழுலகம் என்னைத் தன்னுடைய மூத்தமகளாக ஏற்றுக் கொண்டது மட்டுமேதான் காரணமாக இருக்க முடியும். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும்

இல்லை ..

சிந்து நதிக்கரைக்கும் சிங்களத்தீவுக்கும் பாலம் அமைக்கச் சொன்னான் நம் மகாகவி. ஆனால் நாம் கடல்களைத் தாண்டி, மலைகளைத் தாண்டி அரசியல் புயல்களும் அசைக்க முடியாத தமிழ் இணையப் பாலத்தை அல்லவா படைத்துவிட்டோம்..

தமிழ் என்ன தந்தது நமக்கு என்று இனி யாரும் நம்மைப் பார்த்துக் கேட்க முடியாது. தமிழ் நமக்கு முகம் தந்துவிட்டது. தமிழ் நம் அனைவருக்கும் தமிழுலகம் என்ற ஒரே முகவரியைத் தந்துவிட்டது. ஏன் தமிழ் நமக்கு இன்று "அன்புடன் இதயம்" தந்துவிட்டது... !

கணினியைக் காதலித்து, கணினியில் கருக்கொண்டு, கணினி பலகையில் பிறந்து கணினி வலைகளில் தொட்டில் கட்டி, கணினியில் கவிதை விருந்துகள் படைத்த கணினிக் கவிஞன், என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞன், தமிழுலகின் ஆஸ்தானக் கவிஞர், உயிரெழுத்தின் அகரம், கணினிக்கும் இணையத்திற்குமே காணிக்கையாக்கிய கவிதை நூலை அதே கணினி மேடையில் எட்டுத் திசைகளும் தமிழ்ப் பரப்புவது இனி இணையங்களே என்று பணிசெய்யும் இணையத்தள திசைகளின் ஆசிரியர் மதிப்பிற்குரிய மாலன்
அவர்களின் தலைமையில், இலண்டன் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சிவாபிள்ளை அவர்களின் முன்னிலையில் உங்கள் அனைவரின் சார்பில் கவிஞர் புகாரியின் அன்புடன் இதயத்தை வெளியிடுகின்றேன்.

(உங்கள் கரவொலி இணைய வானைப் பிளக்கிறது! இதயம் நிறைக்கும் இவ்விழாவில் நம் நிறைநாள் நேசர், அன்புக் கவிஞர் புகாரி அவர்களின் நூலை வெளியிட்டு இணைய வரலாற்றில் வைரவைடூரிய மகுடம் சூட்டிய சகோதரி மாதவி அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது )



ஆய்வுரை: புதியமாதவி

இனி, கவிஞர் புகாரியின் அன்புடன் இதயம் நம்முடைய அன்புடன் இதயம்... அன்புடன் இதயம்... கவிஞர் புகாரி.

ஒரு பார்வை....புதியமாதவி, மும்பை.

எது இதயம்?.. அறிவியல் அறிந்த உண்மை. ஆனால் உளவியல் இன்னும் ஆழம் காணமுடியாத இடம். அந்த ஆழம் காணமுடியாத இடத்திலிருந்து பிறப்பதுதான் கவிதை. அதனாலேயே எது கவிதை என்று இதுவரை எவருமே சொல்லியதில்லை. சொல்ல முடிவதுமில்லை. கவிதை மரபு தமிழின் தொன்மம். ஆனால் "கவிதை பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாகவே ஆராய்ந்திருக்கின்றார்கள். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றி தமிழன் ஆராயவே இல்லை" என்கிறார்
புதுமைப்பித்தன்.

"கவிதை என்றால் அதற்கு வாசகனை வரவேற்கும் கதவுகள் அல்லது வாசகனை எட்டிப் பார்க்கத்தூண்டும் ஜன்னல்கள் இருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அந்தப் படைப்பைப் புறக்கணிக்க வாசகனுக்கு முழு உரிமை உண்டு" என்று ஒரு இலக்கணம் சொல்லுவார் கார்ல் டென்னிஸ்.
(practical gods கவிதை நூலுக்கு 2002 ல் புலிட்ஸர் விருது பெற்றவர்)

அப்படி எந்த வாசகனும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அன்புடன் இதயத்தின் கவிதை நாளங்கள்..சில இடங்களில் பீறிட்டுக் கொண்டு நம்மைத் துடிக்க வைக்கின்றது.
சில இடங்களில் தொட்டவுடன் நம்மை ஈரமாக்கி புகாரி என்ற கவிஞனின் ஈர இதயத்தில் நம்மை நனைத்து எடுக்கின்றது.

சில இடங்களில் வெறும் சந்தங்களிலும் ஓசைகளிலும் மாவு கட்டு போடப்பட்டு கவிதையே காயப்பட்டு தவிக்கின்றது. அன்புடன் இதயத்தில் இப்படி எல்லாமும் கலந்து இருப்பதே இதன் பலமும் பலகீனமும்.

"காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"

என்று மகாகவி பாரதி சொல்லிவிட்டுப் போகட்டுமே. இந்த மனிதக் கவி சொல்லுகின்றான்.. காதல் தோல்விக்குப் பிறகு..

உன்னை மட்டுமா நான் இழந்தேன்..?
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்..
வருந்தித் துருப்பிடித்துச்
சாவது
ஒருக்காலும் உசிதமல்ல..
நானும் போய்
காத்திருக்க வேண்டும்

என் பிரியக் காதலியே..
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு...

(நாந்தான் வேண்டும் எனக்கு, க.2/பக் 21)

காதலின் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்கள் அல்ல. காதலில் ஒருவன் தன்னை இழப்பது இயற்கை. ஆனால் அந்தக் காதல் இழப்பில் வாழ்க்கையையே இழப்பது மானுடம் பாடும் கவிஞனின் இதயமாக இருக்கமுடியாது. காதலில் உச்சத்தைப் பாடி அதே நேரத்தில் வாழ்வின் யதார்த்தத்தையும் பாடி கவிஞன் தன் பாதங்களை கவிதை மண்ணில் அழிக்க முடியாத அடையாளமாக்கி இருக்கின்றான்.

அழகியலில் , உணர்வியலில் கருக்கொள்ளும் கவிதை இன்று அறிவியலுக்கும் ஆராதனைச் செய்கின்றது. தாள்களில் கவிதை எழுதும் கற்பனைக் கவிஞனல்ல இவன். கணினியே கைகளான அறிவியல் நூற்றாண்டின் கவிஞன் இவன். அதனால் தான்,

பிறப்புச் சூட்சமம்
உரைக்கும் நியதிப்படி..
மறுப்பவர்கள் அல்ல-ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்...

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்..
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்...

..இந்த அறிவியல் கருத்தை கவிதையாக்கியதாலேயே மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய இந்தக் கவிதை சமுதாய தளத்தில், கவிதைப் பேச வந்த பெண்ணியல் உரிமை/விடுதலையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானத் தீர்வை முன்வைத்து தவிர்க்க முடியாமல் சரிந்து விழுகின்றது.

பெண்கள் கேட்பதில்லையாம், பெண்களின் விருப்பம் அறியாமலேயே ஆண்கள் ஓடிக்கொண்டிருக்கலாமாம்..பெண்கள் கேட்டால் ஆண்கள் உடனே கொடுத்து விடுவார்களாம்.. வரம் கேட்டு வாங்குவதெல்லாம் பெண்கள்.. அதைக் கொடுத்து விட்டு அல்லல் படுபவர்கள் ஆண்களாம்.. தன் கட்சிக்கு ஒரு தசரத மகராஜாவையும் கூட்டணி.சேர்த்திருக்கின்றார் கவிஞர்.

பெண்..

"காதல் பேசிய
விழிகளால் மட்டுமல்ல..
சம்மதம் சொன்ன
மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக்
கேளுங்கள்... " என்று.

அறிவியல் சிந்தனையுடன் கலந்து இப்படியும் ஓர் ஆணாதிக்க மரபுவழிச் சிந்தனையா? பெண் கேட்பது அவள் தேவைகளோ விருப்பங்களோ அல்ல கவிஞரே.. அவள் இன்று கேட்பது அவளுடைய உரிமைகள்..

"நீ பின்னுக்குப் போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன்
கண்ணுக்கு முன்னே
போராடு...

என்று தோழியரைப் போராட அழைத்துவிட்டு.. ஆணிடம் கேட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்று பாசாங்கு செய்து அதையே தீர்வாக்கி..

"தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட
அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று
தெறித்துச் சிதறி
எங்கும்
சமத்துவமே துளிர்க்கும்..."

என்று சப்பைக் கட்டு கட்டியிருப்பதில் வருத்தம் ஏற்படுகின்றது என்பதைவிடக் கோபம் வருகின்றது என்பதுதான் உண்மை. அறிவியல் உண்மைகளை அறிந்த அளவுக்கு சமத்துவம், பெண்ணிய உரிமைகளை அறியவே மறுக்கும் ஓர் ஆணின் முரட்டுத்தனமான ஆதிக்கப்பார்வையாகவே இதைப் பதிவுச் செய்கின்றேன்.

(தோழியரே! தோழியரே! க.10/பக் 50..53)



கவிதைகளைக் காட்சிகளாக விரித்து கண்முன்னே கவிதைப் படமாக்குவதில் கவிஞரின் பார்வைக்கு ஆஸ்கார் விருது கட்டாயம் உண்டு.ஆமாம்.. இவருடைய "கல்யாணமாம் கல்யாணம்" அந்த வரிசையில் ஒரு விருது. இனம், மொழி,மட்டுமல்ல அவரவருக்கான சிறப்பு வட்டார/குடும்ப இயல்புகள் பதிவுச் செய்யப்படும்போது அந்தக் கவிதை வண்ணங்களே தேவையில்லாத துளசிச்செடிப் போல தனித்து தனித்துவத்துடன் கவிஞனின் முகம் காட்டுகின்றது.



காதலைப் பற்றி, நட்பைப் பற்றி எல்லாம் எழுதாதக் கவிஞர்கள் இருக்க முடியும். ஆனால் அம்மாவைப் பற்றி எழுதாதப் படைப்பாளனே இருக்க முடியாது. அந்த தொப்புள்கொடி உறவைத் தொடுகின்றபோது உணர்வின் அலைகள் உணர்வுக் கடலிலிருந்து வெளியில் வந்து யதார்த்தக் கரைகளைத் தொடுவதும் ஆபூர்வம். அப்படி ஒரு உணர்வு போராட்டத்தை ஒவ்வொருவரும் "அம்மா" என்ற சொல்லில் உணர்கின்றோம்,. என்றால் கவிஞர்களுக்கு கேட்கவா வேண்டும். ஆனால்..

"அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்..?

என்று ஏங்கும் கவிஞர்..

"எனக்கு கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்
அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்.."

என்று உணர்வுச் சுழியில் தவிக்கும் கவிஞர்...இறுதியில் முடிக்கின்றார்... அவர் கவிதைகளின் மணிமகுடம்... இந்த வரிகள்...

"நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல..?"

(அம்மா வந்தாள். க.19/பக் 75..77)

உலகமயமாதல், பொருளாதர வீக்கம், நுகர்வோர் சந்தைகள், வியாபாரத் தந்திரங்கள் ...இப்படி ஆயிரமாயிரம் சிந்தனை வீச்சுக்களை அள்ளிக் கொட்டுவது இந்தக் கடைசி நான்கு வரிகள்...இந்த வரிகள் சொல்லும் நிதர்சனமான உண்மை, அந்த உண்மையின் வலி, அந்த வலிக்கான காரணம், தெரிந்தும் தெரிந்தும் அந்த வலியிலிருந்து மீள முடியாத மனிதச் சமூகம்.. இதில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துக் கொண்டிருக்கும் அடிப்படை உறவுகள்..இப்படி சிந்திக்க சிந்திக்க வலை விரியும் அதில் அன்புடன் இதயம் கண்ட புகாரியின் விசவரூபம் தெரியும்.



"எழுதக்கூடாத கடிதம்"

(க.24/பக்.90..94)

என்னைக் கவர்ந்தக் கவிதை. பொய்முகம் காட்டாத, ஒழுக்கவிதிகளில் ஒருமித்த உருவமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாத இயல்பு மனிதனின் இதயத்திலிருந்து அலங்காரமில்லாமல் வந்து ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் சொல்லப்படாதக் கதைகளைச் மெளனத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் கவிதை. இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் எடுத்து உள்ளே உள்ளே சென்று எத்தனையோ விஷயங்களைச் சொல்லமுடியும். சில வரிகளை மட்டுமே இடுகின்றேன்.

மெளனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை....
எனக்குக் கேட்காததா..?

மெளனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் இதயம் இங்கே

......

என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை.

மரபின் சங்கலியில் கட்டப்பட்டு தவிக்கின்ற இதயம் இங்கே

உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே தவமிருக்கும்
உன்னையே...
காதலிக்கும்...
உனக்குள்...

....அந்தத் தீ
எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்
ஆனால்
உன்
சொந்தக் காட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்

......

தன்னைப் பற்றியக் கவலையின்றி நேசிப்பவளின் சமூக மதிப்பு, மரியாதை, குடும்பம், குலம், பெயர்... எல்லாவற்றையும் நெஞ்சில் நிறுத்தி இதுதான் வாழ்க்கை என்பதை துயரத்துடன் ஏற்றுக்கொண்ட இதயம் இங்கே..

உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை
உச்சரிக்கிறேனடி...

கவிதை வெறும் சொறகளின் அர்த்தங்களையும் தாண்டி வாசகனை என்னவோ செய்யவேண்டும்.. இன்னும் சொல்லப்போனால் புரியாத மொழியின் இசையில் மயங்கும் இதயம் போல கவிதையும் சில நேரங்களில் மனசை வருடும். ஆயிரமாயிரம் பன்னீர்ப்பூக்களைக் கொட்டியது போல வார்த்தைகள் விழ வேண்டும். கவிதையின் இறுதியில்... காதலைச் சொல்லிவிட்டு கேட்கின்றார் கவிஞர்..

உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்
இருந்தும் அன்பே..
அந்த மரணமடையாத
மனத்துடிப்புகள்
என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய..?

என்று முடிக்கின்றார்.

இந்த வரிகளைப் படித்தவுடன் கவிஞர் அறிவுமதி ஆண்-பெண் உறவு பற்றி எழுதியிருக்கும் கீழ்கண்ட வரிகள் ஒப்பிட்டு நினைவுகூரத் தக்கன.

" தண்ணீருக்குள் நெருப்பாய்.. நெருப்புக்குள் தண்ணீராய் காமம் (காதல்) நுழைந்து வெளியேறாத உடல் இல்லை, உயிர் இல்லை. மனித உடல்களில், உயிர்களில் மட்டும்தான் காமமும் காதலும் உள்நுழையவும் திணறி.. நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கிச் சீரழிகின்றன. இயல்புத் தொன்மம் செயற்கைத் தொன்மமாய் ஆக்கப்படுகின்றபோது இந்தக் சிக்கல் எழும். இணைவின் வலியுணர்ந்து உயிரை உள்விழுங்கிக்கிறங்க வேண்டிய வாழ்க்கை இணைய முடியாததன் வலியைக் கூவிக் கூவிக் கத்துதலால் சிதறிப்போகின்றது.
அந்த தவிப்புகளின் வெளிப்பாடுகளாய்தாம் இந்தக் காதல் கவிதைகள்"



"என் குடும்பம் "

க.28 /பக் 105,106

இந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் பழமலய் அவர்களின் சனங்களில்கதையில் இடம்பெறும் உறவுகளின் நினைவு எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு உறவுகளுக்கும் தனி ஆவர்த்தனம் செய்திருக்க வேண்டும். ஆனால் அன்புடன் இதயம் தந்திருப்பது குடும்ப புகைப்படம்... சின்ன சின்னதாய்த் தெரிகின்றது முகங்கள்..



பஞ்சபூதங்களில் ஒரு சிலக் கண்ணிகள் கவிதையிலிருந்து தனியே எடுத்து வாசித்தால் மிகச் சிறந்த துளிப்பாக்களாகிவிடும் . இதுமட்டுமே இதற்கானச் சிறப்பு.



'ஐயா, இது அமெரிக்கா!" ( க.16/பக் 65..67)

கவிஞரின் வாழ்க்கைப் பின்புலத்தில் அதிகமாக எதிர்பார்க்க வைக்கும் தலைப்பு வெறும் கடன் அட்டையாகவும் கழுத்துப் பட்டையாகவும் காட்சி தருவது அவலம்தான்.



அழிவில் வாழ்வா? .. க.4/பக் 24..33

சில குழப்பமானச் சித்தாந்தங்கள்..

அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக்
கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்.

ஆமாம்.. அரிவாள்களும் கேடயங்களும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவைதானே. அரிவாள்களின் கதைகளை முடிக்க கேடயங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.. கேடயங்கள் கேடயங்களாகவே இருந்தால் அரிவாள்களும் அரிவாள்களாகவே தொடரும் என்பதுதான் உலகச் சரித்திரம்.



சிலக் கவிதைகளில் கவிதைகளுக்கு முன்னால் கவிஞர் கொடுக்கும் இடம்சுட்டி பொருள் விளக்கம் கட்டாயம் நீக்கப்படவேண்டும்.

கவிதைகளுக்கான புகைப்படங்கள் கணினியின் வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றது. எல்லோரும் அதைத்தான் செய்கின்றார்கள். விளைவு... நிறைய புகைப்படங்கள் சமகாலத்திய எல்லா கவிஞர்களின் கவிதைகளிலும் முகங்காட்டுகின்றது. வாய்ப்பும் வசதியிமுள்ள கவிஞர் புகாரி போன்றவர்கள் உருக்கவர் பெட்டியை தனியாக சுமந்து தனித்துவமான புகைப்படங்களைத் தரமுடியும்.



கவிஞர் என்றால் கட்டாயம் தமிழ்- சித்திரை பற்றி எல்லாம் கவிதை எழுதியே ஆகவேண்டுமா என்பதைக் கவிஞர் சிந்திக்க வேண்டும்.



கவிஞர் புகாரியின் முதல் கவிதை தொகுப்பு வெளிச்ச அழைப்புகள். அங்கே அவர் கவிதைகள் அருவி.. அன்புடன் இதயம் அந்த அருவியின் வாய்க்கால். கால ஒட்டத்தில், கணினி உலகமும் சந்தக் கவிதை அரங்கங்களும் இந்த அருவி நீரில் கலந்துவிட்டது தெரிகின்றது. எல்லாக் கவிஞர்களுக்கும் இவை எல்லாம் தவிர்க்க முடியாதவைதான்.

திசைகள் இணைய இதழ் ஆசிரியர் மாலன் அவர்கள் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது

"வெறும் வார்த்தைகளாக முடிந்து போகிற கவிதைகள் உண்டு. வார்த்தைகளுக்கு வசப்படாமல் மிஞ்சி நிற்கிற கவிதை அனுபவங்கள் உண்டு" என்பார். அவர் சொல்லும் இரண்டுமே அன்புடன் இதயத்தில் உண்டு. மேலும் கவிதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அவர் சொல்லுவார்.

" அகங்காரம் கூடாது, துதிபாடல் உதவாது.புரிந்து கொள்ளும் விருப்பம் வேண்டும். புரியாவிட்டாலும் நெருங்கிவந்து நேசம் குறித்து நெஞ்சம் மகிழ வேண்டும். வார்த்தைகளுக்கு இடையே வந்து விழும் மெளனத்தை வாசிக்கும் திறம் வேண்டும். ஒப்பனைகளை அலட்சியம் செய்யவும் உண்மைகளை தரிசனம் செய்யவும் உள்ளே ஒரு திடம் வேண்டும்:" என்பார்.

நானும் என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞனை அப்படித்தான் பார்க்க முயற்சி செய்திருக்கின்றேன்.அது மட்டுமல்ல அன்புடன் இதயத்தின் அன்புடன் இதயம் சொன்ன வரிகள்...

சரியா..? நூறுசதம்..!
அழகா..?அற்புதம்..!
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்...

சரியா..?ம்ஹ¥ம்!
அழகா..?மாற்று!
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள....
..
கவிஞனே உன் வார்த்தைகளின் சத்தியத்தை என் பார்வைகளில் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்திருக்கின்றேன். கணினி மேடைக்கும் இணைய தேவதைக்கும் ... காணிக்கையாக்கப்பட்ட அன்புடன் இதயம்.. இணையத்தில் வெளியிடப்படும் முதல் கவிதைநூல்... இந்தச் சிறப்பினைச் செய்யும் தமிழுலகத்திற்கு என் வாழ்த்துக்களும் ..

நன்றியும்...

அன்புடன்,
புதியமாதவி,

(மாலன்: தாமிரபரணியில் நனைந்தவர்களுக்கு இதயத்தில் ஈரத்தோடு தமிழும் எப்போதும் உடனிருக்கும். மாதவியார் வசிப்பது மும்பை என்றால் அவருக்குத் தாய் மண்
நெல்லை. அவரது கருணையும் கறாராரும் எங்கிருந்து பிறந்தவை என்பது இப்போது புரிந்திருக்குமே! அடுத்து வருவது யார்? அறிந்து கொள்ளப் பொறுத்திருங்கள். இடையில் ஒரு
வேண்டுகோள். தமிழ் சொற்கள் வலிமை வாய்ந்தவை. குறைவான வார்த்தைகளைக் கொண்டே நிறையச் சொல்ல முடியும். குறள் இருக்கிறதே மறுக்க முடியாத
சான்றாக. அடுத்து வரும் நண்பர்கள் சுருக்கமாகப் பேசினால் தங்கம் கிடைக்கும். ஆமாம் காலம் பொன் போன்றதாயிற்றே!)



நூல் பெறுதல்: அனந்தநாராயணன், ஹாமில்டன், கனடா

கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்" கவிதை நூலை மாதவி வெளியிட முனைவர். வே.ச. அனந்தநாராயணன் நண்.மணியத்தை முந்திக்கொண்டு போய் மேடையில் மாதவியிடம் பெற்றுக்கொண்டு அப்படியே பளிச்..பளிச் பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடிக்கொண்டிருந்தது. விட்டால் மாதவியிடமிருந்து ஒலிவாங்கியை பறித்துப் பேச ஆரம்பித்து விடுவார் போலிருந்தது. சரி, உங்களுக்குப் பின்னால் மணியம் வேறு நூலை வாங்க அந்தக் கடைசியில இருந்து ஓடி வர்றாரு என்று அவரை சமாதானப் படுத்தி மேடையின் இரண்டாவது வரிசையில், முன்வரிசையில் அமர்ந்திருந்த சிவா பிள்ளைக்கு பின்புறமாக உட்கார வைத்தார், கவிஞர்.கற்பகம்.

கவிஞர்.மாதவி பேசி முடித்ததும் கைதட்டல் இணையக் கூரையைப் பிய்த்துக் கொண்டு போனது. மீண்டும் பளிச்..பளிச்களுக்குப் பிறகு சி.என்.என் நிருபர் கவிஞர்.மாதவியை ஒட்டி நடந்தவாறே பேசிக் கொண்டு போக..இதுதான் சமயம் என்று ஒலிவாங்கி இருக்குமிடம் நோக்கி வேகமாகப் போனார். வேறு யார்?

கனடா ஹாமில்டன் நகர மெக் மாஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர்.வே.ச. அனந்தநாராயணன் தான்! அவர் என்ன சொல்லப் போகிறாரோ பார்ப்போம்.



எழுச்சியோடும், விழிச்சியோடும் இங்கு கூடியிருக்கிற எனதருமை தமிழ் அறிஞர்களே! ஆர்வலர்களே, அனைவர்க்கும் வணக்கம். விழாத் தலைமைக்கும், வாய்ப்பளித்த பேருள்ளங்களுக்கும் என் உவப்பான வணக்கங்கள்! நூல் பெறுவோன் ஆகிய என் உரைதனை சுருக்கமாக தலைவர் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் முன் ஆற்றிட வந்துள்ளேன்.

இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட இனிய வரங்களில் தலையாயது பிறரின் சிறப்பைப் போற்றி வாழ்த்துதற்குக் கிட்டும் வாய்ப்பு ஆகும்.

அன்புடன் இதயத்திலிருந்து வரும் வாழ்த்து, அளிப்பவரையும் பெறுபவரையும் இன்பத்தில் ஆழ்த்தி அவ்விருவரின் வாழ்வின் தரத்தை உயர்த்தும். வாழ்த்துப் பெறுபவர் ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞர் என்றாகும்போது இந்த இன்பம் விண்ணையும் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடும். அத்தகைய ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்பு எனக்கு இந்தத் தமிழுலக இணையவெளிப் பந்தலிலே நம் இணையக் கவிமன்னர் புகாரி அவர்களின் நூல் வெளியீட்டு விழா வழியாக இரண்டாம் முறையாகக் கிட்டியிருக்கிறது.

தொராண்டோவில் நடைபெற்ற 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டு விழாவில் நான் நேரில் கலந்து கொண்டு என் வாழ்த்துரையை அளிக்க இயலாமற் போன குறையைப் போக்குகிறது இந்த இரண்டாம் வாய்ப்பு. கவிஞர்களும் அவர்களுடைய கவிதைகளைச் சுவைப்பவர்களும் கற்பனை வளம் மிகுந்தவர்கள் ஆதலால், இந்த இணையத் தள விழாவில் பெருமளவில் கூடியிருக்கும் அத்தனை பேரையும் என் மனக்கண்ணால் நன்கு காணமுடிகிறது. இந்த அழகிய சூழ்நிலையில் கவிஞர் மாதவி தம் கவிதைக் கைகளால் எனக்குத் தரும் 'அன்புடன் இதயம்' நூலைக் களிப்புடன், பெருமையுடன் பெற்றுக்கொள்கிறேன்.

முந்தைய விழாவில் கவிஞர் புகாரியின் திறத்தையும் நூலின் சிறப்பையும் பற்றி நான் கூறியதின் ஒரு பகுதியை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: "மணிமணியாக முப்பது கவிதைகளைக் கொண்டு தொகுத்த மாலையான 'அன்புடன் இதயத்தை'ப் படிக்கையில் நம் நெஞ்சில் பல்வேறு துடிப்புகள் மாறிமாறிப் பயில்வதைப் பார்க்கிறோம். முதல் பாடலிலேயே, நம் தாய்மொழியின் ஏற்றத்தைக் கவிதையின் நடையழகிலும் பொருள் அழகிலும் நாம் உணரச் செய்கிறார். இதை அடுத்து வரும் காதலும் கனிவும் கொண்ட பாடல்கள் நம் இதயத்தில் "சொட்டுச் சொட்டாய் அமுத அழகை' வார்க்கின்றன. மேலே தொடர்ந்து, வேதனையும் விரக்தியும் விரவி மனத்தின் அடித்தளத்தைத் தொடும் பாடல்களும், அந்நிலையிலிருந்து நம்மைப் பிரபஞ்ச வெளிக்குக் கொண்டுசென்று சிறகடிக்க வைக்கும் 'பஞ்சபூத'ப் பாடல்களும், ஒரு விந்தைக் கவிஞனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவனுடன் நம்மைப் பயணம் செய்ய வைக்கின்றன" இப்போது, நீங்களும் என்னோடு சேர்ந்து நம் நண்பரும் பெருங்கவிஞருமாகிய புகாரி அவர்களுக்கு உங்கள் சார்பில் நான் எழுதிய ஒரு வாழ்த்துக் கவிதையைப் படிக்க வருகிறீர்களா?

இதோ, இலேசாகச் செருமிக் குரலைச் சரிசெய்து கொண்டு துவங்குவோம்:

கண்ணிலே காண்ப தெல்லாம்
கணினியில் காகி தத்தில்
வண்ணமும் வனப்பும் மிக்க
கவிதையாய் வடிக்க வல்ல
பண்புடை கவிஞர் ஏறு
படைத்தநல் நூலை இன்று
நண்பர்நாம் இணையம் ஏற்றி
நவிலுவோம் நமது வாழ்த்தை!

'முப்பது துடிப்பு' மூலம்
முழுமையாய் நமதுநெஞ்சைக்
கப்பிடும் நினைவை, காணும்
கனவினைப் படமாய்க் காட்டும்
செப்படி வித்தை தன்னைச்
செய்திடும் இவர்தி றத்தைச்
செப்புவது ஆமோ? என்றன்
சிந்தையால் வாழ்த்து கின்றேன்!

அன்புடன் இதயம் என்னும்
அழகிய நூலைப் பெற்றேன்
இன்பமாம் கடலில் நீந்த
இனியதோர் வழியைக் கற்றேன்!
தன்பணி தன்னில் ஓயாத்
தமிழுல கென்னும் இந்த
மின்குழு வாழ்க! மேலும்
வாழ்கநம் கவிபு காரி!

என்றும் அன்புடன்,
அனந்த்



திடீர் அறிவிப்பாளர்: பரணி சங்கர், மும்பை

இதுவரை நீங்கள் கேட்டது சன் டி.வி.யின் நேரடி ஒலிபரப்பு... இதோ மும்பையிலிருந்து இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் வந்திருக்கும் மூன் டி.வி.யின் நேரடி ஒலிபரப்பு ஆரம்பமாகிவிட்டது...

சலோ சலோ..கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு வருகின்றார் மூன் டி.வி.க்காரர் மாலன்ஜி நமஸ்தே...மாதவி பைஜாநா....

நேயர்களே இப்போது நீங்கள் நுழைவாயிலைப் பார்க்கின்றீர்கள்..

கூட்டம் அலைமோதுகின்றது. வந்திருப்பவர்கள் எல்லோருக்கும் நுழைவாயிலிலேயே ஒரு அடையாள அட்டை வழங்கப்படுகின்றது. அதில் அவர்களின் பெயர், மடலாற்குழுவின் பெயர், இடம்.. என்ற குறிப்புகள் இருக்கின்றன. எல்லோரின் கழுத்திலும் தொங்கிக்கொண்டிருக்கின்றது அடையாள அட்டை. விழாக் குழுவினரின் மிகச் சிறப்பான இத்திட்டத்தால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது எளிதாகிவிட்டது. இல்லை என்றால் இதுவரை நேரில் சந்திக்காத இவர்களில் பலருக்கு எத்தனை விதமானச் சிக்கல்கள் வந்திருக்கும்... என்கிறார் பரத் அவர்கள்...

அதோ அரங்கத்திற்குள் ஒரு பெரியப் பேரணி நுழைகின்றது. தேர்தல் நேரத்தின் மகா கூட்டணிக்கு வந்தது போல் கூட்டம். தளைய தளைய வேட்டிக் கட்டிக்கொண்டு நாதஸ்வரம் முழங்க கரகாட்டம் பின் தொடர சிலம்பாட்டத்தைக் காட்டிக் கொண்டே பேரணி அரங்கத்தில் நுழைகின்றது. இலக்கிய விழாக் கூட்டம் இவர்களின் வருகையால் மாநாடு போல் காட்சிதருகின்றது., அவர்கள் கைகளில்

ஆஸ்தானக் கவிஞர் வாழ்க..

அன்புடன் இதயமே வாழ்க..

எங்கள் உயிரெழுத்தே வாழ்க..

கணினி கவித்திரையே வாழ்க..

இணையத்தின் வானம்பாடியே வாழ்க..

அவர்கள் ஏந்தி வந்திருக்கும் பேனர்களின் வரிசையை இப்பொது நீங்கள் பார்த்தீர்கள்.. அவர்கள் யார் ? என்று தெரிகின்றதா... அரபு நாடுகளின் அமீரக நண்பர்கள். இப்போது அங்கிருக்கும் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விழாக் கண்டவர்கள்.. அப்படியே அந்த விழா முடிந்து இங்கே வருகின்றார்கள்... அவர்களின் முன்வரிசையில் நீங்கள் காண்கின்ற இந்த இளைஞர் ஆசிப்மீரான்.. அரபு வானொலியில் தமிழர்கள் கேட்கும் தமிழ்க் குரலுக்குச் சொந்தக்காரர்.. அருகில் சாபு, இசாக்.. இந்தக் கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கின்றார் நம்பி அவர்கள்.. இத்தனைப் பேருக்கும் டீ, காபி .. இருக்கின்றதா என்ற கவலையில் அவர் உள்ளே போய் பார்க்கின்றார்....

கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களும் புதியமாதவியும் தங்களின் அந்த நாள் மலரும் நினைவுகளில் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. கவிமாமணி மும்பையில் இருந்தவராம்.ஏற்கனவே தெரியுமாம்..

ஒருவர் மேடையில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்..

கவிஞரே..
நாங்கள் எண்ணெய்க் கிணற்றில்
அவதரித்த ஆக்ஸிஜன்கள்..
உன் அன்புடன் இதயம்
தொட்டபிறகுதான்
பிராணவாயுவாக
மீண்டும் பிறந்தோம்...

. கைதட்டலில் அரங்கம் அதிர்கின்றது.... ஆமாம் மாலையில் சிறப்பு பட்டிமன்றம் இருக்கின்றதே.. கவிஞர் புகாரியில் கவிதையில் விஞ்சி நிற்பது காதல் உணர்வுகளா..?
அறிவியல் சிந்தனைகளா...?

வாவ்!! நல்ல தலைப்பு.. ஆமாம் யாரெல்லாம் பேசுகின்றார்கள்... தலைவர் யார்? உஷாவிடம் கேட்டோம். ம்ம்ம் சஸ்பென்ஸ் என்று அவர் சிரிக்கின்றார்.


இதோ இப்பொது நீங்கள் அரங்க மேடையின் அருகில் பார்க்கின்றீர்கள் கற்பகம் சேவியர் மீனாக்ஸ் என்று உயிரெழுத்தினர் உள்ளே நுழையும்போது மேடையிலிருந்தே கை அசைக்கின்றார் கவிஞர்.. அவர் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.. உயிரெழுத்திற்கு எங்கிருந்து வந்தது இந்த மெல்லினப்புன்னகை.

இதோ அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு மற்றவர்களை வேலை வாங்கிக் கொண்டு பதட்டத்தை வெளியில் காட்டாமல் நிற்பவர்தான் இளைஞர் ஆல்பர்ட்.. வருகின்றவர்களிடம் கைகுலுக்கி எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்து அசத்திக் கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல.. சிங்கையிலிருந்து வந்திருக்கும் பழநி அண்ணன்.. வை. கோ விடுதலைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆணித்தரமாக தன் கருத்தை சொல்லிக்கொண்டிருக்கும் இவர் சென்னை வாசியாம்.

அடேங்கப்பா.. நம்மவர் யார்? என்று இவரிடம் கேட்டால் ஒரு பெரிய்ய விளக்கம் கிடைக்கும் என்று விழாவிற்கு வந்திருக்கும் ஒருவர் சொல்வதை இப்போது நீங்கள் கேட்டீர்கள்.. மதிய உணவு அயிட்டங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள் விழாக்குழுவின் அன்பும் பாண்டியனும். சிக்கன் உண்டா என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் சரொஜாதேவி ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர்..சுலைமான் அவர்கள். முன்வரிசையில் ஒரு சொல் ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கின்றது.. இதயம் என்பது தமிழ்ச்சொல்லா வடசொல்லா என்று. இதய நோய் வருவதைத் தவிர்ப்பது எப்படி என்று மருத்துவம் பேசிக்கொண்டிருப்பவர் ஹாங்காங் பிலிப் அய்யா.. பொடி வெங்காயத்தின் நன்மை தீமைகளைப் பேசி லெக்சர் எடுப்பவர் பேராசிரியர்..போஸ்.. இதை எல்லாம் காகிதத்தில் குறித்துக் கொண்டிருப்பவர் திண்டுக்கல் அய்யா ஞான வெட்டியான்.. இவர்கள் எல்லோரிடமும் போய் பேசிக்கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல.. புதுக்கோட்டை சரவணன்..!!!

விழாவுக்கு வந்திருந்த ஆண்களில் 99.9 விழுக்காடு தனியாகவே வந்திருப்பதை பார்க்கின்றீர்கள்...ஆண்கள் பொது இடங்களுக்கும் இலக்கிய அரசியல் விழாக்களுக்கும் வரும்போது தங்கள் துணைவிகளை ஏன் அழைத்து வருவதில்லை.. என்று பலரிடம் கேட்டோம்.. இதைப் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு இன்று இரவு 10 மணிக்கு ஒலிபரப்பாகும்.. காணத்தவறாதீர்கள்... சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பெண்களும் கருத்து சொல்லி இருக்கின்றார்கள் காணத் தவறாதீர்கள்...

எங்கள் மும்பையின் தமிழ் ஒலிபரப்பு இத்துடன் முடிவடைகின்றது.. இனி எங்கள் ஒலிபரப்பு டில்லி அலைவரிசையில் தொடரும்.. நாளை இதே அரங்கத்தில் உங்களைச் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுவது.... உங்கள்..பரணி சங்கர்.



வாழ்த்துப்பா: மதுமிதா, தமிழ்நாடு

புத்தக வெளியீடு இனிதாய் முடிந்து வாழ்த்துரைகளின் நடுவே வாழ்த்துப்பாடல் ஒன்று. அனுசரித்துக்கொண்டு ஒருதாய் மக்கள் நாமென்போம்... மெட்டில் பாட வேண்டும்

உலகம் அனைத்தும் ஓரிடத்தில்
உறவாய் கூடின செந்தமிழால்
பிறந்தது புதிய வரலாறு
பலரும் போற்றிட இணையத்தால் (உலகம்)

அன்புடன் இதயம் எனும் நூலை
அகிலம் மகிழ்ந்திட படைத்தவராம்
கவிஞன் புகாரியை வாழ்த்திடவே
இணைந்தன இணைந்தன இதயங்கள் (உலகம்)

சென்னையில் வசிக்கும் மாலனுமே
சிறப்பாய் தலைமை வகித்திடவே
மும்பையின் புதிய மாதவியும்
புகாரியின் நூலை வெளியிடவே (உலகம்)

பலபல நகரின் நண்பர்களும்
பலவித வாழ்த்துக்கள் வழங்கிடவே
மனம் நிறை நெகிழ்வுடன் அதைஏற்று
விழிநீர் வழிந்திட மகிழ்ந்து நின்றோம் (உலகம்)

மதுமிதா

 
 

'எழில் நிலா'வின் சிறப்புப்பக்கம்